districts

img

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

திருவள்ளூர்,செப்.27- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. புதனன்று  காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடியில் 2860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2237 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.