districts

குடி தண்ணீர் குழாய் உடைந்து கழிவு நீர் கலப்பு

சென்னை, ஜூலை 11-

     சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொளத்தூர் தொகுதியில் சுமார் ரூ.120 கோடி மதிப்பில் 70 கிலோ மீட்டர்  தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     இதில் 80  விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கொளத்தூர் திருமுருகன் நகர், டீச்சர்ஸ் கில்ட் காலனி, வி.வி. நகர் பூம்புகார் நகர்,  ஜெயராம் நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட  பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நிறை வடையாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வாகன ஓட்டிகளையும், அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் கால்வாய்க்கு தோண்டப் பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொளத்தூர் மூகாம்பிகை கோவில் மெயின் ரோட்டில்  கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்  வாயில் கழிவுநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது. பூம்புகார் நகர், வி.வி. நகர் பகுதியில் கால்வாய்க்கு பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு  ஏற்பட்டு கழிவு நீர் கலந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து தோண்டப்பட்ட இடங்க ளில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.