வேலூர். ஏப்.5 - வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட செஞ்சி, பனமடங்கி, கீழ்முட்டுக்கூர் ஆலங்கனேரி, சோழமூர், அன்னங்குடி வஞ்சூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். இதில் கே.வி.குப்பம் ஒன்றிய பெருந் தலைவர் லோ.ரவிச்சந்திரன், கே.வி.குப்பம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் பெ.சீதாராமன் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக செஞ்சியில் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு சிபிஎம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிபிஎம் காட்பாடி வட்ட செயலாளர் ஆர்.சுடரொளியன், வட்ட நிர்வாகிகள் கோபால.ராசேந்திரன், சங்கர் ஜாப்ராபேட்டை கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்பளித்தனர். வாக்கு சேகரித்து அவர் பேசுகையில் கவசம்பட்டு இறைவன்காடு பாலாற்றின் இடையே தடுப்பணை கட்டி தண்ணீர் சேமிக்க அப்பகுதியில் நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும், திருமணி மேல்மொணவூர் கிராமங்களுக்கிடையே பாலாற்றை கடந்து வேலூருக்கு எளிதாக செல்ல தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லத்தேரியில் ரயில் பாதையை கடக்கும் பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும், நீண்ட நேரம் காத்திருப்பதை போக்கும் வகையில் ரயில் பாதையின் கீழே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.