districts

img

தொட்டு விடும் தூரத்தில் மரணம்

கிருஷ்ணகிரி,டிச 22- ராமநாயக்கன் ஏரிக்கரை ஓரம் உள்வட்ட சாலை ஓரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் மின் கம்பிகள் செல்வதை உடனடியாக மாற்றிட கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மாநகராட்சியில் சாந்தி நகரின் தொடர்ச்சியான மேற்கு பகுதியில் ராமராயக்கன் ஏரியின் கரையில் ஓசூர் உள்வட்ட சாலை செல்கிறது இச்சாலை இப்போது நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சாலையின் ஓரத்தில் பாலத்தை ஒட்டி பத்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இதன் மின் கம்பிகள் கைக்கெட்டும் தூரத்தில் சாலையின் ஓரம் மிக அருகில் செல்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் சென்ற மத்திகிரி பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் மின்கம்பியில் கை பட்டதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.    இந்த சம்பவம் மின்வாரியத்திற்கும் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை கை தொடும் தூரத்தில் மிக அருகில் உள்ள மின் கம்பங்களையும், மின கம்பிகளையும் மாற்றுவதற்கு மின் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் உயிரிழப்புகள், ஏற்படுவதற்கு முன்பு தூரமாக உயரமாக மின் கம்பங்களை மாற்றிட வேண்டும் என்று வாலிபர் சங்க வட்டச் செயலாளர் நாகேஷ் பாபு, சாந்தி நகர்  வாலிபர் சங்க கிளைச் செயலாளர் மஞ்சுநாத் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;