districts

சென்னை முக்கிய செய்திகள்

ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்- போலீசார் தீவிர விசாரணை

சென்னை, மே 30- பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் கைதான ராஜகோபாலன் ஜுன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவிகளின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

விளம்பரம் தொடர்பாக ஏஎஸ்சிஐ இறுதி வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை, மே 30- விளம்பரம் தொடர்பாக இந்திய விளம்பரத் தரக் கட்டுப்பாட்டுக் குழு (ஏஎஸ்சிஐ) இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடக்கத்தில் பிப்ரவரியில் வெளியான நிலையில், செல்வாக்குமிக்கோர், சந்தையாளர்கள், முகவர்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துக்கள் கோரப்பட்டன. ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செல்வாக்குள்ளவர்களின் கருத்துக்களைப் பெறவும்,   பிக் பேங்க் சோஷியல் அமைப்புடன் ஏஎஸ்சிஐ ஒப்பந்தம் செய்து கொண்டது. 2021 ஜூன் 14 அன்று அல்லது அதற்குப் பின்னர் வெளியாகும் வர்த்தகச் செய்திகள் அல்லது விளம்பரங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும். பதிவேற்றும் விளம்பரங்களுக்கு  அடையாளக் குறியீட்டைப் பதிப்பதை வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக்கி உள்ளது.   இதுகுறித்து ஏஎஸ்சிஐ தலைவர் சுபாஷ் காமத் கூறுகையில் ‘நுகர்வோர்,  முகவர்கள், விளம்பரதாரர்கள், தொடர்புடையோர்  நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிடட்டுள்ளோம்  என்றார்.

ரேஷன் கடையில் 7.36 லட்சம் நிவாரண பணத்தை திருடியவன் கைது

சென்னை, மே 30- பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில் முதற்கட்டமாக ரூ. 2 ஆயிரம் பொதுமக்களுக்கு மே இரண்டாவது வாரத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. சென்னை, சைதாப்பேட்டை காவிரி நகர், 1ஆவது தெருவில் ஒரே கட்டடத்தில் உள்ள  இரண்டு ரேஷ்ன் கடைகளில் கடந்த 16ஆம் தேதி பணி நேரம் முடிந்து, ஊழியர்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். அன்று இரவு அந்தக் கடைகளின் கதவு பூட்டை உடைத்து, அங்கு பணப்பெட்டியில் வைத்துச் சென்ற ரூ. 7.36 லட்சம் திருடப்பட்டது. இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது சின்ன காஞ்சிபுரம் வேங்கை வீதி தெருவைச் சேர்ந்த கோபி (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை ஞாயிற்றுக்கிழமை (மே 30) கைது செய்தனர். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான அவர், தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பதும், அவர் மீது ஏற்கெனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை
 

 



 

;