districts

கலை போட்டிகள்: இளைஞர்களுக்கு அழைப்பு

விழுப்புரம்,ஏப்.20- கலை பண்பாட்டு துறை சார்பில் நடக்கும் கலை போட்டிகளில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- கலை துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து, ஊக்கப்படுத்த  17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படுகிறது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம மற்றும் ஓவியம் ஆகிய 5 கலைப் பிரிவுகளில் விழுப்புரம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி (நகராட்சி விளையாட்டுத் திடல் வளாகம்) யில் 23.4.2022 நடைபெறுகிறது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.  தனிநபராக குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளார்நெட், போன்ற கருவி இசைப் போட்டியிலும் 5 வர்ணங்கள் ராகம், சுரத்துடன் 5 தமிழ்ப்பாடல்கள் இசைக்கும், தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.  

தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்றலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம். காளையாட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத்தாள்கள் வழங்கப்படும்.  அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக பெறலாம். அல்லது கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாகூர் மண்டலத்தின் 04362232252 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.