கோவை, டிச.21- கோவையில் மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமியின் மறைவை யொட்டி அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி னின் சகோதரர் மு.க.தமிழரசு. இவரது மனைவி மோகனா தமிழரசு. இவரது தாயாரான அந்தியூர் ஜெயவிலாஸ் ராஜமாணிக்கத்தின் மனைவி ஆர்.ஜெயலட்சுமி (80), உடல்நலக்குறைவு காரணமாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திங்களன்று மாலை ஜெயலட்சுமி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வந்தார். அவருடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வரின் சகோதரி செல்வி ஆகியோரும் வந்திருந்தனர். பின்னர் கார் மூலம் வடவள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து வடவள்ளி பொம்மனாம்பாளையம் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. தமிழக முதல்வரின் வருகை காரணமாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.