கிருஷ்ணகிரி, ஜூன் 6- சூளகிரி வட்டத்தில் அரசால் மாற்று இடம் கொடுக்கப்பட்டவர்க ளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் பட்டா வழங்க நிலவகை மாற்றம் செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 7 வது மாநாடு சூளகிரியில் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலத்தை ராஜாரெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்திற்கு எம்.எம்.ராஜூ தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் டி.ரவீந்திரன், விவ சாயிகள் சங்க மாநில செயலாளர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர் ஆகியோர் பேசினர். பின்னர் தோழர் கே.வரதராஜன் அரங்கில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் மூத்த தோழர் முனுசாமி கொடியேற்றினார். சபாபதி தலைமை தாங்கினார். டி ரவீந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் இருதயராஜ், நிர்வாகி கள் முனியப்பா, ஜெய்சங்கர், சத்திய நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு இடம் கொடுத்தவர்களுக்கும், சூளகிரி வட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வனப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்கள் வீடுகளுக்கும் பட்டா வழங்க தமிழக அரசு நிலவகை மாற்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். சூளகிரி வட்டத்தில் சிப்காட் கெயில் பாரத் பெட்ரோலியம் குழாய் பதிப்பு என 1,00000 ஏக்கர் நல்ல விளைநிலங்களை நாசமாக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எம். முருகேஷ், செயலாளராக சி.பிரகாஷ், பொருளாளராக எம்எம். ராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.