districts

img

மருங்கூர் கிராமம் மற்றொரு கீழடி ஆகுமா? அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று துவக்கம்

கடலூர், ஜூன்17- ரோமானியர்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த பண்ருட்டி நகரத்தில் கீழடிக்கு இணையான அகழ்வாராய்ச்சியை முதலமைச்சர் செவ்வாயன்று (ஜூன்18) காணொலி காட்சி மூலம் துவங்கி வைக்கிறார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ராமலிங்கம் என்பவரது விவசாய நிலத்தில் சாலை விரிவாக்கத்தின்போது இரண்டு இடங்களில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருள்கள் கிடைக்கப் பெற்றன. மேற்கண்ட இடங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், சிவா உள்ளிட்டோர் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டனர். 

அந்தப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய கருங்கல் அம்மி உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தது. மேலும் இந்தப் பகுதியில் ரோமானியர்களுடன் வர்த்தகத்தில் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தது. மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் கிடைத்த வண்ணம் இருந்ததால்  தொடர்ந்து, மருங்கூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில், மருங்கூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி, அகழாய்வு மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது.  இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மருங்கூர் கிராமத்தில் அகழ்வாய்வுப் பணிகளை செவ்வாயன்று (ஜூன்18) தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 50 சென்ட் நிலப்பரப்பில் இந்த அகழ்வாராய்வு பணி கீழடிக்கு இணையாக துவங்க உள்ளது. பணிகள் துவங்கிய பிறகு அடுத்தடுத்து அங்கு எந்த மாதிரியான வரலாற்று பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரியவரும்.