அரியலூர், அக்.1- கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப் பட்ட அகழ்வாராய்ச்சி பணி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்ததால், பணிகள் நிறுத்தப் பட்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழ புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ராஜேந்திர சோழன் மாளிகை மேட்டில் மாபெரும் அரண்மனைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அவரது ஆட்சிக்குப் பின்னர் மாளிகை மேடு மண் மேடுகளால் மூடப்பட்டு காணா மல் போனது. அதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1986 - 1996 வரை நான்கு கட்டமாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட போது, மாளிகையின் செங்கற்களாலான சுற்றுச்சுவர்கள் கிடைக்கப் பெற்றன. மேலும் பல்வேறு அரிய பொருட்களும் கிடைக்கப் பெற்றன. அதன் பிறகு 11.2.2022 அன்று தமிழக முதல்வரால் மீண்டும் மாளிகைமேட்டில் 2 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி துவக்கி வைக்கப்பட்டது. மாளிகை மேடு பகுதியில் ஏற்கனவே ஆராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் அருகே 15 மீட்டர் தூரத்தில் 10 x 10 அளவிலான குழிகள் தோண்டப்பட்டு, சுமார் 50 பணியாளர்களைக் கொண்டு கொக்கி, களை வெட்டிகளால் பாதுகாப்பான முறை யில் தோண்டப்பட்டன. இதில் சோழர் காலத்திய அரண்மனை யில், எஞ்சிய செங்கற்களால் ஆன இரண்டு அடுக்கு சுவர்கள் கொண்ட பகுதி வெளிக் கொணரப்பட்டது.
அதுமட்டுமின்றி தங்கத்தால் ஆன காப்பு மற்றும் மனித உருவம் கொண்ட பொருள், நாணயங்கள், இரும்பாலான ஆணிகள், சீன மண்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், செம்பி லான பொருட்கள் போன்றவை கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த அகழாய்வு பணியானது பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டு செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் வெள்ளிக்கிழமையுடன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தொடர்ந்து ஆவணப்படுத் தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட அகழாய்வின்போது கிடைக்கப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் பொது மக்கள் பார்வைக்கு வைத்தால் சிறப்பாக இருக்கும். தற்போது தோண்டப்பட்டுள்ள பகுதிகள் தார்ப்பாய்களைக் கொண்டு மூடப்பட்டு, சுற்றி மணல்கள் கொட்டி வைக் கப்பட்டுள்ளன. எதிர்வரும் மழைக் காலங் களில் தார்ப்பாய்கள் பாதுகாப்பாக இருக் காது எனவும், அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி பணி துவங்குவதற்கு முன்பு தற்பொழுது தோண்டப்பட்ட பகுதிகளில் மேற்கூரைகள் அமைத்து பாதுகாத்தால், இதுவரை செய்த பணிகள் வீணாகாமல் இருக்கும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.