செவிலியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாத விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை; ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களுக்கும் உரிய ஊதியத்தை வழங்காமல், தமிழ்நாடு அரசு அலைக்கழிக்கிறது என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “ஒரு வேலை செய்து விட்டு அதற்கான உரிய ஊதியத்தை எதிர்பார்க்கும் போது, அதை அரசு வழங்காமல் இருப்பது எப்படி?” என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். ஒன்றிய அரசிடம் உரிய நிதி கிடைக்காததால் ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பிரச்சனை குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.