உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு 2019 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த வாரம் தில்லி உயர்நீதிமன்றம் குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து அவரருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, செங்காருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செங்கார் சிறையிலிருந்து வெளியே விடப்படக்கூடாது என தெளிவுபடுத்தியது.
பொதுவாக ஜாமீன் அல்லது விடுதலை உத்தரவுகள் இடைநிறுத்தப்படுவதில்லை என்றாலும், தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இவ்வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
