குழந்தை கடத்தல் வழக்குகள் விசாரிணைக்கு ஏதுவாக தனி ஆன்லைன் போர்ட்டலை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள் காணாமல் போகும் வழக்குகள், பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி, குரியா சுயம் சேவி சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் கடத்தப்பட்ட சிறுவர், சிறுமிகள் ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பான 5 வழக்குகள் குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை; இதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்று அழுத்தமாக தெரிவித்தது.
இதை தொடர்ந்து, காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும், குழந்தை கடத்தல் வழக்குகளை விசாரிக்கவும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு ஆன்லைன் போர்ட்டலை உருவாக்குமாறு உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.