court

img

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை!

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரத்தில் மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூச்சிவாக்கம் பகுதியில் பேக்கரி ஒன்றில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பான புகார் மீது ஒருமாத காலமாக நடவடிக்கை எடுக்காததாக கூறி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின்படி கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார். இதை தொடந்து அவர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி.யை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன், நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும்; இந்த நடைமுறையை பின்பற்றாததால், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது..

மேலும், டி.எஸ்.பி கைது உத்தரவு முன்விரோதம் காரணமாக அரங்கேற்றப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார் என்பது விஜிலென்ஸ் பதிவாளரின் விசாரணையில் உறுதியானது. இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக குழு மற்றும் நீதிபதிகள் பணியிட மாற்ற குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.