court

img

நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டபோது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உண்மையை அறிய அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார். இது தொடர்பான அறிக்கை கடந்த மே 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடமிருந்து பெறப்பட்ட பதிலுடன் குழுவின் அறிக்கையையும் சேர்த்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு  அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார். இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்று தெரிவித்துள்ளது.