court

img

தமிழ்நாடு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும்.... உச்சநீதிமன்றம் தீர்ப்பு-எதிரான மனுக்கள் தள்ளுபடி...

புதுதில்லி:
 தமிழ்நாடு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை ஒன்றிய அரசு  2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தப் புதிய சட்டத்திலிருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 2015 ஆம்ஆண்டு தமிழ்நாடு அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இதற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசுத் தரப்பில்உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015-ஐ உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்றும்,ஏற்கெனவே மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடக்க அனுமதி வழங்கப்படுகிறது என்றும் 2019ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழ்நாடு அரசு, நில ஊர்ஜித -2019 என்ற புதிய சட்டம் என குறிப்பிட்டு மீண்டும் மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறுகையில்,  இந்த வழக்கில் ரிட் மனுதாரர்கள் விவசாயிகள் என்ற பெயரில், மாநில அரசு தங்களை சுரண்டி வருவதாகக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.ஒன்றிய அரசின் கையகப்படுத்தும் சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களுக்கு நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு, வெளிப்படைத் தன்மை, மறு குடியமர்வு உள்ளிட்ட வை தமிழ்நாடு அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்தில் இல்லை. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த திட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும் என்று ரிட் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில் அனைத்து வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து அனைத்துத் தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் ஜூன் 29 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசு 2019ல் கொண்டு வந்த நில ஆர்ஜித சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து, திருவள்ளூரை சேர்ந்த 55 விவசாயிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.