புதுதில்லி:
மராத்தா சமூகத்தினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் அளிக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியபிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே, 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை எட்டியுள்ள நிலையில், கூடுதல் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுவிசாரித்தது. இந்த வழக்கில் புதனன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இடஒதுக்கீடு தர வேண்டிய அளவு கல்வியிலோ, சமூகத்திலோ மராத்தா சமூகத்தினர் பின்தங்கி இல்லை என்று மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின் படி, சமூக பொருளாதார பின் தங்கிய பிரிவில் எந்த ஒரு சாதியையும் மாநில அரசுகள் இணைக்க முடியாது எனவும் மாநில அரசுகள் அடையாளம் கண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.