court

img

ஊரடங்கால் பாதிப்பு.... புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுத்திடுக... மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமைத்த உணவையோ அல்லது உணவுப் பொருட்களையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பொதுமக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது.  அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஊடங்கு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் உழன்று வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களையோ அல்லது சமைத்த உணவுகளையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல, நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணியை மத்திய, மாநில அரசுகள் விரைந்து முடிக்க வேண்டும். அப்பொழுது தான், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள்புலம்பெயர்ந்த அல்லது அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு நேரடியாக கிடைக்கப் பெறுவதை நம்மால் உறுதி செய்ய முடியும். 

அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய தரவுத் தளத்தை (டேட்டா பேஸ்) உருவாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்டிருந்தது.இந்தப் பணி தற்போது எந்தளவில் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.ஆக்சிஜன் சிலிண்டர்களின் விநியோகத்தை கண்காணிப்பது போல, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்கள் அனைவரையும் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.