உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே ஓய்வு பெற்று புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் கடந்த 4 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து மிகவும் துணிச்சலாக தனது விமர்சனப் பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளின் உச்சநீதிமன்றசெயல்பாடுகளில் நான்கு ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவரின் செயல்பாடுகள் முன்னெப்போதுமில்லாத வீழ்ச்சியைக் கண்டன. நீதிபரிபாலனத்தை சுதந்திரமான முறையில் காப்பாற்றுவதற்குபதிலாக உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் கருவியாக மாற்றப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு முன்பாகஅயோத்தியா மற்றும் ரபேல் விமான வழக்குகளை கையாண்டவிதம் கேள்விக்குரியதாக இருந்தது. எஸ். ஏ.பாப்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு நீதிமன்றத்தின் தனித்தன்மை அரசு நிர்வாகத்திடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு சீர் செய்யப்படும் என நம்பிக் கொண்டிருந்தோம்.
அனைத்திலும் தோல்வி
ஆனால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக கடந்த 18 மாத கால அவரது செயல்பாடுகள் நீதிமன்ற நிர்வாகம், வழக்குகளை நீதிபதிகளுக்கு பகிர்ந்தளிப்பது, சிவில் உரிமைகளை பாதுகாப்பது, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பது, அரசு நிர்வாகத்தின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை தடுத்து நிறுத்துவது என அனைத்து விஷயங்களிலும் தோல்வி அடைந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 2019 நவம்பரில் இவரது பதவிக்காலம் ஆரம்பமானது .அந்த நேரத்தில் அரசியலமைப்பு சட்ட 370ஆவது பிரிவை செயலற்றதாக ஆக்குவது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்கள் ஆக மாற்றுவது உள்ளிட்ட பிரச்சனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. குடியுரிமை திருத்த சட்டம் சம்பந்தமான போராட்டத்தில் நாடு முழுவதும் கிளர்ச்சி வெடித்தன. ஜாமியா மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமான வழக்குகளும் விசாரிக்கப் படாமல் இருந்தன.
இந்த நேரத்தில்தான் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக உச்சநீதிமன்றமும் செயல்படாமல் முடங்கிப் போனது.இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.இந்தியாவின் சக்திவாய்ந்த உச்சநீதிமன்றம் இத்தகையசவால்களை எதிர்கொண்டு சரியான முறையில் செயல்பட்டு இருக்க வேண்டும். தனது சுதந்திரமான நடவடிக்கைமூலம் தனது வல்லமையை நிரூபித்து இருக்கவேண்டும். இதன்மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தலைமைப் பாத்திரத்தின் மேன்மையை வெளிப் படுத்தி இருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு.
மௌனம்... முடக்கம்...
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை பறித்தபோது ஏற்பட்ட பின்விளைவுகள் அதற்கு எதிரான வழக்குகள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள்ஆகியவற்றில் தனது பதவிக்காலம் முழுவதும் எதுவும் கூறாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மௌனமாக இருந்தார். நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையாகத் திகழும் தேர்தல் பத்திர வழக்கிலும் எந்தக் கருத்தும் கூறாமல் இந்த வழக்கை முடக்கி வைத்தார். நீண்ட காலம் கழித்து இது பல்லாண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் நடைமுறைதான் என்று கூறப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் சம்பந்தமான வழக்கிலும்அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச சட்ட நடைமுறைகள் பற்றிய எவ்வித விசயங்களையும் கருத்தில் கொள்ளாமல் மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலைகள் பற்றி எவ்வித கவலையும் இன்றி இந்த உச்ச நீதிமன்றம் செயலாற்றியது. ஏராளமான ஹேபியஸ் கார்பஸ் வழக்குகள் மாதக்கணக்கில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இறுதியாக அவை அனைத்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டோ அல்லது உயர் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் மாற்றப்பட்டோ இந்த வழக்குகள் முடிக்கப்பட்டன.
மனிதாபிமானமற்ற தன்மையை வெளிச்சம் போட்ட தீர்ப்பு
ஒரு காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரத்துடன் பொதுப் போக்குவரத்து வசதி கூட இல்லாமல் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து சென்றபோது அவர்களுக்கு உணவு, கூலி மற்றும்போக்குவரத்து வசதி செய்து தருவது பற்றிய வழக்கினை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் கடைசியில் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் போது பணம் எதற்கு தரவேண்டும் என்று கூறியது. ஏழை மக்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பால் இந்த உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டியது.கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஹத்ராஸ்பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு சம்பந்தமான விவரங்களை சேகரித்தபோது உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் உரிய முறையில் தலையிட மறுத்து வழக்கை விசாரிக்காமல் நீட்டித்து வருவது எவ்வகையான நீதிபரிபாலனம் என்று தெரியவில்லை.
அதிர்ச்சியில் ஆழ்த்திய தீர்ப்பு
மத்திய அரசு கொண்டு வந்த விவசாயசட்ட திருத்தத்தை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தின் போது கண்துடைப்பு வேலையாக இந்த சட்டத்தை ஆதரிக்கக் கூடிய நபர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த பிரச்சனையை ஆய்வுசெய்து பேச்சுவார்த்தை மூலம்முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பிரச்சனைகளிலும் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்திக்கொண்டு வருகின்ற நிலையில் நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் என்று கூற துணிவில்லாத ஒரு நிலையை பார்க்க முடிகிறது. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி நிலம் வாங்கிய பிரச்சனையில் ஊழல் இருப்பதாக ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு அந்தப் பிரச்சனைஎடுத்துச் செல்லப்பட்ட போதும் கூட அவர் மீது என்னநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரையிலும் தெரியவில்லை.
ஒன்றே ஒன்று...
உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தனது பதவி காலத்தில் ஒரே ஒரு வழக்கில் தான் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது மேற்கு வங்கத்தில் பொதுத் திட்டங்களுக்காக மரங்களை வெட்டும் போது அந்த மரங்களின் மதிப்பை நிர்ணயிக்க ஒரு நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டார் என்பதுதான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் பதவி வகித்த காலம் முழுவதும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய வழக்குகளில் அமைதிகாத்தும் , அரசு நிர்வாகம் தான் நினைத்தபடி செயல்பட அனுமதித்தும், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளிக்காமல் காலம்தாழ்த்தியும், இந்திய ஏழை மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகளில் எவ்வித நிவாரணம் அளிக்க முன்வராமல்இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.
கடந்த காலத்தில் உலக நீதிமன்றங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இந்திய உச்ச நீதிமன்றம் தற்போது ஏன்இப்படி மாறியது என்பதை சுய பரிசீலனை செய்திட வேண்டும். வரும் காலங்களில் உச்சநீதிமன்றம் தனது தனித்தன்மையை பாதுகாத்து கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் ,மனித உரிமைகளையும் கௌரவத்தையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என்று விரிவாக விவரித்துள்ளார். இதைவிட துணிச்சலாக உச்சநீதிமன்ற நீதிபதியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.பிஜேபி ஆட்சி காலத்தில் நீதிமன்றங்கள் எத்தகைய நிலைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளன என்பதை இக்கட்டுரையின் வாயிலாக உணர முடிகிறது.
கட்டுரையாளர் : க.உதயகுமார்
ஏப்ரல் 23
தி இந்து (ஆங்கிலம்) ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழ் சுருக்கம் இது)