மதுரை:
தமிழக எம். பி.க்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய ரிசர்வ் படையின் குரூப் “பி” மற்றும் குரூப் “சி” பிரிவுகளைச் சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 20.12.2020 அன்று நடைபெறும் என்று வெளியிடப்பட்டிருந்த நியமன அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை.
இது தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும்; குறிப்பாக இன்றைய கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சனைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாகவும் மாறுமென்று நான் உள்துறை அமைச்சகத்திற்கும், சி.ஆர்.பி.எப். பொது இயக்குனருக்கும் 09.10.2020 அன்று கடிதம் எழுதியிருந்தேன். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்தபட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு கோரியிருந்தேன். விண்ணப்ப நிலையிலேயே தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுவது, மையங்கள் இல்லாத பகுதிகளை சார்ந்தவர்களின் முனைப்பை பாதித்திருக்க கூடுமென்பதால் புதிய மையங்களை அறிவித்து விண்ணப்ப தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தேன். இதற்கான கடிதங்களை எதிர் மனுதாரர்களான உள்துறை இணை அமைச்சகத்திற்கும், மூன்றாவது எதிர் மனுதாரரான சி.ஆர்.பி.எப் பொது இயக்குனருக்கும் அனுப்பியிருந்தேன்.
அக் கடிதத்திற்கு 19.10.2020 தேதியிட்ட பதிலில், சி.ஆர்.பி.எப்.பின் டி.ஐ.ஜி.பி (ரெக்ரூட்மெண்ட்) மனோஜ் தியானி, 2020- துணை மருத்துவப் பணி நியமனங்கள் தொடர்பாக வரப் பெற்றுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறோம். இப் பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுமென்பதைத் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் மையங்களை முன் கூட்டி அறிவித்து விண்ணப்பங்களை வரவேற்காவிட்டால் இன்றைய கோவிட் 19 சூழலில் தமிழகம், புதுச்சேரியை சார்ந்தவர்கள் விண்ணப்பம் அளிப்பதையே பாதிக்கும் என்ற பிரச்சனைக்கு அதில் தீர்வு தரப்படவில்லை.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயிடமிருந்து 09.11.2020 தேதியிட்ட பதில் கடிதம் வந்தது. அக் கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து நான் உள்துறை இணை அமைச்சகத்திற்கு 19.11.2020 அன்று எழுதிய கடிதத்திற்கு இது வரை பதில் இல்லை. இந்திக் கடிதம் திரும்பப் பெறப்படவோ, அப் பதிலின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ முனையவில்லை. இது போன்று தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது. அவர்கள் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்கிற ஜனநாயக அமைப்பின் நெறிகளைக் கருத்தில் கொள்ளாத நடைமுறையாகும் இது. பெரும் எண்ணிக்கையிலான தமிழக மக்களால் மத்திய அரசுக்கு தங்கள் குறைகளை முறையிட்டு எழுதப்படும் கடிதங்களுக்கும் இவ்வாறு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியிருக்கிற உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.
சட்ட நடைமுறைகள் மீறல்
1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 இன் படி இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, அக் குறிப்பிட்ட மாநிலம் இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத பட்சத்தில், ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு இந்தியை அலுவல் மொழியாக ஏற்க இயலாது என்று எப்போதுமே உறுதியாக எதிர்த்து வந்துள்ள மாநிலம் ஆகும். இன்றுவரை இந்தி அலுவல் மொழியாக ஏற்கப்படவுமில்லை. தமிழையும், ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாக ஏற்று அதிகாரப் பூர்வமாக சட்டமும் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகள், அறிவார்ந்த பெருமக்கள், சிந்தனையாளர்கள், மக்கள் திரள் அனைவரும் இம் மொழிக் கொள்கையின் பால் ஒன்றுபட்டு உற்தியாக நிற்கின்றனர்.
அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 (5) மத்திய அரசின் அலுவல் தேவைகளுக்கும், நாடாளுமன்றத்தின் பயன்பாடுகளுக்கும் ஆங்கிலம் தொடர்வது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன் துணைப் பிரிவு (1) அம்சம் (அ) மற்றும் துணைப் பிரிவுகள் (2), (3) மற்றும் (4) ஆகியன இந்தியை ஏற்காத மாநிலங்களுக்கு பொருந்தாது எனவும், ஆங்கிலத்தை தொடர வேண்டாம் என அம் மாநிலங்கள் தத்தம் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றி அத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்படும் வரையிலும் அப் பிரிவுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் கூறுகிறது. ஆகவே இந்தியை ஏற்று ஆங்கிலத்தை தொடர்வதில்லை என்று முடிவு செய்யாத நிலையில் மாநிலங்களுக்கான தகவல் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும் என்பதே சட்டபூர்வமானது. அலுவல் மொழி விதிகள் 1976 ன் விதி 1 (ii), அவ்விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சட்டப் பிரிவு 226
இதற்கு நான் எழுதிய 19.11.2020 கடிதத்திற்கும் எந்த பதிலும் இல்லாத நிலையில் அரசியல் சட்டப் பிரிவு 226 இன் கீழ் மாண்பமை உயர் நீதிமன்றத்தை நாடுவது தவிர வேறு வழியில்லை.
ஆகவே நான் கீழ்க் காணும் இடைக்கால ஆணைகளை மாண்பமை உயர் நீதி மன்றம் பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிற காலத்தில் தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக் கூடாது என்றும், 09.11.2020 தேதியிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சரின் கடிதத்தின் ஆங்கில வடிவம் உடனே வழங்கப்பட வேண்டுமென்றும், தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென்றும், அலுவல் விதி முறைகளை மீறுகிற அரசு அதிகாரிகள் மீது மாண்பமை நீதிமன்றம் கருதுகிற பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், உரிய நீதியை வழங்கிட வேண்டும்.இவ்வாறு சு.வெங்கடேசன் மனுவில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நவம்பர் 27 வெள்ளியன்று மாலை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், கண்ணன் ஆகியோர் சு. வெங்கடேசன் சார்பில் ஆஜராகினர். இந்த மனு தொடர்பாக எதிர் மனுதாரர் (மத்திய அரசு) டிசம்பர் 4 அன்று பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர்.