court

img

முந்திரி விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடலூரில் விவசாய நிலங்களிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கொடுக்கம்பாளையத்தில் காலணி ஆலைக்கு நிலம் எடுப்பதற்காக மலையடி குப்பம் பகுதியில் 200 ஆண்டுகளாக முந்திரி விவசாயம் செய்துவரும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.
இதனை எதிர்த்து ஏற்கனவே விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனால் வழக்கு நிலுவையில் உள்ள போதே மீண்டும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகக் கிராம மக்கள் 3 நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மேலும் இன்று ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கினை இன்று அவசர வழக்காக விசாரிக்க விவசாயிகள் தொடுத்திருந்த மனு மீதான விசாரணையில் அப்பகுதியில் காலணி ஆலைக்கு நிலம் எடுக்கவும், விவசாய நிலங்களிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் முடிவெடுக்கும் வரை விவசாயிகளை வெளியேற்றக்கூடாது, விவசாயிகளுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.