cinema

img

திரைக்கதிர் சோழ. நாகராஜன்

பொங்கல் போட்டியில்  ஐஸ்வர்யா ரஜினி காந்தின்  
‘லால் சலாம்’ இல்லை...

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் லால் சலாம். அது அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியது. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும்  கதாபாத்திரத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள லால் சலாம் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் பொங்கலுக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. லைகா நிறுவனத்தின் ‘மிஷன் சாப்டர்’ படம்  பொங்கலுக்கு வெளியாக வுள்ளதால் லால் சலாம் பட த்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு, பிப்ரவரி 9-அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

கன்னட நடிகர்  யாஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

கர்நாடகத்தில் தனது பிறந்த நாளுக்கு டிஜிட்டல் பேனர் வைக்கும் போது, உயிரிழந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற நடிகர் யாஷ் அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாக வும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரசிகர்கள் என்னை முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள். அதுவே எனக்குப் போதுமானது. இதுபோன்ற துயரமான சம்பவங்கள் என்னுடைய சொந்தப் பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன. உங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது. உங்களுடைய அன்பை தயவுசெய்து இந்த வழியில் காட்டாதீர்கள். என்னைப் போலவே என்னுடைய ரசிகர்களும் வாழ்க்கையில் வளரவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்களு டைய வாழ்க்கையை உங்களுக்காகவே மட்டும் அர்ப்பணித்து பணியாற்றுங்கள். நீங்கள்தான் உங்கள் குடும்பத்தினருக்கு அனைத்துமே. அவர்களை பெருமைப் படுத்தும் குறிக்கோளை மனதில் வையுங்கள்!” என்று வேண்டுகோள் விடுத்தார். 

“இங்கே இந்தி படிப்பதை யாரும்  தடுக்கவில்லை!”  விஜய் சேதுபதி!

விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இது ஜனவரி 12 அன்று  திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது:  “96 படம் பார்த்துவிட்டு இயக்குநர் மெசேஜ் அனுப்பினார்.

அதன்பின் இருவரும் அரை  மணிநேரம் பேசினோம். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர்  என்னிடம், “ராம்கோபால் வர்மாவின் உதவி  இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் இயக்கி யிருக்கிறார்” - எனக் கூறினார். அவரின் அந்த  முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது. அப்போது இவரிடம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசைபிறந்தது.

என்னிடம் அவர் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையைச்  சொன்னார். அது பிடித்திருந்தது. நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர் ஸ்ரீராம் ராகவன். நம்மை அவர் எப்படி வேலை வாங்குவார் என்பதே  தெரியாது. அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்.  கத்ரீனா கைஃபை நேரில் பார்த்து எனக்கு ஒரு வியப்பு. நம்மைவிட சீனியர் என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால், அவரிடம் எந்தத் தலைக்கணமும் இல்லை. அவருடன் பணியாற்றியது மிகவும் நிறைவாக இருந்தது. ஃபர்சியில் நடிக்கும்போது “இந்தி கடினமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.” - என்றார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, “ஆமிர்கான் வந்தபோதுகூட இந்தி தொடர்பான கேள்வியைக்  கேட்டீர்கள். அது எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. இப்போது என்னிடமும் கேட்கிறீர்கள். தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை.

இந்தியைத் திணிக்கக் கூடாது என்றுதான் சொன்னார்கள். உங்களின் கேள்வியே தவறானது. இங்கே இந்தி படித்துக்கொண்டுதான் இருக்  கிறார்கள். யாரும் தடுக்கவில்லை!”  - என்றார்.

பெட்டகம்

நவராத்திரிக்கு அவகாசம் கேட்ட சிவாஜி... 

ஏ.பி. நாகராஜன் தமிழ் சினிமாவின் முன்னோடிகளின் முன்வரிசையைச் சேர்ந்தவர் என்பது நாம் அறியாததல்ல. அவருக்கும் ஒருசமயம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு உதவப்போய் அதனாலேயே அவர் சிரமத்திற்கு உள்ளானதாகக் கூறுவர். தனது பிளைமவுத் காரிலும் தனது பெயரின் முன்னெழுத்துக்களான ஏ.பி.என். என்பது வரவேண்டும் என்று கருதி ஆந்திராவில் போய்  அதனைப் பதிவு செய்துகொண்டு வந்தவர்  அவர். அதனாலேயே அதன் நம்பர்  பிளேட் ஏபிஎன் என்றுதான் எண்ணிட்டி ருக்கும்.

அந்த நெருக்கடிச் சூழலில் அந்தக் காரையும் கடன்காரர்கள் ஓட்டிச்சென்றுவிட்ட நிலை.  ஓரிரு ஆண்டுகளை ஓய்வில் கழித்தார். அப்போது அந்த நெருக்கடி யிலிருந்த மீள வழியை யோசித்தார் ஏ.பி.என். அப்போதுதான் நவராத்திரி பட  உருவாக்கச் சிந்தனை பிறந்தது. திரைக்கதை யை எழுதி, சொந்தமாகவே அதனை எடுக்க முடிவு செய்தார். கவியரசு கண்ணதாசனிடம் போனார். அவர் அப்போதெல்லாம் எல்லாப்பாடல்களுக்கும் மொத்தமாக சன்மானத்தைப் பெற்றுக்கொண்டே பாடல்களை எழுதிவந்தார். ஆனால், நாகராஜன் சிரமத்திலிருந்ததால் முன்பணமாக 3 ஆயிரத்தை மட்டும் தந்தார்.

படம் வெளிவந்தபின் மீதித்தொகையைத் தருவ தாகச் சொன்னார். நவராத்திரியின் எல்லாப் பாடல்களை யும் எழுதித்தந்தார் கண்ணதாசன். பாடல்கள் மிகப்பெரும் வெற்றிபெற்றன என்று சொல்லத்தேவையில்லை.  நாயகனாக நடிக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசனை அணுகினார் ஏ.பி.என். ஒன்பது வேடங்கள் என்றபோது சிவாஜிக்கே சற்று மலைப்பு. உடனடியாகப் படப்பிடிப்பு க்குப் போகக்கூடாது என்றார்.

கொஞ்சநாட்கள் அவகாசம் வேண்டும் என்றார் சிவாஜி. ஏ.பி.நாகராஜனுக்குப் புரியவில்லை. தன் நெருக்கடியையும் அவசரத்தையும் புரிந்துகொள்ளாமல் இப்படிச் சொல்கிறாரே சிவாஜி என்று சற்றே வருத்தம் அவருக்கு. ஆனாலும் சிவாஜியின் விருப்பப்படி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. போதிய அவகாசத்திற்குப் பிறகே நவராத்திரியின் உருவாக்கம் தொடங்கியது. படம் வெளிவந்தபின் சிவாஜி ஒன்பதுவிதமான பாத்திரங்களில் ஒவ்வொன்றிலும் தனது தனித்துவ முத்திரையைப் பதித்திருந்ததைத் திரையுலகினரும், ரசிகர்களும் கண்டு வியந்தார்கள்.

அதற்காகவே அவர் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள கால அவகாசம் கேட்டிருக்கிறார் என்று புரிந்தது.  இப்படித்தான் ஃபிரான்சு தேசத்திலும் இந்த நவராத்திரியைப் பார்த்துவிட்டு அந்த 9 பாத்திரங்களும் ஒருவரே நடித்தது என்பதை முதலில் நம்ப மறுத்தார்களாம். பின்னர் மீண்டும் மீண்டும் அதனைப் போட்டுப்பார்த்து பிரமித்தவர்களால் சிவாஜி என்ற அந்தப் பெருங்கலைஞனுக்கு செவாலியே என்ற அந்த உயரிய விருதினைத் தர எப்படி மனமில்லாமல் போயிருக்கும் சொல்லுங்கள்?

நயன்தாரா படத்துக்கு எதிராக வழக்கு 

மத உணர்வுகளைப் புண்படுத்துகிறதாம்! 

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி, நடிகை நயன்தாரா நடித்த படம் ‘அன்னபூரணி’. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிசம்பர் முதல் தேதி வெளியானது. அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது. இது நயன்தாராவின் 75ஆவது படம். 

தற்போது மும்பையை சேர்ந்த,சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், இந்தப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம்வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

;