cinema

img

அந்த நாள் பாடல்களே இல்லாத முதல் தமிழ்ப்படம்...

துவக்க காலத்திலேயே தமிழ் சினிமாவைப் புதுமைகளின் பாதையில் செலுத்தித் தரமுயர்த்துகிற முயற்சிகளை எடுத்தவர் இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். அவரது முயற்சிகள் வெற்றியும் கண்டன. இன்றுவரையில் அவை முன்னோடி சினிமா கதையாடல்களாகப் பேசப்படவும் செய்கின்றன. தமிழில் அப்படியானதொரு புதுமைத் திரைப்பட முயற்சிதான் 1954 இல் வெளிவந்த அவரது “அந்த நாள்”. ஒருநாள் இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரைச் சந்தித்தார். தன்னிடம் ஒரு புதுமையான கதை இருப்பதை அவரிடம் தெரிவித்தார். அதை சினிமாவாக எடுப்பதானால் அதில் பாடல்களோ, நடனக் காட்சிகளோ, சண்டைக் காட்சிகளோ இருக்காது என்றார் பாலசந்தர். இதனைக் கேட்ட ஏ.வி.எம்.முக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவரது கலைத்துறைப் பிரவேசமே சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் அவர் தொடங்கிய கிராமஃபோன் கம்பெனியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த நிறுவனத்தின் வாயிலாக இசைத் தட்டுக்களை அவர் தயாரித்து விற்பனை செய்தார். இப்படியானதொரு ஒலியுடன் தொடர்புடைய தொழிலைச் செய்தவரிடம் போய் பாடல்கள், நடனக் காட்சிகளில்லாத ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டினால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்?

ஆனாலும் நிதானமாக யோசித்தார் மெய்யப்ப செட்டியார். வீணை பாலசந்தர் புதுமையோடு தரமான படங்களை உருவாக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற உயர் மதிப்பு அவர்மீது செட்டியாருக்கு உண்டு. படத்தின் கதையைக் கேட்டார் அவர். அதுவும் அவருக்குப் பிடித்துப்போனது. யாரை இதில் நடிக்க வைப்பது என்ற யோசனை எழுந்தது.  அந்தக் கதையின் நாயகனின் பாத்திரம் ஒரு எதிர்நிலைத் தன்மை கொண்டது. கிட்டத்தட்ட வில்லனின் குணங்களோடான கதாநாயகன். பராசக்தி (1952) வெளிவந்து அந்த ஒரே படத்தின் மூலம் சிவாஜி கணேசன் மிகப்பெரிய அளவு புகழடைந்திருந்தாலும் உடனடியாக அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்துவிடவில்லை. அதனால் இப்படியான எதிர்நிலைப் பாத்திரங்களிலும் அவர் தொடர்ந்து நடிக்கத் துணிந்தார். அந்த நாள் மட்டுமல்லாமல் திரும்பிப் பார், ரங்கோன் ராதா போன்ற படங்களில் சிவாஜி ஏற்ற பாத்திரங்கள் வில்லத்தனமானவைகள்தாம்.  திரும்பிப் பார் போன்ற படங்களில் நடித்ததைத்தான் தனது பெருமையாக சிவாஜி கணேசன் பின்னாளில் குறிப்பிட்டிருந்தார். அவரையே அந்த நாளின் நாயகனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவானது. சவால்கள் நிறைந்த எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் துணிவையும் மனப் பக்குவத்தையும் சிவாஜியின் உள்ளத்தில் இந்த அந்த நாள் படம்தான் ஏற்படுத்தியது. ரசிகர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத புதிய - புதுமையான சினிமா அனுபவங்களைக் கொடுத்து அவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த அந்த நாள். படம் தொடங்கியவுடனேயே நாயகன் சிவாஜி கணேசன் சுட்டுக் கொல்லப்படும் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோனார்கள் ரசிகர்கள். 

அந்தக் கொலையைப் புலனாய்வதுதான் படத்தின் கதை. எடுத்தவுடனேயே சிவாஜி இறந்துவிடுவதால் அவர் தொடர்பான காட்சிகள் இனி இருக்காது என்றும், சிவாஜியின் பெயரைச் சொல்லித் தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டார்கள். திரையரங்க ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி, தொடர்ந்து படத்தைப் பார்க்கும்படி செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.  ஃபிளாஷ்பேக் என்ற உத்தியை முதன்முதலில் கண்டு வியந்தார்கள் ரசிகர்கள். முன்கதையைப் பின்னால் சொல்லுகிற இந்தப் புதுமை உத்தியால் தமிழ் சினிமா அடுத்தகட்ட வளர்ச்சியடைந்த விதம் கண்டு விமர்சகர்களும் புகழ்ந்தார்கள். பெயருக்கேற்பவே அந்த நாள் திரைப்படம் ஃபிளாஷ்பேக் எனும் புதுமையை முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது.

ஏ.வி.எம். நிறுவனத் தயாரிப்பான இந்த அந்த நாள் படத்திற்கு ஜாவர் சீத்தாராமன் வசனங்களை எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவும், சூர்யா படத்தொகுப்பும் செய்தார்கள். கலை ஏ.பாலு. வீணை எஸ்.பாலசந்தரின் முற்றிலும் புதுமையான இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜாவர் சீத்தாராமன், பண்டரிபாய், பி.டி.சம்பந்தம், டி.கே.பாலசந்திரன், கே.சூர்யகலா, எஸ்.மேனகா போன்றவர்கள் நடித்திருந்தார்கள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக பாடல்கள் இடம்பெறாத, நடனம், சண்டைக் காட்சிகள் இல்லாத ஒரு படமாக இந்த அந்த நாள் பெருமைக்குரியதானது. அதுமட்டுமல்லாமல், படம் துவங்கும் முதல் காட்சியிலேயே நாயகன் சுட்டுக்கொல்லப்படுவதும் தமிழ் சினிமா அதற்குமுன் சொல்லாத ஒன்று. மேதமைமிகு ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவாவின் இயக்கத்தில் உலகையே வியக்க வைத்த ரஷோமான் (1950) திரைப்படம்தான் தமிழில் இப்படியான துணிவுமிக்க அந்த நாள் முயற்சிக்கு வித்திட்டது. ஆமாம். ரஷோமான் படத்தைத் தழுவித்தான் அந்த நாள் உருவானது. சுயநலத்திற்காக தேசத்திற்கும் மனைவிக்கும் துரோகமிழைக்கும் வேலையில்லா இளைஞன் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் நடிகர்திலகம் சிவாஜி. அவர் எந்த வேடத்திலும் கோலோச்சுவார் என்கிற நம்பிக்கையை இந்தப் படம்தான் விதைத்தது. ரசனை மேம்பாட்டை ஏற்படுத்திய இந்தப் படத்திற்கு முதலில் வரவேற்பில்லாதபோதும் படத்தை அடுத்தடுத்து வெளியிட்டபோது ரசிகர்கள் அமோகமாக வரவேற்றார்கள். அந்த நாள் தேசிய விருதையும் அள்ளியது.

;