‘ஆபரேஷன் அரபைமா’ என்பது கப்பல்படையின் முன்னாள் வீரர் இயக்கியுள்ள தமிழ்ப்படத்தின் பெயர். பி.நடராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரகுமான், அபிநயா, நேகா சக்சேனா, ஷிகாத், பாலாஜி போன்றோர் நடித்துள்ளார்கள். அண்மையில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டின்போது இதன் இயக்குநர் இவ்வாறு பேசினார்: ‘‘நான் கப்பல்படை, விமானப்படை மற்றும் தரைப்படை என மூன்றிலும் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவர அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ நூல் பெரிதும் உதவியது. அப்போது அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தேன். அவர் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை எனக்குக் கொடுத்தார். 2014-இல் அதற்கு முயன்றாலும் இன்றுவரை இயலவில்லை. ‘ஆபரேஷன் அரபைமா’ படமானது போதைப்பொருளின் பாதிப்பைச் சொல்லுகிற படம். முதன்முதலில் போர்க்கப்பலில் எடுக்கப்படும் தமிழ்ப்படம் இதுதான்’’ என்றார்.