மாணிக் லால் டாண்டன் மும்பைக் காரர். அவர் திரைக்கலையை ஹாலிவுட்டில் பயின்றவர். ஆரம்பகாலந் தொட்டே திரைப்படத் தொழில்நுட்பங்களில் ஹாலிவுட் உலகின் முன்னோடியாக இருந்தது. அங்கு பயிற்சிபெற்றவர் தமிழில் மூன்று படங் களைக் கொடுத்தார். அதைவிட முக்கியமாக ஆற்றல்வாய்ந்த அமெரிக்கத் திரைக்கலைஞ ரான எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அந்நாளைய திரை மேதையை தமிழ்த் திரைப்பட உலகிற்கு அழைத்துவந்த பெருமை இந்த மாணிக் லால் டாண்டனையே சாரும். மாணிக் லால் தமிழில் எடுத்தது பாமா விஜயம் (1934), நந்தனார் (1935), டம்பாச்சாரி (1935) ஆகிய மூன்று படங்கள்தான். நந்தனாரில்தான் எல்லிஸ் ஆர்.டங்கன் மாணிக் லாலுடன் இணைந்து பணியாற்றினார்.
மாணிக் லாலின் இந்த “பாமா விஜயம்” - படமும் புராணக் கதையாடலை அடிப்படை யாகக் கொண்டதுதான். இந்தப் படத்தில்தான் பிரபல இசை மேதை என்று பின்னாளில் அறி யப்பட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் அறிமுக மானார். பி.ஏ.ஹானர்ஸ் என்று தனது பெயருக்குப்பின்னால் போடப்பட்ட பால சுப்பிரமணியம் இசைக் கலைஞரென்றபோதி லும் இந்தப் படத்தில் அவரை ஒரு நடிகராக அறிமுகம் செய்தார்கள். அழகிய இளைஞனாகத் தோற்றமளித்த அவருக்கு இந்தப் படத்தில் நாரதர் வேடம். ஜி.என்.பி., மிகச் சிறந்த பாடகர் என்பதால் இந்த பாமா விஜயம் பட நாரதர் மிகச் சிறப்பாகப் பாடி அசத்தினார். ஆனாலும் அவருக்கு நடிப்புதான் கொஞ்சம் இடறியது. இருந்தாலும் தனது குரலால் ரசிகர்களைக் கிறங்கடித்த அவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் வந்தன. எல்லிஸ் ஆர்.டங்கன் உருவாக்கிய சகுந்தலை (1940) படத்தில் சகுந்தலையாக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்க, அவரது கணவர் துஷ்யந்தனாக ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்தார். அதன் பிறகு வாசவதத்தா (1947) போன்ற ஒன்றிரண்டு படவாய்ப்புகள் ஜி.என்.பி.க்கு வந்தது. அத்துடன் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுவதும் இசையோடு இசைந்து - இயைந்துபோனார் அவர். கடலூர் நாராயணசாமி பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயர்கொண்ட ஜி.என்.பி., செம்மங்குடி சீனிவாசய்யர், மதுரை மணி ஆகியோரோடு இணைத்து இசை மூவராகப் புகழப்பட்டவர். இசையறிந்தவர் மத்தியிலும் எளிய ரசிகர் களிடையேயும் செவ்விசையை அவர் எடுத்துச் சென்ற பாங்கு பாராட்டும்படி இருந்தது.
இருந்தாலும் முன்னணி இசைக் கலைஞர்கள் துவக்கத்தில் அவருக்கு வாசிக்க மறுத்தார்கள். சினிமாவில் நடித்ததால் அவர் தனது புனிதமான கர்நாடக சங்கீதத்துக்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டார். அதன் புனி தத்தைக் கெடுத்துவிட்டார் என்றெல்லாம் அவரை ஒதுக்கினார்கள். அதனால், புதிய புதிய இளம் பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு பால சுப்பிரமணியம் வாய்ப்புகளை வழங்கினார். அவர் புகழின் உச்சத்திற்குச் சென்றபோதோ வேறு வழியின்றி பெரிய பக்கவாத்தியக் கலைஞர்களெல்லாம் அவரிடம் ஓடிவந்தார்கள். பாளையங்கோட்டை சகோதரிகள் என்று அந்நாளில் அறியப்பட்டவர்கள் பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதிபாய். அவர்கள் இந்தப் படத்தில் சத்யபாமாவாகவும் ருக்மணியாகவும் நடித்தார்கள். புகழின் உச்சத்திலிருந்த அவர்கள் 45 நாட்கள் படப்பிடிப்புக்கு 25 ஆயிரம் ரூபாயைச் சம்பளமாக வாங்கிக்கொள் வார்கள். படப்பிடிப்பு ஒருநாள் கூடினாலும் அதற்குத் தனியாக சம்பளத்தை முன்பண மாகவே தந்துவிடவேண்டும் என்று நிபந்தனை விதிப்பார்கள். தருவதற்குத் தவறினால் எவரிட த்திலும் சொல்லிக்கொள்ளாமல் காணாமல் போய்விடுவார்களாம். அந்தநாளிலேயே இது வொரு துணிச்சலான செயலாகவே கருதப் பட்டது. ஏ.என்.மருதாசலம் செட்டியாரின் செல்லம் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இந்த பாமா விஜயம் வசூலில் அந்த நாளிலேயே மிகப் பெரிய சாதனையைச் செய்தது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் மொத்த வசூல் 10 லட்ச ரூபாயாம். அப்போது இதுவொரு மகத்தான சாதனை. பாமா விஜயத்தில் மொத்தம் 59 பாடல்கள். திகைப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறதா? அந்த நாளில் அப்படித்தானே. இதில் 10 பாடல்களை பாலசுப்பிரமணியம் பாடினார். நாரதருக்கும் கிருஷ்ணனுக்கும் (மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி) ஒரு போட்டிப்பாட்டும் படத்தில் இருந்தது. பாடல்களுக்கு மெட்டுகள் போட்டு, இசையமைத்தது கே.தியாகராஜ தேசிகர். பெரும்பாலான பாடல்கள் தியாகராஜ கீர்த்தனை உள்ளிட்ட கர்நாடகக் கச்சேரிகளில் பாடப்பட்டு வந்தவைதாம்.
இந்தப் படத்தில் முத்தாய்ப்பாக இன்னொரு அதிசயமும் இடம்பெற்று இருந்தது. ஒரு கோரஸ் பாடல்தான் அது. பின்னாளில் மிக நீண்ட விவாதத்திற்குப்பின்னரே தேசிய கீதமாக ஏற்கப்பட்ட மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் “ஜன கன மன...” - பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது என்பது எத்தனை வியப்புக் குரிய செய்தி! ஒரு சேர்ந்திசையாக இந்தப் பாடலைப் படத்தில் இணைத்து தங்களின் விடுதலை உணர்வை பதிவு செய்திருந்தார்கள். இதுவொரு புராணப்படம் என்பதையெல்லாம் மீறி. இந்திய சினிமா வரலாற்றில் வேறொரு சினி மாவில் இந்தப் பாடலை இதுபோல ஒலிக்க விட்டி ருப்பார்களா என்பது ஐயமே. என்ன இருந்தும் இந்தப் படத்தின் ஒரு ஒற்றைப் பிரதியோ ஒரே யொரு விளம்பரப் படமோ அல்லது படத்தின் ஒரு காட்சிப் புகைப்படமோகூட இன்று நம்மிடம் எஞ்சியிருக்கவில்லை - என்பது எத்தனை பெரிய வரலாற்றுச் சோகம்!