cinema

img

எல்லா விருதுகளிலும் அரசியல் உண்டு...

ஆஸ்கர் விருது மட்டுமல்ல, எல்லா விருதுகளிலும் அரசியல் உண்டு என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள செங்களம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றுப் பேசிய அமீர், “இந்தியத் திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.  ஆஸ்கர் விருதை நான் என்றைக்குமே பெரிதாகக் கருதியது கிடையாது. அதையொரு பெரிய விருது என்று சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. அதை அந்த நாட்டின் தேசிய விருது என்று வைத்துக்கொள்ளலாம். இருந்தும் இந்தியத் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்போது அது எனக்கே கிடைத்ததாக நினைத்துக்கொள்கிறேன். தற்போது வழங்கப்படும் எல்லா விருதுகளிலும் அரசியல் இருப்பதாக  நினைக்கிறேன். ஆஸ்கர் மட்டுமல்ல, தேசிய விருது, மாநில விருது, தனியார் விருது என அனைத்திலுமே அரசியல் இருப்பதாகக் கருதுகிறேன்.  இந்தியா வில் சிவாஜியை மிஞ்சிய நடிகர் கிடையாது. ஆனால், அவருக்கு ஏன் தேசிய விருது தரப்படவில்லை? இறுதியாக தேவர் மகன் படத்தில்தான் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதுவும்கூட ஜூரியில் நம்  ஆட்கள் இருந்து அவர்கள் வற்புறுத்தலால்தான் தரப்பட்ட தாக சிவாஜியே கூறியிருந்தார். ஷங்கர் இயக்கிய சிவாஜி  படத்தில் நடித்த ரஜினியை சிறந்த நடிகர் என்ற பிரிவில் மாநில அரசின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்த முள்ளும் மலரும் போன்ற படங்களுக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை? மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா, சிவாஜி படத்தில் நடித்த ரஜினியை சிறந்த நடிகர் என்று? விருதுகள் லாபியாக மாற்றப்பட்டுவிட்டது!” என்றார் அமீர்.

;