சென்னை:
திரைப்பட இயக்குனர் சேரன் இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் தேசிய விருது பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பிரபலமான பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்றார் பாடகர் கோமகன்.
பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப் பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன்.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்த கோமகன் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவால் மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் தனது குழுவோடு பாதிக்கப்பட்டிருந்தார். இயக்குநர் சேரனும் அப்போது அவர்களின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், 50 சதவீத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் கோமகன் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.சி.எஃப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு உயிரிழந்தார்.
நலவாரிய உறுப்பினர்
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் பணியாற்றிய கோமகனின் பூர்வீகம் நாகர்கோவில். ஆரம்பத்தில் சென்னை மாதவரத்தில் இயங்கும் தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் வேலைசெய்து வந்தார். அந்த மையத்தில் மொபிலிட்டி ஆய்வாளராக, (விழித்திறன் சவால் கொண்டவர்களுக்கு ஸ்டிக் வைத்து நடக்கப் பயிற்சி தருபவர்) பணிபுரிந்த அனிதா என்பவருடன் காதல் மலர, இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மோனஸ், மோவின் என இரு மகன்கள் உள்ளனர்.
இசைக்குழுவை நடத்தியவர்
சிறு வயது முதலே நன்றாகப் பாடும் திறமை பெற்றிருந்த கோமகன், முழுவதும் விழித்திறன் சவால் கொண்டவர்களை உள்ளடக்கிய ‘கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார். சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைத்தது.சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிய போது விருது பெற்றவர்களில் கோமகனும் ஒருவர். கோவிட் முதல் அலை முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் மறுபடியும் பணிக்குச் சென்றிருக்கிறார்.விழித்திறன் சவால் கொண்டிருந்தாலும், வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடாமல் தன் கடும் உழைப்பால் உயர்ந்து, எளிய மனிதர்களுக்கு நம்பிக்கை அளித்த கோமகனின் இறப்புச்செய்தி பலரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.