cinema

img

இயற்கை என்ன மறுக்குதா?

ஷெர்டில்: தி பிலிஃபிட் சாகா”  
(2022)-(ஹிந்தி)-(நெட்பிளிக்ஸ்)

“இயற்கை என்ன மறுக்குதா! எதையும் உள்ளே பதுக்குதா! எல்லாத்தையும் சூறையாட, சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா...”

பூமியின் நுரையீரல் எனப்படும் காடுகளை அழித்து, இயற்கை வளங்களை சூறையாடுதலே கார்பரேட்களின் நவீன தர்மம். அதற்கு சாமரம் வீசுவதே ஆளுகின்ற அரசு களின் தற்போதைய உலகமயக் கடமை. கனிமவளக் கொள்ளை மற்றும் பொருளாதார நடவடிக்கை என்ற பெயரில் இயற்கைச் சூழலை இடையீடு செய்யும்போது, அது விலங்குகள் மனித மோதலாக மாறு கிறது. இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் காலங்காலமாய் வனத்தை வாழிடமாகக் கொண்ட வறிய வனவாசி மக்களே. ஆனால் அரசாங்கம் அவர்கள் உயிரை அற்பசொற்ப நிவாரணங்களுக்கு விலைபேசுகிறது. அதையும் கூட அதிகாரவர்க்கம் அலைக்கழிப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த உண்மையை, ஒரு உண்மைச் சம்பவத்தை மைய மாகக் கொண்டு பின்னப்பட்டதே “ஷெர்டில்:தி பிலிஃபிட் சாகா”என்ற ஹிந்தித் திரைப்படம்.    கங்குராம், வயதான தாய், மனைவி லஜோ மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்பவன். உலகம் தெரியா அப்பாவி. தன்னை நம்பி எப்பொறுப்பு ஒப்படைக்க பட்டாலும், அந்த பொறுப்பிற்கு உண்மையாக இருப்பவன்.அதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தயங்காதவன். அப்படிப்பட்ட கங்குராம், “ஜீண்டோ” கிராமத்தின் தலைவராக உள்ளான். இப்பொறுப்பளித்த மக்களுக்காக, உயிரையும் விடத்துடிப்பவன். வனவிலங்குகள் இக்கிராமத்தில் நுழைந்து விளைந்தப் பயிர்களை தின்று அழிப்பது தினசரி நிகழ்வாகும்.இதனால் வறுமை, பசி பீடித்த கிராமமாக உள்ளது.  புலிகள் காப்பகம் அருகில் இருப்பதால், புலிகள் தாக்கியும் ஊரார் இறப்பது தொடர்நிகழ்வாகும். புலிகள் தாக்கி இறந்தால் மட்டும் பத்து லட்சம் நிவாரணம் அரசு வழங்குகிறது.

அரசின் இந்த நிவாரணத்தை அறிந்த கங்குராம் ஊரைக்  கூட்டி விவாதிக்கிறான். காட்டுக்குள் சென்று புலியால் தாக்கப்பட்டு இறக்க ஊரார் எவரும் முன்வராததால், முடிவாக புலியால் அடிபட்டு இறப்பதற்காக தானே காட்டுக்குள் செல்வதெனவும்; அவ்வாறு இறக்கும் பட்சத்தில் கிடைக்கக்கூடிய அரசு நிவாரணத் தொகை பத்து லட்சத்தை மக்களின் வறுமையைப் போக்க பயன் படுத்த ஊருக்கு ஆணையிட்டு, குடும்பத்தை அனாதரவாக விட்டு, காட்டுக்குள் செல்கிறான். அவ்வாறு சென்ற கங்கு ராம், வன விலங்குகளை வேட்டையாடும் ஜிம் அகமதுவை  சந்தித்து நண்பனாகி, அவரின் உதவியோடு புலியைத் தேடு கிறான். கங்குராம், புலியிடம் மாட்டி இறந்தானா? இல்லையா! என்பதனை, அக்கிராம பண்பாட்டுத் தளத்தின் பின்னணியில் சமகால பிற்போக்கு அரசியலை கதை ஓட்டத்தோடு  விவரிப்பதே மீதிபடம். கங்குராம், தனது கிராமத்தின் நலனுக்காக அரசு திட்டங்கள் குறித்து விசாரிப்பதற்காக அரசு அலுவல கத்திற்கு செல்கிறான். விலங்குகளால் பயிர்கள் நாசம் ஆவதால் ஊரில் தற்கொலை, நகரை நோக்கி மக்கள் நகர்வு, போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அரசின் நிவா ரணத் திட்டம் உள்ளதா?எனக் கேட்கிறான்.அதற்கு அதி காரி, “அரசாங்கம் ஒன்னும் தர்மசத்திரம் நடத்தவில்லை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் இலவசம் கொடுப்பதற்கு” என கேலி செய்கிறான். மேலும் அதிகாரி, “ஆன்லைனில் மனு கொடுக்கவும்” எனக் கூறுவதற்கு, “நான் எல்லா லைனிலும் நின்று விட்டேன்; ஆனால் நிவாரணம் தான் கிடைக்க வில்லை” என அப்பாவியாக கூறுவதும்;மேலும் வலை தளம் குறித்தும் விளக்க, அவன், “சிலந்தி வலை, மீன் வலை,  ஏன் வஞ்சக வலை கூட தெரியும். ஆனால்  வலைதளம் தெரியாது” என்று மீண்டும் அப்பாவியாக கூறுவது, எல்லாம் கணிணிமயம் என அலப்பறை செய்யும் அரசு களின் ஆட்சியில், வட இந்திய கிராம விவசாயிகளின் நிலையை இக்காட்சி தோலுரித்துக் காட்டுகிறது.

கங்குராம் மனைவியிடம் தனக்கு கேன்சர் என சொல்லும்போது, அதற்கு அவள், “மருத்துவரிடம் காண்பித்து ஊசி போட வேண்டியது தானே” என கேன்சர் வியாதி குறித்த புரிதலும் இல்லாமல் அப்பாவியாக பேசுவாள். விலங்குகளால் பயிர்கள் நாசமாவதால் கிராமத்தில் வறுமை, பசி ஏற்பட்டு தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அதிகாரியிடம் கூறுகிறான். அதற்கு அதிகாரி, “பசியால் தற்கொலை நிகழ்ந்ததாகக் கூறாதே; அது தவறு.உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி, மன அழுத்தம், தேர்வில் தோல்வி, குடும்ப பிரச்சனை, மாரடைப்பு, மனமுறிவு போன்ற ஐந்து காரணங்களால் மட்டுமே தற்கொலை நிகழ்கிறது. வறுமை, பசி என்பது அறிகுறிகளே.காரணம், அறிகுறி இரண்டும் வெவ்வேறான அர்த்தம் கொண்டவை. பசியால் தற்கொலை என்பது இல்லை” எனக்கூறுவது, எதார்த்தங்கள் எவ்வாறு உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் என்ற பெயரில் மறைக்கப்படுகிறதென இக்காட்சி நிரூபிக்கிறது. கங்குராம் தனது மனைவியிடம் காட்டுக்கு செல்ல சம்மதம் கேட்டு, தனியே அழைத்து சென்று சமாதானப் படுத்துகிறான். காதலித்த நிகழ்வுகளை நினைவு கூறிக்கொண்டே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை  விரட்ட உயிர் தியாகம் செய்தனர். 23 வயது பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். 46 வயதுடைய, நான் ஏன் இக்கிராமத் திற்காக சாக கூடாது? புரட்சியாளர்களின் இணையர்கள்  எப்பொழுதுமே ஆதரவாகவே இருந்துள்ளனர்.அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது, எனக்கூறி, சிலைபோல் தோற்றம் காட்டுகிறான். அப்போது அவள்,” நீ சிலை போல் நில். நானும் சிலை போல் வாழ்விழந்து நிற்பேன்.”என அழுகின்ற காட்சியில்,சிலை அரசியலும் பேசப்படுகிறது. 

ஊராரின் தற்கொலை பிரச்சனையை தீர்க்க ஊர்க் கூட்டம் நடக்கும். புலியால் தாக்கப்பட்டு இறந்தால் அரசு நிவாரணம் கிடைக்கும். அத்தொகையை ஊர் நலனுக்கு செலவிடலாம்; எனவே யார் காட்டுக்குச் சென்று புலிக்கு இரையாவது என ஊரார்களிடம் கங்குராம் கேட்கிறான். அதற்கு ஒரு கிராமத்தான்,”வாழ வழி சொல்வார் என வந்தால், சாக வழி சொல்கிறாரே!” எனக்கூறுவது எள்ளலாக இருந்தாலும் உருக்கமாக இருக்கும். காட்டில் கங்குராமுக்கும், வன விலங்குகள் வேட்டை யாளன் ஜிம் அகமதுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படும். உபாதையை வெளியேற்றிக் கொண்டே, “நம்மிடம் உள்ள பல நம்பிக்கைகளின் அடிப்படையில் நாம் உணவெடுக் கிறோம். நாம் எதைச் சாப்பிட்டாலும், மலமாக தான் வெளி யேறும். ஏழைக்கு ஒரு மலம்; பணக்காரனுக்கு ஒரு மலம் கிடையாது. மலத்திற்கு சாதி, மதம், வர்க்க பாகுபாடு கிடையாது. எல்லாம் ஒன்றே” எனப் பேசிக்கொள்வர்.மேலும் ஜிம் ஒருமுறை வேட்டையின் போது, பசி காரணமாக பன்றி இறைச்சியை சாப்பிட்டதாகவும், அல்லாவுக்கு துரோகம் செய்ததாக ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இருப்பினும், “எதை சாப்பிட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். இதை கடவுளுடன் முடிச்சு போடக்கூடாது.நான் என்ன செய்ய வேண்டும் என்பதை பண்டிட்டோ, மௌலானாவோ திட்டமிட முடியாது” என வெளிப்படையாக சமகால மத அரசியல் பேசப்படும். காட்டில் அனுமதியின்றி நுழைந்ததற்காக கங்குராம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.நீதிபதியிடம், “அய்யா, பல தலைமுறைகளாக ஜீண்டா கிராமத்தில் வாழ்கிறோம். எங்களுக்கும் வனவிலங்கு களுக்குமான உறவு எப்போதும் அமைதியாகவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிரச்னை.விலங்குகள் எங்கள் நிலத்தில் நுழைவதும்;எங்கள் குழந்தைகள் அதனை எதிரியாகப் பார்ப்பதும், ஆரம்பமாகி விட்டது. இதனால் எங்கள் மக்கள் நகரை  நோக்கி இடம் பெயர ஆரம்பித்தனர். ஆனால் நகரவாசிகளின் சுயநலமோ எல்லையற்றதாக உள்ளது. இப்பிரச்னைக்கு   முக்கிய காரணம் வறுமை மற்றும் பசி. காட்டையும்,விலங்குகளையும் கண்காணிக்க அரசு ஒரு பெரும்  படையையே வைத்துள்ளது.அதேபோல் எங்களை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் அரசு தனிக்குழுவை நியமிக்க வேண்டும்.

இல்லை என்றால், இன்னும் சில வருடங்களில் ஏழை களாகிய எங்களை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும். எங்களது உள்ளுறுப்புகளை உருவி எடுத்து, அதில் வைக்கோலை வைத்து, கூண்டுக்குள் அடைக்கப் பட்டிருப்போம். அதில், கங்குராம், ஜீண்டோ கிராமத்தை சேர்ந்தவன் என்று எழுதப்பட்டிருக்கும்.  அல்லது, புலிகளுக்குத் தனியே காப்புக் காடுகள் இருப்பது போல், எங்களுக்கும் தனியே இடம் அமைக்க வும். காடுகளில் விலங்குகளைப் பார்க்க பணம் வசூலிப்பது போல், எங்களையும் பார்க்க பணம் வசூலிக்கலாம்.நாங்கள் விலங்குகள் போல் நிர்வாணமாக வாழ்வோம்.எங்கள் குழந்தைகள் தூசியில் விளையாடட்டும்.  எங்கள் பெண்கள் அவர்களுக்கு பால் ஊட்டுவார் கள். மரத்தில் வாழ்வோம். குதிப்போம். தண்ணீரை நக்கி, நக்கி குடிப்போம். நிச்சயம் நாங்கள் விலங்குகள் போலவே நடமாடுவோம். இது ரொம்ப பொழுது போக்காக இருக்கும். புகைப்படம் கூட எடுக்கலாம். ஆகவே எங்களுக்கு காப்பு காடு கொடுக்கவும். ஆனால் அதில் வேட்டையாடுபவர்களை மட்டும் அனுமதிக்காதீர்க கள்” என நீதிபதியிடம் மன்றாடி அழுவான்.அரசு கண் காணிக்காவிடில், அருங்காட்சியகம் இல்லையென்றால் மிருககாட்சிசாலை போல், மனித காட்சிசாலை எனக் கூறுவது, ஆளும் அரசு மக்களுக்கானது அல்ல, என்பதை இதைவிட விளக்கமுடியாது. கங்குராம் விடுதலையாகிறான்.

ஆனால் அவன் புலியைத் தேடிச்சென்ற தற்கொலைப் பயணத்தையும் வியாபாரமாக்குகின்றது கார்ப்பரேட் உலகம்.அவன் சென்ற இடங்கள், காட்டிலுள்ள பாழடைந்த கட்டிடம், புலியை கண்ட இடம் இவற்றை காட்சிப்படுத்தி சுற்றுலாத் தலமாக்கும் திட்டத்துடன் கங்குராமை அரசு அதிகாரி காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.இதனை விரும்பாத கங்குராம் காட்டுக்குள் தப்பிச் செல்கிறான். ஓரிடத்தில் அவன் சிறுநீர் கழிக்கும்போது புலியின் உறுமல் கேட்கி கிறது. கங்குராம் அச்சத்தோடு திரும்புகிறான். அத்துடன் இருண்டுவிடும் காட்சியுடனும்; கங்குராம் என்ன ஆனான்? என்ற கேள்வியுடனும்;படம் முடிகிறது. கார்ப்பரேட்களின் காடழிப்பு, சூழலியல் நாசத்துக்கு  எதிராக வனவாசியான கங்குராம் மட்டும் போராட வில்லை; காட்டின் போராளியாகவும் புலி இருக்கிறது. இந்தப் போராட்டங்களையெல்லாம் ஒடுக்கி லாப வேட்டைக் காடாக, சூழல்காப்புக் காடு மாற்றப்படுமா னால், எதிர்காலம் என்னாகும் என்பதையே, இறுதி இருண்ட காட்சி குறிப்பிடுகிறது. இது திரை மொழியின் கவிதை. கங்குராமாக நடித்துள்ள பங்கஜ் திரிபாதியின் கபட மில்லாத நடிப்பு அருமை. இதேபோல் ஜிம் அகமதுவாக நடித்துள்ள, நீரஜ் கபியின் மென்மையான நடிப்பும், கங்கு ராமின் மனைவி லஜோவாக நடித்துள்ள சயனி குப்தா கணவனிடம் காட்டும் கோபமும்,பேதை விழியும்,நடிப்பும் அழகு.

மென்மையான பின்னணி இசை
வனம்சார்ந்த கதைக்களத்துக்கு
இசைவாக இருக்கிறது.

1.இயற்கையே கடவுள்; காஃபா,கைலாஷ் அல்ல. 2.இது ஒரு கண நேர விளையாட்டு, 3.வாடிய பூவில் வாசனைக்கு ஏங்கலாமா? போன்ற  வாழ்க்கை தேடல் குறித்த இதமான பாடல்கள் ரசிக்கத்தக்கது.  ஸிரிஜித் முகர்ஜி என்ற வங்காள இயக்குநர் இயக்கியுள்ளார். கார்ப்பரேட்களின் பேரழிவுக் கொள்கை. அதற்குத் துணைபோகும் ஆளும்வர்க்கத்தை மேற்கண்ட “ஜோக்கர்” படப்பாடல் உச்சபட்சக் கசப்பை உமிழ்கிறது.

 

;