இயக்குநர் மணிரத்னம் முன் எப்போதும் பேசியிராத சிலவற்றை அண்மையில் பேசியிருக்கிறார். அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்: இளம் வயதில் என்னை இரண்டு விசயங்கள் பெரிதும் செதுக்கின. ஒன்று திராவிட இயக்கம். மற்றொன்று சினிமா. பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி போன்றவற்றை எங்களுக்குக் கற்றுத்தந்த இயக்கம் அது. 50 வருடங்களாகத் திரைப்படத் தலைப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் தமிழைப் பயன்படுத்து கிறேன் என்றால் காரணம் கலைஞர். இந்திப்படமே எடுத்தாலும் இந்தியில் பேசுவதற்கு ஒரு மனத்தடை இருக்கிறது என்றால் காரணம் கல்லூரிப் பருவத்தில் திமுக ஏற்படுத்திய ஆதிக்க எதிர்ப்பு உணர்வு.
மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரு கின்றன. மணிரத்னம் கல்கிக்கு துரோகம் செய்து விட்டார் என்றும், கல்கியும் மணிரத்னமும் சோழர் வரலாற்றுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் என்றும், பொன்னியின் செல்வன் வெறும் புனைவுதான், வரலாறல்ல என்றெல்லாம் பார்வைகள் பலவிதமாகக் கிளம்பியிருக்கும் நிலையில் எந்த நோக்கத்திற்காக - என்ன ஆதாயம் கருதி அவர் என்றுமில்லாமல் திடீரென இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று பலரும் வியக்கத்தான் செய்கிறார்கள். அது ஒருபுறம் இருந்தாலும் பகுத்தறிவு, சமூகநீதி, இந்தி ஆதிக்கம் என்றெல்லாம் அவரைப் பேசவைத்திருக்கும் காலத்திற்கு நன்றியும் சொல்வோம்.