‘தி கேரளா ஸ்டோரி’க்கு கோவாவில் எதிர்ப்பு...
அடா சர்மா, சித்தி இட்னானி , சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் கதை கேரளாவில் பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதாக உள்ளது. இதற்குக் கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. அப்போது கொச்சியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர் அர்ச்சனா ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது இந்துத்துவா பிரச்சாரப் படம் என்ற பேப்பரையும் அவர்கள் வைத்திருந்தனர். படத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் விநியோகித்தனர். திரையிடலுக்கு வந்த இயக்குநர் சுதிப்தோ சென்னிடம் அவர்கள் கேள்விகளையும் எழுப்பினர். இந்தச் சூழலில் கோவாவின் பனாஜி போலீசார் அவர்களைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களின் செல்போன்களையும் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்த போலீசார் ஒரு மணிநேரம் கழித்து அவர்களை விடுவித்தனர். இதனால் படவிழாவில் இந்த நிகழ்வுகள் கவனம் பெற்றன.
படவுலகின் அந்தநாள் பண்பு...
எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களில் பாடல்களே முக்கியத்துவம் பெற்றிருக்கும். அடிப்படையில் அவர் பாடகர் அல்லவா? அந்நாளைய ரசிகர்கள் மனங்களில் அவர் ஒரு ஆணழகனாகவும் இருந்திருக்கிறார். பொதுவாக பாகவதர் படங்களில் சண்டைக் காட்சிகள் இடம்பெறாது. ஆனால், சத்தியசீலன், அம்பிகாபதி படங்களில் பாகவதர் வாள் சண்டை போட்டிருக்கிறார். பாகவதர் மீசை வைத்து நடித்தது சியாமளா என்ற படத்தில் மட்டுமே. புதுவாழ்வு மற்றும் சிவகாமி ஆகிய இரண்டு படங்கள்தான் தியாகராஜ பாகவதர் நடித்த சமூகப் படங்கள். பாகவதரின் தனித்துவப் பெருமைகளைச் சொல்லிக்கொண்டேபோகலாம். பிற்காலத்தில் மிகப்பெரிய திரை ஆளுமைகளாக வளர்ந்த நடிகர் ரஞ்சனும், எம்.ஜி.ஆரும் பாகவதர் நடித்த அசோக்குமார் படத்தில் துணை நடிகர்கள். பாகவதரின் குரலில் வசீகரிக்கப்பட்டு அவரைப்போலவே பயிற்சி எடுத்துக்கொண்டு பாடத் தொடங்கியவர் டி.எம்.சௌந்தரராஜன். சிறுவயதிலிருந்தே பாகவதர் போலப் பாடவேண்டும் என்று முயன்றதாக சௌந்தரராஜன் பெருமையோடு சொல்லியிருக்கிறார். பின்னாளில் பாகவதரும் “பலே, நீ மிகவும் அருமையாகப் படுகிறாய்!” - என்று டி.எம்.எஸ்ஸை மனம்திறந்து பாராட்டியிருக்கிறார். தாம் வாழ்ந்த காலத்திலேயே மிகப்பெரிய திரைநட்சத்திரமாக வளர்ந்துவிட்ட எம்.ஜி.ஆரை மிகவும் உயர்வாக மதித்தார் பாகவதர். இராமச்சந்திரன் - ஜானகி இணையின் பெயர்ப் பொருத்தம் என்பதையும் சொல்லிப் பூரிப்பாராம் பாகவதர். முன்பு தனது படத்தில் துணை நடிகராக வந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்கிற எண்ணம் அவரிடம் இருந்ததே இல்லை என்கிறார்கள் அவர்களோடு பழகிய மூத்த திரைக் கலைஞர்கள். நாங்களெல்லாம் மிகச் சாதாரணமாக இருந்த காலத்திலேயே பாகவதர் புகழின் உச்சத்திலிருந்தார். அவர் பங்கேற்கும் விழாக்களில் அவரைப் பார்ப்பதற்காகவே நாங்களெல்லோ ரும் முன்கூட்டி யே அங்கு சென்று காத்திருப்போம் என்று எம்.ஜி.ஆர். மெய்சிலி ர்க்கக் கூறி யதுண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீதும் பாகவதருக்கு மிகப் பெரிய மதிப்பு இருந்தது. பாகவதர் பட வாய்ப்புகளின்றி சிரமத்திலிருந்தபோதிலும் எதுகுறித்தும் அவர் குறைபட்டுக்கொண்டதில்லையாம். அந்நாளின் திரையுலகத்தின் பண்பு அத்தகையதாக இருந்திருக்கிறது!
பெண் பெயரில் தலைப்பு! சத்யராஜ் மகிழ்ச்சி
“நாம் நடிக்கும் படங்களில் நம் கொள்கைகள் பற்றி பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம் அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். சில படங்களில் மட்டும்தான் அந்தக் கொள்கைகளோடு சேர்ந்த கதாபாத்திரம் கிடைக்கும். அந்த வகையில் இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி. பெண் கதாபாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. பெண் கதாபாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி. ஏனென்றால் பெண் கதாபாத்திர பெயரில் தலைப்பு வைத்தால் ஹீரோக்களுக்கு சின்ன ஈகோ வரும். இந்தப் படம் பொலிட்டிக்கல் கிரைம் திரில்லர் கதையைக் கொண்டது” வள்ளிமயில் திரைப்பட டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதிலிருந்து...
வள்ளிமயில் திரைப்பட டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதிலிருந்து...
பா.ரஞ்சித்தின் ‘கள்ளிப்பால்ல ஒரு டீ...
விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்தப் படம். தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் அடுத்து ரஞ்சித் தயாரிக்கும் அந்தாலஜி படத்துக்கு, ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 4 பெண் இயக்குநர்கள் இயக்குகின்றனர். அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய பெண் இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மீண்டும் காதலிக்க நேரமில்லை...
‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார் கிருத்திகா. அடுத்து அவர் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி. யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலரும் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயர் வைத்துள்ளனர். தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ஆம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்ததே. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிற நிலையில் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.