கலைவாணரின் காதல் மனைவியும், நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை இணையாக அவரோடு நடித்தவருமான டி.ஏ.மதுரம் அம்மையார் ஒரு திரைப்பட நிறுவனத்தை முனைப்போடு தொடங்கினார். அதற்கு என்.எஸ்.கே. ஃபிலிம்ஸ் என்று தன் கணவரின் பெயரையே வைத்தார். அப்போது அவருக்குப் பணத்தேவை நிறைய இருந்தது. ஆமாம்... அன்புக் கணவர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறை சென்றுவிட்ட நிலையில் வழக்கின் பொருட்டும் பெரும் கடனாளியாகியிருந்தார் மதுரம். அதற்கு முன்னரோ தான் ஈட்டியிருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்தே ஒன்றும் மிஞ்சாமல் செய்துவிட்டார் கலைவாணர்.
“பைத்தியக்காரன்” - என்பது மதுரம் தயாரித்த திரைப்படத்தின் பெயர். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்குமுன் அது 1947 ல் வெளிவந்தது. கலைவாணர் சிறை சென்ற பின்னர் மதுரம் தொடங்கி, நடத்திவந்த நாடகக் குழுவின் பெயர் என்.எஸ்.கே. நாடக சபா. மதுரத்துக்கு உறுதுணையாக எஸ்.வி. சகஸ்ரநாமம் இருந்தார். அவர்கள் சென்னையில் பிரபலமான ‘ஒற்றைவாடைக் கூத்துக் கொட்டா’ - என்று அழைக்கப்பட்ட வால்டாக்ஸ் தியேட்டரில் மேடையேற்றி நடத்திவந்த நாடகங்களில் ஒன்றுதான் இந்த ‘பைத்தியக்காரன்’ - நாடகம். அதைத்தான் திரைப்படமாக எடுக்கும் முயற்சியிலிறங்கினார்கள் மதுரமும் சகஸ்ரநாமமும். இந்தத் திரைப்பட முயற்சிக்குச் சிறையிலிருந்த
கலைவாணரின் சம்மதமும் இருந்தது. அறிஞர் வ.ரா.வும் இந்தத் திரைப்பட முயற்சிக்கு ஊக்கமளித்து உதவினார். மதுரத்தின் புதிய பட நிறுவனத்திற்கு நியூடோன் ஸ்டூடியோ அதிபர் டின்ஷா டெஹ்ரானியும், தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனர் சௌந்தரராஜ ஐயங்காரும் பங்குதாரர்களானார்கள். ஏற்கெனவே பைத்தியக்காரன் நாடகத்தில் நடித்துவந்த சகஸ்ரநாமம், சி.எஸ்.பாண்டியன், டி.ஏ.மதுரம், எஸ்.ஜே.காந்தா, டி.ஏ.ஜெயலட்சுமி, எம்.என்.ராஜம் போன்றோருடன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ராமச்சந்திரன், டி.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.
திரைக்கதை - வசனம் எஸ்.வி.சகஸ்ரநாமம். இயக்கம் கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர்கள். நியூடோன் ஸ்டூடியோவில் படம் வளர்ந்தது. பிரதான திரைக்கதையைப் பாதிக்காத வண்ணம் படத்தில் ஒரு விநோத ஏற்பாட்டினைச் செய்து வைத்திருந்தார் சகஸ்ரநாமம். அதன்படி சனி என்ற ஆண் கதாபாத்திரத்தையும், வள்ளி என்ற பெண் கதாபாத்திரத்தையும் கற்பனை செய்து வைத்திருந்தார்கள் படக்குழுவினர். அது எதற்காக? கலைவாணரும் எம்.கே.தியாகராஜ பாகவதரும் சிறையிலிருந்தார்கள் அல்லவா? அவர்களின் விடுதலைக்காக ஒரு பெரிய முயற்சி நடந்தது. அதன்படி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று லண்டன் பிரிவி கௌன்சில் உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு இருவரும் விடுதலையானார்கள். அப்படி கிருஷ்ணன் விடுதலையாகி வந்தால் அவர் நடிப்பதற்காகத்தான் அந்த சனி என்கிற கதாபாத்திரமும் அவருக்கு இணையாக மதுரம் நடிக்க வள்ளி என்கிற கதாபாத்திரமும் யோசனையிலிருந்தன.
கலைவாணர் விடுதலைக்குப்பின் பைத்தியக்காரன் படத்தில் நடித்ததோடல்லாமல் தனது இரண்டரை ஆண்டுகால சிறை வாழ்க்கையைப் புகழ்ந்து ஒரு அருமையான பாடலையும் பாடினார் அந்தப் படத்தில்.
“ஜெயிலுக்குப் போய்வந்த சிரேஷ்டர் மக்களைச் சீர்திருத்துவாங்கோ...” - என்று தொடங்கும் அந்தப் பாடலில் சிறை வாழ்வில் தான் அனுபவித்த மேன்மைகளை அவர் பாணியில் அடுக்கிக்கொண்டே போவார். அங்கே உடைப்பஞ்சம் ஏதுங்க? உணவுப் பஞ்சம் ஏதுங்க? ஒடம்புக்கு ஏதாச்சுன்னா டாக்டர் ஓடியாந்துருவாருங்க. கூலிக்குப் போகும் வேலைத் திண்டாட்டக் குறைவே இல்லீங்க... கும்பிடக் கோவிலும் இல்லீங்க... இது ஒரு குறையா சொல்லுங்க..?- என்பார். எல்லாம் கிடைத்துவிடுகிற நிலையில் கும்பிடக் கோவில் இல்லையென்றால் அது ஒரு குறைதான் ஆகுமா என்ன? அதுதான் கலைவாணரின் ‘டச்’!
படத்தின் கதையும் விதவை மறுமணத்தை வலியுறுத்தும் முற்போக்குக் கருத்தைக் கொண்டதாக இருந்தது. பிரபல இந்தித் திரையுலக இயக்குநர் வி.சாந்தாராமின் ‘துனியா நா மானே’ - படத்தின் தாக்கத்தில் உருவானதுதான் இந்தப் பைத்தியக்காரன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா...’ - பாடலும் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பாடலுக்கு நாம் இருவர் பட நாயகி டி.ஏ.ஜெயலட்சுமி நடனமாடினார். படத்தின் இயக்கம் கிருஷ்ணன் - பஞ்சு என்றாலும் துணைப் பாத்திரம் ஒன்றில் நடித்த எம்.ஜி.ஆரின் பகுதியை கலைவாணரே இயக்கினார். என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர்மீதிருந்த பாசமிகு நட்பிற்காக இந்தப் படத்திற்கான முதலீட்டை அவர்களின் நண்பர், தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனர் சௌந்தரராஜ ஐயங்கார் வழங்கினார்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப்பின்னர் கலைவாணர் ஒரு இயக்குநராகவும், படத் தயாரிப்பாளராகவும், நல்ல அரசியலை ஊக்குவிக்கும் அரசியல் ஆர்வலராகவும் மேலும் பரிணமித்து, தமிழ் மக்களிடையே தனித்து அடையாளம் பெற்றார்.