மலையாள சினிமாவுக்கு கேரள கிறிஸ்தவ ஆயர்கள் கடும் எதிர்ப்பு...
‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படம் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்துள்ளது கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (கேசிபிசி). கேசிபிசி விஜிலென்ஸ் கமிஷன் செயலாளர் அருட்தந்தை டாக்டர் மைக்கேல் புலிக்கல் சி.எம்.ஐ. இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓரினச்சேர்க்கை போன்ற கருத்துக்க ளுக்கு கிறிஸ்தவ நம்பிக்கையைப் பயன்படுத்து வதைக் கண்டிப்பதாகக் கூறுகிறார். இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் சட்டப்பிரிவு 377 ஆகியவை குறிப்பிடும் நேர் பாலீர்ப்பு - பெண், நேர் பாலீர்ப்பு - ஆண், இருபாலீர்ப்பாளர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் குறித்த சமகால விவாதங்களுடன் இணைக்கிறது. ஓரினச்சேர்க்கை குறித்தான கருத்துக்களை இடதுசாரி அரசியலுடன் படம் தொடர்புபடுத்துகிறது. கேரளாவில் இடதுசாரிகள் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களாக, பாலியல் தொடர்பான இயக்கங் களுக்கு இடமளிப்பவர்களாக படத்தில் சித்தரிக்கப் படுவதாகத் தெரிவிக்கும் இந்த அறிக்கை அதனைக் கேள்விக்குள்ளாக்குகிறது. கத்தோலிக்கத் தார்மீக விழுமியங்களுக்குச் சவாலாக இத் திரைப்படத்தின் நோக்கம் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது. மாற்றுப் பாலினம் சார்ந்த நபர்களை இரக்கத்துடன் நடத்துவது குறித்த சர்ச்சின் கருத்தையும் குறிப்பிடும் அறிக்கை படத்தின் கருத்துக்களுடன் உறுதியாக உடன்படவில்லை என்கிறது.
கண்ணகி திரைப்படம்: ஒரு கதை- 4 பெண்கள்- 4 சூழல்கள்!
நாயகிகள் நான்கு பேர் நடித்துள்ள படம் கண்ணகி. கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் நடித்துள்ளார் கள். அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு. ஷான் ரஹ்மான் பின்னணி இசை. ஸ்கைமூன் என்டர்டெய்ன் மென்ட், இஎஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கண்ணகியைத் தயாரித்துள்ளது. வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நவம்பர் 3 அன்று வெளியிட்டது. வெவ் வேறு சூழல்களில் வாழும் நான்கு பெண்களின் கதைகள் தனித்தனியே காட்டப்படுகின்றன. பலமுறை பெண் பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்தும் திருமணம் கைக்கூடாமல் இருக்கும் அம்மு அபிராமி, கணவனின் வற்புறுத்த லால் விவாகரத்துக்கு விண்ணப் பித்து நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் வித்யா பிரதீப், திருமண உறவின் மீது நம்பிக்கை இன்றி லிவிங் டூகெதரில் வாழ விரும்பும் ஷாலின், வயிற்றில் இருக்கும் குழந்தையை கருவி லேயே கலைக்க நினைத்து, பின்னர் அது நடக்காமல் போனதால் விரக்தி யில் இருக்கும் கீர்த்தி பாண்டியன். இந்த நால்வரை சுற்றித்தான் படம் நகர்கிறதாம். நான்கும் தனித்தனி கதைகள் எனினும் அவை திருமணம் என்ற ஒற்றைப் புள்ளியிலேயே சூழல்வதாக தெரிகிறது.
மிஷ்கின், விஜய் சேதுபதி இணையும் ‘ட்ரெயின்’
வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, தனது பயணத்தை ட்ரெயின் தொடங்குவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தாடி, மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிஷ்கின் இயக்கும் 11-ஆவது திரைப்படமாகும்.விஜய் சேதுபதி விடு தலை 2, மகாராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரு கிறார். மிஷ்கின் கடைசியாக இயக்கிய படம் சைக்கோ. இவரோடு விஜய் சேதுபதி இணையும் இந்த ட்ரெயின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எண்ட்லெஸ் பார்டர்ஸ்’ படத்துக்குத் தங்க மயில் விருது
கோவா 54ஆவது சர்வதேச - இந்தியத் திரைப்பட விழாவில் 270 - க்கும் மேலான படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேசப் பிரிவில் 198 படங்கள் திரை யிடப்பட்டன. இந்தியன் பனோரமா பிரிவில் 25 படங்கள் திரையிடப்பட்டன. அதில் வெற்றிமாறனின் ‘விடுதலை’, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘காதல் என்பது பொதுவுடைமை’, சம்யுக்தா விஜயன் இயக்கிய ‘நீல நிற சூரியன்’ ஆகிய தமிழ்ப் படங்கள் இடம்பெற்றன. விழாவின் நிறைவு நாளில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான தங்க மயில்விருது அப்பாஸ் அமினியின் ‘எண்ட்லெஸ் பார்டர்ஸ்’ என்ற பாரசீகப் படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதானது 40 லட்சம் ரூபாயையும், சான்றிதழ் மற்றும் தங்க மயில் பதக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை ‘பிளாகாஸ் லெசன்ஸ்’ படத்துக்காக பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் பெற்றார். ‘எண்ட்லெஸ் பார்டர்ஸ்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பவுரியா ரஹிமி சாமுக்கு வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. விழாவில் ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அந்தநாளில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கிய வசனம் ...
அந்தநாளின் முற்போக்கு இயக்குநர் கே.சுப்ரமணியத்திடம் திரைப்படம் எடுப்பதற்கான நாவல் ஒன்றை எழுதிக் கொடுத்தார் அன்றைய பிரபல எழுத்தாளர் கல்கி. கே.சுப்ரமணியத்தைப் படப்பிடி ப்பைத் தொடங்கச் சொல்லிவிட்டு உடனே அந்தக் கதையை ஆனந்த விகடனில் 1939 ஜனவரி முதல் தேதியிலிருந்து தொடர்கதை யாகவும் எழுதத் தொடங்கிவிட்டார் கல்கி. ஒவ்வொரு இதழிலும் 16 பக்கங்கள். தனியே பிரித்து எடுத்து பைண்ட் செய்யத் தோதாக வெளிவந்து வாசகர்களை மிக வும் ஈர்த்தது அந்தத் தொடர். சினிமா எடுக்க என்றும், தொடர்கதையாகவும் கல்கி எழுதிய அந்தக் கதைதான் “தியாகபூமி”. திரைப்படமாகவும் உருவாகி வந்ததால், ஒவ்வொரு வாரமும் தொடர் கதைக்கு கையால் வரைந்த சித்திரங் களை வைக்காமல் திரைப்படத்தின் காட்சிப்படங்களான ஸ்டில்ஸ் பயன் படுத்தப்பட்டன. இது அந்நாளிலே பெரும் புதுமை என வியக்கப்பட்டது. தொடர்கதை விகடனில் முடிந்த மறுவாரம் 1939 மே மாதம் 20 ஆம் நாள் தியாகபூமி திரைப் படம் வெளிவந்தது. “எனக்குத் தெரியாதவற்றில் நான் தலை யிடுவது கிடையாது. எனவே கே. சுப்ர மணியத்தின் சினிமா பணிகளில் நான் குறுக்கீடு செய்தது இல்லை.
திரைப்படம் எடுத்தல் ஒரு அரிய பெரிய வித்தை. அதில் தேர்ச்சி பெறுவதற்கு எவ்வளவோ உழைப்பும், அனுபவமும் வேண்டும். எனக்குள்ள அனுபவமெல்லாம் கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவதுதான். நான் தலையிட கே.சுப்பிரமணியம் இடம் கொடுக்கவும் மாட்டார்!” - என்று தியாக பூமி வெளியான மறுநாளே எழுதினார் கல்கி. விடுதலைப் போராட்ட உணர்வுக்கு மிக வும் துணைநின்ற படமாக அறியப்பட்டது தியாகபூமி. அது பெண்விடுதலையையும் முக்கியமாகப் பேசியது. தியாகபூமியின் நாயகி நீதிமன்றத்தில் கர்ஜிக்கும் எழுச்சி கரமான வசனம் 30 களின் தமிழ்சினிமா தொட்டுவிட்ட உயரம் சொல்லும். இதோ அந்த நீதிமன்ற வசனத்தின் பகுதி: “இது நியாயமா? இது தர்மமா? நீங்களே சொல்லுங்கள். ஒரு பெண்ணை அவள் பேரில் இஷ்டமில்லாத புருஷனுடன் வாழும்படி நிர்ப்பந்தப்படுத்துவது நீதியா? தெய்வத்துக்குத்தான் அடுக்குமா? உலகமெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று முழங்கிக்கொண்டிருக்கும் இந்நாளில் ஒரு பெண் பேதையைச் சட்டத்தின் பேரால் இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கலாமா? மனைவியைப் புருஷன் தள்ளிவைத்தால் மனைவி கோரக்கூடிய பாத்தியதை என்ன? ஜீவனாம்சம்தானே? அந்தமாதிரி நானும் என் புருஷனுக்கு ஜீவனாம்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இவருடன் சேர்ந்து வாழ்வதற்குமட்டும் சம்மதிக்க மாட்டேன்... ஒருநாளும் மாட்டேன்!”. இது அந்தநாளில் அதிர்ச்சியையும் பரபரப்பை யும் உண்டாக்கியதென்று சொல்லவும் வேண்டுமோ?