கவியரசர் கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர், பாடலாசிரியர் என்பது உலகறிந்ததே. ஆனால், அவர் பல படங்களுக்கு மிக அற்புதமாக வசனமெழுதியிருக்கிறார் என்பது இன்றைய தலைமுறையில் பலரும் அறியாதது. அவர்களுக்காக சில சுவைமிகு கண்ணதாச வசனங்கள் இங்கே. எம்.ஜி.ஆர். நடித்த தாய்க்குப்பின் தாரம் படத்திற்கு அய்யா பிள்ளை என்பவர் வசனகர்த்தா. கண்ணதாசன் வசன மேற்பார்வையாளர். அதிலேயும் ஆங்காங்கே கண்ண தாசன் தனது அடையாளத்தைப் பதித்தார். எடுத்துக்காட்டு இதோ: கதாநாயகி: “மாறிவிட்டதடி மனம்...” பணிப்பெண்: “ஆறிவிட்டதம்மா காப்பி...” கண்ணதாசன் முதன்முதலாக ஒரு முழு திரைப்படத்திற்கும் வசனம் எழுதியது ‘இல்லற ஜோதி’ படத்திற்குத்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், சிவாஜி, பத்மினி, தங்கவேலு நடித்தது. சிவாஜிக்கு எழுத்தாளராக வரவேண்டும் என்பது விருப்பம். அவரின் தகப்பனாக நடிக்கும் தங்கவேலுவுக்கு அது பிடிக்காது. சிவாஜி எழுதி, நடிக்கும் நாடகத்திற்காகத் தன் மகன் கைநிறையப் பணத்தோடு வருவான் என எதிர்பார்க்கும் தங்கவேலுவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். பரிசாக ஒரு பேனா கிடைத்ததாக சிவாஜி சொல்லுவார். அப்போது அப்பா தங்கவேலு இப்படிச் சொல்லுவார்: “முட்டாப்பயலே. மூணு மாசமா நாடகம் எழுதி, மூஞ்சீல அரிதாரம் பூசி மூணுமணிநேரம் நடிச்சுப்புட்டு, மூணு அணா பேனா தந்தான்னு வந்திருக்கியே...” மதுரைவீரனில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வீரனாக வரும் எம்.ஜி.ஆர். காதலிப்பதோ அரசகுமாரியை. வீரனின் அப்பாவாக வரும் கலைவாணர் தன் மனைவி - வீரனின் அம்மாவான மதுரத்திடம் இப்படிச் சொல்வார்: “ நீ ராஜகுமாரிக்கு அத்தை. நிஜமாவே சொல்றேன் நீ கட்டாயம் செத்தே..!” மிகப்பெரிய வெற்றிப் படமான நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய வசனம்: “நாங்கள் கொள்ளையடிப்போம்... நல்லவர் உள்ளங்களை! நாங்கள் தீயிடுவோம்... தீயவைகளுக்கு! நாங்கள் கொன்று குவிப்போம் கூடாதவைகளை!”.