இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் திரைப்படம் ஒன்றில் முக்கியவேடத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் அந்தப் படத்துக்கு ‘அரிசி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மோனிகா புரொடக்ஷன் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார். இளையராஜா இசை, ஜான்சன் ஒளிப்பதிவு, இந்தப் படத்தை எஸ்.ஏ.விஜய்குமார் இயக்குகிறார். தோழர் இரா.முத்தரசனின் இணையராக ரசியா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் விஜய்குமார் கூறுகிறார்: “இதில் நடிக்குமாறு முத்தரசன் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்துவிட்டார். அரசியல் பணிகள் காரணமாக நடிக்கவெல்லாம் இயலாது என்று கூறிவிட்டார். இருப்பினும் இந்தக் கதையின் கருத்தை நீங்கள் சொல்வதாக இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று அவரிடம் சொன்னோம். அவரும் கதையைக் கேட்டார். விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை அது. முதலில் தயக்கத்துடன்தான் படப்பிடிப்புக்கு வந்தார். பிறகு போகப்போக இயல்பாகிவிட்டார். இதில் அவர் மிகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல. அது மனித வாழ்வின் உயிர் நாடி என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதுதான் கதை. ஒரு விவசாயியாக இரா. முத்தரசன் அவர்கள் பேசுகிற வசனங்கள் எல்லாமே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்!” என்றார்.