சென்னை,அக்டோபர்.19- சமீபத்தில் வெளியான நந்தன் படக்குழுவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கலைஞர் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் திரைப்படம் சாதியக் கொடுமைகளைப் பற்றியும், தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆதிக்க சாதியினரால் எவ்வாறு துன்புறுத்தப்பட்டு, அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் சரவணன், திரைக் கலைஞர் சசிக்குமார் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், ஜான்சி ராணி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.