business

img

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 10.88% சரிந்தது.... இறக்குமதியைக் குறைத்த அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்.....

கொச்சி:
கொரோனா தொற்று அச்சம், நாட்டின் கடல் உணவு ஏற்றுமதியில் 10.88 சதவிகித சரிவை ஏற்படுத்தியுள்ளது.2019 - 2020 ஆம் ஆண்டில் நாட்டில்கடல் உணவு ஏற்றுமதி 12 லட்சத்து 89 ஆயிரத்து 651 டன்களாக இருந்த நிலையில், இது 2020-21-ஆம் ஆண் டில் 11 லட்சத்து 49 ஆயிரத்து 341 டன்களாகக் குறைந்துள்ளது. 2019 - 2020ஆம் ஆண்டில் இந்தியாஏற்றுமதி செய்த கடல் உணவின் மதிப்பு ரூ. 46 ஆயிரத்து 662 கோடியே85 லட்சமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் முன்னணிஇறக்குமதியாளர்களாக அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா 2 லட்சத்து 72 ஆயிரத்து41 டன்களும், சீனா ஒரு லட்சத்து ஆயிரத்து 846 டன்களும், ஐரோப்பிய ஒன்றியம் 70 ஆயிரத்து 133 டன்களும்,ஜப்பான் 40 ஆயிரத்து 502 டன்களும், தென்கிழக்கு ஆசியா 38 ஆயிரத்து 389 டன்களும் மற்றும் மத்திய கிழக்குஆசியா 29 ஆயிரத்து 108 டன்களும் ஆண்டொன்றுக்கு இறக்குமதி செய்துவருகின்றன.ஆனால், கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த நாடுகள் தங்களின் இறக்குமதியைக் குறைத் துக் கொண்டுள்ளன. 

குளிர்ந்த மற்றும் நேரடி மீன்களின்ஏற்றுமதி முறையே 16.89 சதவிகிதம் மற்றும் 39.91 சதவிகிதம் என குறைந்துள்ளது. உறைந்த ஸ்க்விட் மற்றும் உறைந்த கட்ஃபிஷ் ஏற்றுமதி முறையே 30.19 சதவிகிதம் மற்றும் 16.38 சதவிகிதம் குறைந்துள்ளது. பொதுவாக கடல் உணவு ஏற்றுமதிகுறைந்தாலும், இந்தக் காலத்தில் உறைந்த இறால் முக்கிய ஏற்றுமதி பொருளாக அதன் நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உறைந்த இறால் அளவு ஏற்றுமதியில் 51.36 சதவிகிதமாகவும், மொத்தடாலர் வருவாயில் 74.31 சதவிகிதமாகவும் பங்களிப்பை கொண்டிருக்கும் நிலையில், இறால் ஏற்றுமதி 9.50 சதவிகிதம், டாலர் மதிப்பில் 9.47 சதவிகிதம் என்ற அளவிலேயே குறைந்துள்ளது. உறைந்த மீன் ஏற்றுமதி அளவு 15.76 சதவிகிதம் மற்றும் டாலர் அடிப்படையில் 21.67 சதவிகிதம் என்ற அளவிலேயே ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது. இதுவே உலர்ந்த மீன்களை எடுத்துக் கொண்டால், அது ஏற்றுமதி அளவில் 1.47 சதவிகிதமும், ரூபாய்மதிப்பில் 17 சதவிகிதமும் அதிகரித் துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில், நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி முதல்அரையாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகடைசிக் காலாண்டில் நிச்சயம் மீளும்என்று கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்.பி.இ.டி.ஏ) தலைவர் கே.எஸ். ஸ்ரீனிவாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.