articles

img

உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் உரத்த குரலாய் வேலைநிறுத்தம்...

தொழிலாளர்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு.  இவர்கள் தான் நாட்டின் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள்.  பொருளாதார ஆய்வறிக்கை 2018-19ன்படி, 93 சதமான தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். நிதி ஆயோக்கின் நவம்பர் 2018 அறிக்கை 85 சதமானம் பேர் தான் முறை சாரா தொழிலாளர்கள் என்கிறது. வெவ்வேறு புள்ளிவிவரங்கள் முறைசாரா அல்லது அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிடுகின்றன. இவர்களது உழைப்பில் இருந்துதான் நமது நாட்டின் வருமானத்தின் 60 சதத்திற்கு மேல்உருவாகிறது.  அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 50 சதமானம் இந்த அமைப்பு சாரா துறையின் மூல மாகத்தான் வருகிறது.

யார் இந்த முறைசாரா தொழிலாளி?
நிரந்தரமான வேலை இல்லாதவர்கள், தினக் கூலிகள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தகுதி குறைந்த வேலையில் இருப்பவர்கள், பாதுகாப்பான தரமான வேலை இல்லாதவர்கள், காரணமே குறிப்பிடாமல் எப்போதுவேண்டுமானாலும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், கூடுதல் வேலை நேரம் கூலியில்லாமல் உழைக்க வேண்டியவர்கள், சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லாதவர்கள், விடுமுறை என்பதே இல்லாதவர்கள், பாதுகாப்பற்ற பணிச்சூழலில் வேலை செய்பவர்கள், பாலின அடிப்படையிலும் பாரபட்சத்தை சந்திப்பவர்கள், ஏற்றத்தாழ்வான கூலியினை உடையவர்கள் - இவர்கள் எல்லோருமே முறைசாரா தொழிலாளர்கள் தான்.  அதே போல, ஒரு குடும்பத்திற்காக அல்லதுஒரு நிறுவனத்திற்காக உழைக்கக்கூடியவராக, தன்னுடைய முதலாளி யார் என்றே தெரியாதவராக, தனது உழைப்பினை செலுத்துபவராக, தன்னுடைய முதலாளியுடன் பணிகுறித்த எந்தவிதமான முறையான ஒப்பந்தமும் இல்லாதவராக, தற்காலிக அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை பார்ப்பவராக, வரைமுறைப்படுத்தப்பட்ட வேலைநேரம், வரைமுறைப்படுத்தப்பட்ட ஊதியம் எதுவும் இல்லாதவராக, நிரந்தர ஊதியமில்லா சுய தொழில் செய்பவராக, அரசாங்கத்திடம் பதிவு செய்யாத, வரி கட்டாத முதலாளியின்கீழ் வேலை செய்பவராக இருப்பவரும் முறை சாரா தொழிலாளியாவார்.

இப்படிப்பட்ட பணியில் இருப்பவர்களில் சாலையோர வியாபாரிகள்,  இன்றைக்கு நாம் பார்க்கின்ற ஹோட்டல்களில் பணியாற்றுபவர்கள், வீடுகளில் வேலை செய்பவர்கள், குப்பைகளை பொறுக்குபவர்கள், விவசாயக் கூலிகள், இன்றைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாக அடிமைகள் போன்று வாழ்பவர்கள் என்பவர்களும் அடங்குவர்.

குழந்தை - பெண் தொழிலாளர்கள்
தங்கள் குழந்தைப் பருவத்தைத் தொலைத்த குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் மிக அதிகம். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே பார்த்தால் கூட, 5 முதல் 14 வயது வரை உள்ள 259.64 மில்லியன் குழந்தைகளில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10.1 மில்லியன் ஆகும். தங்களுடையமுதுமைக்கால சுமைகளோடு சேர்த்து, ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவளிக்கும் சுமையை சுமக்கும் முதியவர்கள் அதைவிட அதிகம். தன்னையும், தனது குடும்பத்தையும் சுமக்க வேண்டிய சுமைகள் போதாது என்று சொந்த உடலின் உரிமையையும்உயிர் வாழும் உரிமையையும் இழந்து, இருத்தலே கேள்விக்குறியாகி அபலைகளாக நிற்கும் பெண் தொழிலாளர்கள் அதிகத்திலும் அதிகம். 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 149.8 மில்லியன் பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.

அதேபோல இன்று, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகளில் கூடதொழிலாளர்கள் எந்தவித சமூகப் பாதுகாப்புமற்ற தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.  தேசிய பொருளாதார ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தமுள்ள 45 கோடி  தொழிலாளர்களில் 42 முதல் 43 கோடி தொழிலாளர்கள் உதிரிப்பாட்டாளி வர்க்கமாக இருக்கிற முறைசாரா தொழிலாளர்கள் தான்.  அதிலும் மீதியுள்ள அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக உள்ள 7 முதல் 8 கோடி தொழிலாளர்களிலும் இன்றைக்கு காண்டிராக்ட் தொழிலாளர்கள், NEEM பயிற்சி தொழிலாளர்கள்(16 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள்), குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு (Fixed Term Employment) என்ற பெயரில் மாற்றப்பட்ட தொழிலாளர்கள் கணிசமான பகுதியினராக மாறியுள்ளனர்.  

தற்போது, கொரோனா ஊரடங்கு மூலம், நாட்டில் சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்தியப்பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.  வேலையின்மையின் விகிதாச்சாரம் 23 சதத்திற்கு உயர்ந்துள்ளது. இவர்களில் கிட்டதட்ட அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள்தான். 

பேரம் பேசும் சக்தி குறைகிறது
அணி திரட்டப்படாத துறையில் 93 சதத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் எனும்போது தொழிலாளி வர்க்கத்தின் கூட்டுப் பேர சக்தி குறைகிறது.  நிரந்தரமற்ற, தரமற்ற பணிகளில், பணிச்சூழல்களில் உள்ள, எந்த
நேரமும் வேலை தேடிக் கொண்டிருக்கிற, அன்றாடங்காய்ச்சிகளாக மாற்றப்படுகிற தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுவதனால் சமூக சம நிலை பாதிக்கப்படுகிறது.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது.
இப்படி மாற்றப்படும் தொழிலாளர்களை அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எதிராளிகளாக முதலாளித்துவ அமைப்பு முறை இன்றைக்கு நிறுத்திக் கொண்டிருக்கிறது.  தொழிலாளி வர்க்கத்திற்குள்ளேயே ஒற்றுமையில்லா நிலையை ஏற்படுத்த முனைகிறது.  குழப்பங்களை உருவாக்குகிறது. இதன் மூலம், தாங்கள் பல காலம் போராடி பெற்றெடுத்த சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை,வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை தக்க வைக்கவும், திரும்பப் பெறவுமே பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ள சூழலில் இருக்கின்ற தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சிதைக்கிறது. இதன்மூலம்முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களை பிசுபிசுத்துப் போகச் செய்திட முயற்சிக்கிறது.  இன்றைக்கு தொழிலாளி வர்க்கத்தின் கடமை இந்த அமைப்பு சாராதுறையினரையும் இணைத்துக் கொண்டு அவர்களது சமூகப் பாதுகாப்பிற்காகவும் போராட வேண்டும் என்பதாகும்.

சமூகப் பாதுகாப்பு இல்லை
SWAN (Stranded Workers Action Network) என்ற அமைப்பு ஒரு புள்ளிவிவரத்தினை தெரிவிக்கிறது.   இதன்படி 50 சதமான தொழிலாளர்கள் இந்த மகா தொற்று காலத்தில்ஒரு நாளைக்கு அரசால் உத்தரவாதப்படுத்த வேண்டியரேஷன் பொருட்களில் பாதியைக் கூட பெற முடியவில்லை, 96 சதமான தொழிலாளர்கள் அரசிடமிருந்து ரேஷனே பெற முடியவில்லை. எனவே, மத்திய மாநில அரசுகளிடையே முறையான ரேஷன் விநியோகத்திற்கான திட்டமிடலும், நிதி ஒதுக்கீடும், விநியோக முறைகளும் அவசியமாகிறது.  ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் வாழ்வாதாரம், உணவு, உறைவிடம் என்று மூன்று உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளையும் உறுதி செய்வது அரசின் முக்கிய கடமையாகும்.  இதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டமிடல்கள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, பெரிய அளவில் அமைப்பு சாரா தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் 2008ன் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டியதும் அடையாள அட்டை அளிப்பதும் அவசியமாகும்.  தற்போது 90 சதமானஅமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களில் இணையாதவர்களாக அணி திரட்டப்படாதவர்களாக உள்ளனர்.  இவர்கள் சங்கங்களில் சேர்க்கப்பட வேண்டும்.  இன்றைக்கு, ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் இணைந்து நின்று தான் முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியத்தை ஏகபோகத்தை எதிர்க்க வேண்டியுள்ளது.  இல்லையென்றால் இருக்கிற உரிமைகள் பறிபோவதும், தக்கவைப்பதுமே கூட பிரச்சனையாகிவிடும்.

கொடிய சட்டங்கள்
ஆனால், மேலே கூறிய துயரமான நிலையில் இருந்துஏழை, எளிய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மீட்பதற்கு மாறாக எதிர்த் திசையில் ஆளும் வர்க்க அரசுகள் - குறிப்பாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கி வருவதுடன் அவர்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 29 தொழிலாளர் சட்டங்கள் இப்போது 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. 2019 ஆகஸ்ட்டில் முதல் தொகுப்பு சட்டம் “கூலித் தொகுப்பு சட்டம்- 2019” நிறைவேற்றப்பட்டது. 2020 செப்டம்பரில் மூன்று தொகுப்பு சட்டங்கள் (தொழிலுறவு தொகுப்பு சட்டம்- 2020, சமூகப் பாதுகாப்பு தொகுப்புசட்டம் - 2020, பணித்தல பாதுகாப்பு, உடல் நலம் மற்றும்பணி நிலைமைகள் தொகுப்பு சட்டம் - 2020) நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்த சட்ட தொகுப்புகள், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளையும் பறிக்கக் கூடியதாக இருக்கிறது.  குறிப்பாக சங்கம் சேரும் உரிமையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் பறி போகிறது.  நிரந்தர வேலைகளுக்கு மூடுவிழா நடத்துவதாக இந்த சட்டத்தொகுப்புகள் இருக்கின்றன.  அதேபோல, வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்களை விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பினையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றி யுள்ளது.மின் விளக்கை கண்டுபிடித்தவுடன் அன்றைய கொத்தடிமை கூலிகள் அதனை வெறுப்புடன் அடித்து நொறுக்கினார்கள் என்று பல மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறோம்.  காரணம், மின்விளக்கு இல்லாமலேயே 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது, மின் விளக்கு வந்து விட்டால் 24 மணி நேரமும் உழைக்க வேண்டியிருக்கும், முதலாளிகள் இன்னும் கொடூரமாக சுரண்டுவார்கள் என்பதை இதை விட விளக்க முடியாது.  தற்போதும்தொழிலாளர் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது.  பல மாநிலங்களில் இது அமலுக்கும் வந்துள்ளது கொரோனா மகா தொற்றின் பெயரிலே.

முறைசாரா தொழிலாளர் நிலை துயரத்தின் பிடியில் சிக்கியிருக்க அமைப்பு சார் தொழிலாளர் நிலையும் கொடும் சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.இ.பி.எப் மற்றும் இதர பிரிவுகள் சட்டத்தின் (EPF and Miscellaneous Provisions Act)  அடிப்படையில் உருவாக்கப்பட்ட மத்திய பி.எப் அறக்கட்டளை (Central Board of Trustees) தற்போது கலைக்கப்பட்டுள்ளது.  இ.பி.எப்க்கான பங்களிப்பை 12சதவீதத்திலிருந்து 10சதவீதத்துக்கு குறைத்திருக்கிறது.ரயில் போக்குவரத்து, ரயில் நிலையங்கள், ரயில் உற்பத்தி நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து, இலாபம் தரும் அரசுத்துறை நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள், இயற்கைவளங்கள், பாரத் பெட்ரோலியம் போன்ற வளமான பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு, ஏர் இந்தியா, தரைப் போக்குவரத்து, என அனைத்தும் விற்பனைக்கு.  அதைவிட விண்வெளி ஆராய்ச்சியிலும் கூட  தனியார்மயத்தை புகுத்தும் ஏற்பாடு நடக்கிறது.  பி.எஸ்.என்.எல் லுக்கு இன்றுவரை 4ஜி தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

பொது இன்சூரன்ஸ் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஜி.ஐ.சி ரீ மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.  தற்போது பங்குச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பட்டியலிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

கார்ப்பரேட்களின் செல்வக் குவிப்பு
அரசிற்கு வருமானம் வேண்டுமென்றால்,  கார்ப்பரேட் வரியை உயர்த்தலாம்.  அல்லது,  சூப்பர் ரிச் வரி, செல்வ வரி, வாரிசுரிமை வரி இப்படியெல்லாம் வரி விதிக்க முடியும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை.2019ல் இந்தியாவில் பெரும் முதலாளிகளின் செல்வமதிப்பு ரூ.945 லட்சம் கோடிகள். இதில் டாப் 1 சதவீதத்தினர் வசம் இருப்பது 42.3 சதவீதம். அதாவது ரூ. 400 லட்சம்கோடிகள். 2 சதவீத செல்வ வரி போட்டால் கூட ரூ.8 லட்சம் கோடிகள் கிடைக்கும். இந்த செல்வ வரியோடு சேர்த்து இந்தியாவில் வாரிசுரிமை வரியை டாப் 1 சதவீதத்தினரின் செல்வம் மீது 5 சதவீதம் என்ற அளவில் விதித்தால் அதன் மூலம் ஆண்டிற்கு ரூ 6.67 லட்சம் கோடி கிடைக்கும். அப்படியெனில் டாப் 1 சதவீதம் பேரிடம் இருந்து ஆண்டிற்கு மொத்தம் ரூ.14.67 லட்சம் கோடிகள், அதாவது நடப்பு ஜி.டி.பி யில் 14.67 லட்சம் கோடிகள் கிடைக்கும்.சேம நல அரசு என்ற முறையில் இந்திய மக்களின் ஐந்து அடிப்படை பொருளாதார உரிமைகளைப் பலப்படுத்த முடியும். உணவு உரிமை, வேலை உரிமை, பொது சுகாதார உரிமை, பல்கலைப் பட்டம் வரை அரசு நிதியுடனான கட்டணமற்ற கல்வி உரிமை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் ஆகியன ஆகும். இவற்றை நிறைவேற்ற கூடுதலாக ஜி.டி.பியில் 10 சதவீதம் தேவைப்படும். மேற்கண்ட வரிகள் மூலம் கிடைக்கிற வருவாய் மூலம் இவற்றைப் பலப்படுத்த முடியும். இவை சந்தையில் ஏற்படுத்துகிற பொருளாதார சுழற்சியின் காரணமாக கூடுதலாக 15 சதவீதத்தை மீண்டும் வரிகளாக அரசிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக் கூறுவதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் 1991ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நவம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள 20-வது அகில இந்திய வேலைநிறுத்தம் இந்தக் கோரிக்கைகளை உரத்து முழங்குகிறது.

கட்டுரையாளர்: ஆர்.எஸ்.செண்பகம், மாநில துணைத் தலைவர், சிஐடியு

;