முதலாளித்துவத்தின் முகமூடி கிழிகிறது!
தற்கால முதலாளித்துவம் முட்டுச் சந்தில் நிற்கிறது. 2008-இல் ஏற்பட்ட உலக முதலா ளித்துவ நிதி/ பொருளாதார நெருக்கடிக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. உலகம் முழு வதும் முதலாளித்துவத்திற்கு உண்மையான, விஞ்ஞா னப்பூர்வமான மாற்று, விஞ்ஞான சோசலிசமே என கம்பீரமாக உரக்க முழங்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம்!
கொடூரமாக மாற்றும் நெருக்கடி
முதலாளித்துவ சமூக, பொருளாதார அமைப்பில் அவ்வப்போது நெருக்கடி ஏற்படும். சில உடனடி தீர்வுகளும் எட்டப்படும். ஆனால் 2008 நெருக்கடி, தீர்வுகள் இன்றி, முதலாளித்துவத்தை மேலும் கொடூர மாக மாற்றி வருகிறது. முதலாளித்துவம் சந்தித்த நெருக்கடிகளிலேயே ஆகப்பெரும் நெருக்கடி 1929-33-இல் ஏற்பட்டது. இது மகா நெருக்கடி காலம் என அழைக்கப்படு கிறது. இதுவரை உலகில் நடைபெற்ற இரண்டு உலக யுத்தங்களும், முதலாளித்துவத்திற்கு நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கையாளப்பட்ட உத்தி களாகும். 1945 இரண்டாவது உலக யுத்தம் முடிவுற்ற பிறகு, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிச நாடுக ளாக மலர்ந்தன. சோவியத் யூனியன் தலைமையில் சோசலிச முகாம் உருவானது. முதலாளித்துவம் நெருக்கடிகளை சந்தித்து வந்த போதிலும், சோவியத் யூனியனின் நெருக்கடிகள் அற்ற, சோசலிச பொரு ளாதார வளர்ச்சி உலகம் முழுவதும் உள்ள உழைப் பாளி வர்க்கத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. சோசலிச சித்தாந்தம் மகத்தான செல்வாக்கு பெற்றது. இதை கண்டு மிரண்டு போன முதலாளித்துவ நாடு கள், சோசலிச அமைப்பிற்கு மாறாமல், முதலா ளித்துவ சமூக அமைப்புக்குள்ளேயே, தொழிலாளி வர்க்கம் அரசின் பல சேம நலத் திட்டங்களை அனுப விக்க முடியும் என்ற நிலையை உருவாக்கின.
முதலாளித்துவத்தின் ‘பொற்காலம்’
காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில், நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப் பட்டது. வேலையின்மையைப் போக்கிட, கீன்ஸ் என்ற முதலாளித்துவப் பொருளாதார நிபுணரின் சித்தாந்தப்படி, அரசு பெருமளவில் தனது முதலீடு களை அதிகரித்தது. இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, சரக்குகளுக்கு கிராக்கி உயர்ந்தது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின. சமூகப் பாதுகாப்பு, பொதுக் கல்வி, பொது சுகாதாரம் போன்ற சேம நல நடவடிக்கைகளும் மக்களை கவர்ந்தன. இத்தகைய மாறுதலால் முதலாளித்துவம் மாறி விட்டது; அது முன் போல சிறு வணிகர்களை கொள்ளை அடிக்கும் (PRIMITIVE CAPITALISM) முதலா ளித்துவம் அல்ல என்ற கருத்து பரவியது. 1945 முதல் 1970 வரை, உலக முதலாளித்து வத்தின் பொற்காலம் எனலாம். அதாவது நெருக்க டிகள் இன்றி, சேம நல அரசுகளாக, யுத்த சேதாரங்க ளை நீக்கி, பொருளாதார மறுநிர்மாணப் பணிகளில் தீவிரமாக, முதலாளித்துவ நாடுகள் ஈடுபட்டன. 1970- களில் பெட்ரோல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்க ளின் விலைகள் உயர்ந்தன. இதன் மூலம் பெரு முதலாளிகள் சம்பாதித்த டாலர்கள், பெட்ரோ டாலர்கள் என அறியப்பட்டது.
சர்வதேச நிதி மூலதனம்
சர்வதேச நிதி மூலதனம், நேரடியான தொழில் மூலதனமாக இன்றி, யூக வணிகம் மூலம் குறுகிய காலத்தில் துரித லாபம் ஈட்டும் மூலதனமாக வளர்ந்தது. இது அனைத்து நாடுகளின் நிதி மூல தனங்களை உள்ளடக்கியதாகும். உலகம் முழு வதும் சுதந்திரமாகச் சுற்றிவர சர்வதேச நிதி மூலதனம் விரும்புகிறது. தனது உலகளாவிய பயணத்தில் வரும் அனைத்து தடைகளையும் நொறுக்கிட துடிக்கி றது. பொதுத் துறையை, சாமானிய மக்களுக்கான மானியங்களை, அரசுகளின் வரம்புகள் அற்ற பற்றாக் குறை பட்ஜெட்டுகளை, சர்வதேச நிதி மூலதனம் விரும்புவதில்லை. சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைக்கிணங்க 1990- களில் இருந்து, குறிப்பாக சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு, தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்ற எல்பிஜி (LPG) கொள்கைகளை அரசு கள் அமலாக்க நிர்பந்திக்கப்பட்டன. சர்வதேச நிதி மூலதனத்தின் கருவிகளாக உலக வங்கி, ஐஎம் எப் போன்றவை செயல்படுகின்றன. இவைகளில் ஜன நாயகச் செயல்பாடுகள் இல்லை.
ஐஎம்எப்-இல் அமெரிக்க ஆதிக்கம்
உதாரணமாக ஐஎம்எப்இல் நாடுகளின் வாக்கு கள், அவர்கள் ஐஎம்எப்இல் செய்துள்ள பங்குகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெ ரிக்காவின் பங்கு 17.45 %, சீனா 6.41 %, இந்தியா 2.75% . அமெரிக்காவின் பங்கு தான் உலகிலேயே அதிகம். ஒரு நாடு, ஒரு வாக்கு முறை அல்ல. சர்வதேச நிதி மூலதனத்தில் பெரும்பங்கு அமெரிக்காவினு டையது. எனவே அமெரிக்கா, பொருளாதார ரீதியாக, ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக தனது மேலாண் மையை தக்க வைக்க தொடர்ந்து உலக சட்டாம் பிள்ளை போல் ஆணவமாக நடந்து கொள்கிறது. உலக மக்களின் நலன்கள், அமெரிக்க மக்களின் நலன்கள், குறிப்பாக, அமெரிக்க ஆளும் வர்க்கங்க ளின் நலன்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற திசைவழியில் அமெரிக்க ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். தற்போது, உலக மக்களின் பொது எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற விழிப்பு ணர்வு, உலகம் முழுவதும் பரவி வருகிறது.
நவீன காலனி ஆதிக்கச் சுரண்டல்
சர்வதேச நிதி மூலதனத்தின் தாக்கத்தால், நாடுக ளின் இறையாண்மை கேள்விக்குறியாகி வருகிறது. சோசலிசத்தின் செல்வாக்கை மட்டுப்படுத்த, உலக முதலாளித்துவம் பின்பற்றிய பழைய பாதையில் இருந்து விலகி, தனது நாசகர, கோர முகத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. நவீன காலனி ஆதிக்கத்தைப் புகுத்திட, உலக பாசிச சக்திகள் முயல்கின்றன. காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை முற்றாக அகற்றிவிட்டு, அந்த பகுதி முழுவதும் சுற்றுலா தளம் ஆகும் திட்டத்தை டிரம்ப் அறி வித்தார்; இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு இதற்கு ஆதரவு அளித்துள்ளார். ஐஎம்எப் கடன்களால், கடன் சுமை /கடன் வலையில் தள்ளப் பட்ட, வளர்ந்து வரும் நாடுகள், அமெரிக்க ஏகாதி பத்திய நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து, நவீன காலனி ஆதிக்க முறையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து சேர்ந்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகள் தங்க ளது கச்சாப் பொருட்களை மலிவாக ஏற்றுமதி செய்து விட்டு, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சரக்குகளுக்கு, அதிக விலை கொடுத்து, இறக்குமதி செய்கின்றன. இது நவீன காலனி ஆதிக்கச் சுரண்டலாகும். நாடாளுமன்ற ஜனநாயகம், பல முதலாளித்துவ நாடுகளில் இந்தியா உள்பட கேலிக்கூத்தாகி வரு கின்றது. நம் நாட்டில் உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் என அறிவித்தது. இருப்பினும் பாஜக ஏராளமாக இந்த திட்டத்தில் நன்கொடை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. நாடாளுமன்றம் கூடும் நாட்கள் கணிச மான முறையில் குறைக்கப்பட்டுள்ளது. கூடினாலும் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற உரிய நேரம் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிதற்றல் போன்றவை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தானே? கார்ப்பரேட்டுகளின் அபரிமித வளர்ச்சியை ஊக் கப்படுத்தி வரும் நவீன பாசிச சக்திகள் முன்னுக்கு வரு வதை இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பார்க்க முடிகிறது. 2014-இல் நம் நாட்டில் இருந்த 100 பில்லியனர்கள் (ரூ.100 கோடிக்கு மேல் சொத்து) 2025-இல் 200 ஆக அதிகரித்துள்ளனர். கார்ப்பரேட் வரி 2019-இல் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. 11 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடிக்கு மேல் கார்ப்பரேட்டுகளுக்கு, அரசு வங்கி களின் வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மூல தனம்/ உற்பத்தி/ வேலை வாய்ப்பு ஊக்க ஊதியமாக சுமார் ரூ.5 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு கூச்ச நாச்சம் இன்றி தாரை வார்க்கப்படுகிறது. சொத்து வரி, வாரிசு வரி ரத்தாகி பல ஆண்டுகள் கடந்து விட்டன. அமெரிக்காவிலும் பெரிய அழகிய மசோதா சட்டமாகிவிட்டது. இதன்படி, அடுத்த 10 ஆண்டுக ளில், 4.5 லட்சம் கோடி டாலர், மொத்த வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பணக்காரர்க ளுக்கு தான் இந்த சலுகை செல்கிறது.
ராணுவச் செலவை அதிகரிக்க நிர்பந்தம்
அமெரிக்க அரசு செய்கின்ற ராணுவச் செலவு மற்றும் எல்லை பாதுகாப்புச் செலவு ஆண்டுக்கு 27 ஆயிரத்து 900 கோடி டாலர் ஆக அதிகரித்துள்ளது. உலகில் மொத்த ராணுவச் செலவில், அமெரிக்கா வின் பங்கு 37 %, ஜெர்மனி 3.3%, இந்தியா 3.2%, பிரிட்டன் 3%. ஐரோப்பிய நேட்டோ நாடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தற்போது 2% ராணு வச் செலவு செய்து வருகின்றன. இதை 5% ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித் தது. நேட்டோ நாடுகளும் ஏற்றுக் கொண்டன. சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளை, நாடுகளின் நிதிப் பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை தாண்டக் கூடாது என்பதே. இந்தச் சூழ்நிலையில் பணக்காரர்கள் மீது வரிகளை கூட்ட மாட்டார்கள். அதற்கு பதிலாக நிதிப் பற்றாக்குறையை குறைத்து விட அரசின் சேம நல நடவடிக்கைகளை வெட்டிச் சுருக்கு வர். சிக்கன சீரமைப்புக் கொள்கைகளை அமலாக்கு வர். தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் தீவிரப் படுத்தப்படும். சேம நல முதலாளித்துவம் கைவிடப் பட்டு, சிறு வணிகர்களை கொள்ளை அடிக்கும் புராதன (முந்தைய) முதலாளித்துவம் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மூர்க்கத்தனமான, மனிதாபிமானமற்ற யுத்தம்
ஒட்டு மொத்த நேட்டோ நாடுகள் செய்யும் ராணு வச் செலவில், மூன்றில் ஒரு பங்கு அளவே, ரஷ்ய இராணுவச் செலவு உள்ள போதிலும், ரஷ்யா அச்சுறுத்தல் என மேற்கத்திய நாடுகள் அலறுகின்றன. ரஷ்யா அச்சுறுத்தல் என கூறுவது, ரஷ்யாவுக்கு ஆதர வாக உள்ள ஈரான் போன்ற நாடுகளின் மீது ஆக்கிர மிப்புத் திட்டங்களை நடத்துவது என்பது, ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்கு தல் மூலம் தெளிவாகிவிட்டது. வரும் காலங்களில் முதலாளித்துவ நாடுகள் பல மூர்க்கத்தனமான, மனி தாபிமானமற்ற வகையில் பிற நாடுகளின் மீது ஆக்கிர மிப்பு யுத்தம் தொடுக்கும் அபாயம் வளர்ந்து வருகிறது. இதற்கு எதிராக உலக மக்கள் விழிப்புணர்வு பெறுவ தும், யுத்த எதிர்ப்பு, ஆக்கிரமிப்பு எதிர்ப்பு, இனப் படுகொலை எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடு படுவது, தீவிரப்பட வேண்டிய காலம் இது. சேம நல அரசாக இனியும் முதலாளித்துவ அரசு கள் நீடிக்காது; உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சகல உரிமைகளும், பலன்களும் பறிக்கப்படும். குறிப்பாக 8 மணி நேர வேலை என்ற விஞ்ஞானப் பூர்வ வேலை நேர பாதுகாப்பிற்கு, மிகப் பெரும் அச்சு றுத்தல் ஏற்படும். உலகில் அசமத்துவம் வரலாறு காணா வகையில் அதிகரிக்கும் . உழைக்கும் வர்க் கத்தின் உண்மை ஊதியம்/ வருமானம் தேய்ந்து கொண்டே போகும். நிரந்தர வேலை வாய்ப்பு என்பது கானல் நீர் ஆகிவிடும். பருவ நிலைகளில் ஏற்படும் நாசகர மாறுதல்களால், பல சிறிய தீவுகள் உள்ளிட்டு, பல நாடுகளில் வெப்ப உயர்வு, திடீர் மழை, வெள்ளம், காட்டுத்தீ பரவுதல் போன்ற நிகழ்வுகளை உலகம் சந்திக்கும். முதலாளித்துவ அரசுகள் பின்பற்றும் கொள்கைகளால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்து நாம் போராடினால் மட்டும் போதாது. இந்த விளைவு களுக்கு காரணமான, அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். அக் கொள்கைகளின் பின்னால் உள்ள ஆளும் வர்க்கங்களின் அரசியலை எதிர்த்து போராட்டங்களை, மென்மேலும் உயர் வடிவங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கட்டுரையாளர் : சிஐடியு மாநில துணைத் தலைவர்