articles

img

ஒரு சாலை கூட மிஞ்சவில்லை...

டிசம்பர் 12 சனிக்கிழமை 16ஆவது நாளை எட்டியது இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி.தில்லியைநோக்கி செல்லும் சாலைகள் அனைத்துமே கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டன. தில்லிக்கு வடக்கே உள்ள மாநிலங்களிலிருந்து தில்லியை இணைக்கும் நாக்கு பிரதான சாலைகளான சிங்கு, திக்ரி,ஜரோதா மற்றும் சில்லா ஆகியவை முற்றாக எங்கெங்கு திரும்பினும் விவசாயிகளும், டிராக்டர்களுமாகநிரம்பி வழிகின்றன. உத்தரப்பிரதேசத்திலிருந்து தில்லியை இணைக்கும்மீரட் - தில்லி தேசியநெடுஞ்சாலையை அத்தனை எளிதில் கடந்து விட முடியாது. இப்போது அந்தச் சாலையில் நாய்கள்படுத்து உறங்குகின்றன. குழந்தைகள் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ராஜஸ்தானிலிருந்து தில்லியை இணைக்கும் ஜெய்ப்பூர் சாலையும் தென்மாநிலங்களை தில்லியுடன் இணைக்கும் ஆக்ராநெடுஞ்சாலையும் விவசாயிகளால் நிரப்பப்பட்டிருக்கின்றன. சுங்கச் சாவடிகளில் நுழையவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் மேலும் மேலும் வலுவடைந்திருக்கிறது விவசாயிகள் போராட்டமும் அவர்களுக்கு ஆதரவான போராட்டங்களும். ‘குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக’ (மினிமம் சப்போர்ட் பிரைஸ்) - ‘அதிகபட்ச ஆதரவுபோராட்டம்’ (மேக்சிமம் சப்போர்ட் புரெட்டஸ்ட்) என்று இதை வர்ணித்திருக்கிறது அவுட்லுக் ஏடு.

1   இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி லண்டன், சிட்னி, கலிபோர்னியா உள்பட உலக நாடுகளின் பல முக்கிய நகரங்களது தேசிய நெடுஞ்சாலைகளிலும், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் தொடர்கின்றன.

                                                                                                              **********************

2 இந்திய விவசாயிகளின் எழுச்சியை 1921ல் நடைபெற்ற கேரளாவின் மாப்ளா எழுச்சி, 1946ல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய மிக பிரம்மாண்டமான தெலுங்கானா புரட்சி, 1946-47ல் வங்கத்தில் நடத்திய தேபாகா எழுச்சி, கேரளத்தில் நடத்திய புன்னப்புரா - வயலார் போராட்டம், தமிழகத்தில் நடந்த கீழத்தஞ்சை விவசாயிகளின் எழுச்சி ஆகியவற்றுக்கு இணையானவை என்று வர்ணித்திருக்கிறார் அவுட்லுக் ஏட்டின் கட்டுரையாளர் அஜித்குமார் ஜா.

                                                                                                              **********************

3 இதற்கு முன்பு சுதந்திர இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது 32 ஆண்டுகளுக்கு முன்பு 1988ல் அக்டோபர் 25ல் துவங்கி ஒரு வார காலம் ஐந்து லட்சம் விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்ட போராட்டமாகும். அதில் பெரும்பாலும் மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து தில்லியில் குவிந்த விவசாயிகளே அதிகம். ஆனால் இப்போது குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் களம் இறங்கியுள்ளது. தில்லியை முற்றுகையிட்டிருப்பவர்கள் லட்சக்கணக்கில் அல்ல, கோடிக்கணக்கில். 

                                                                                                              **********************

4 மோடி அரசை மட்டுமின்றி அதன் கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகளான அதானி, அம்பானி குழுமங்களையும் குறிவைத்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் சட்டங்களில் விவசாயிகள் விரும்பும் திருத்தங்களை செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கு கூட தயார் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறு பேச்சுக்கு இடமில்லை என்று சம்யுக்த கிஷான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

                                                                                                              **********************

5 கடந்த 17 நாட்களில் போராட்டக் களத்தில் 11 விவசாயிகள் கடும் குளிரின் காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் மரணமடைந்துள்ளனர். “இன்னும் எத்தனை விவசாயிகளின் உயிர் தியாகம் செய்யப்பட்டால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வீர்கள்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. 

                                                                                                              **********************

6 ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டே மறுபுறம் வேளாண் சட்டங்களை பற்றி பெருமிதங்களை பீற்றிக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சனிக்கிழமை இந்திய தொழிலதிபர்களின் அமைப்பான பிக்கி 93ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கு உதவிட அரசு உறுதியேற்றிருக்கிறது என்றும், புதிய சட்டங்களும், சீர்திருத்தங்களும் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளையும் தொழில்நுட்பங்களையும் அள்ளி வழங்கப் போகிறது என்றும் கதை விட்டிருக்கிறார். 

                                                                                                              **********************

7ஆனால் விவசாயிகளின், ஆட்சியாளர்களின் எந்தக் கதையையும் நம்ப தயாராக இல்லை. பஞ்சாப்பிலிருந்து மேலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லிக்கு புறப்பட்டிருக்கிறார்கள். 7 மாவட்டங்களில் ஆயிரம் கிராமங்களிலிருந்து 1300 டிராக்டர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வாகனங்களில், பஞ்சாப்- தில்லியின் மற்றொரு எல்லையான குன்ட்லியை நோக்கி கிளம்பியிருக்கிறார்கள். 

                                                                                                              **********************

8 விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தை விமர்சித்து தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய கருத்துக்கள் தவறானவை என்றும், தனது ஆதரவு என்றென்றும் விவசாயிகளுக்கு உரியதே என்றும் டிசம்பர் 12 தனது பிறந்தநாள் செய்தியாக டிவிட் செய்துள்ளார். 

                                                                                                              **********************

9 நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களும் சமூக ஊடகங்களில் செயல்படும் அவர்களது கூலிப்படையினரும் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். போராட்டத்தின் மீதும், தலைவர்கள் மீதும் அவதூறுகளை வீசி வசைமாறி பொழிந்து வருகின்றனர். 

                                                                                                              **********************

10 பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைமை, விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும், இப்போராட்டத்தின் மூலம் அரசு இழிவுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தவும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் பிரச்சாரத்தை நடத்துமாறு தனது கட்சி தொண்டர்களுக்கு கூறியுள்ளது. 

                                                                                                              **********************

11 போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாரதிய கிஷான் யூனியன், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. கிஷான் யூனியன் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத், அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் முதலில் முதல்படியான அழைப்பு விடுக்க வேண்டும்;  நாங்கள் எங்களது அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழுவில் விவாதித்தப்பிறகுதான் அந்த அழைப்பை ஏற்பதா இல்லையா என்று முடிவு செய்வோம் என்று கூறினார். 

                                                                                                              **********************

12 மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பொது மக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். அரசு, வேளாண் சட்டங்களை திருத்துவது தொடர்பாக அனுப்பியுள்ள முன்மொழிவை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை கெஞ்சியுள்ளார். 

                                                                                                              **********************

13 பஞ்சாப் மாநிலத்தில் டிசம்பர் 14 அன்று காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துகிறது. தில்லியை இணைக்கும் மற்றொரு எல்லையான சாம்பு நகரில் போராட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாஹர் தெரிவித்துள்ளார். 

                                                                                                              **********************

14 சிங்கு, திக்ரி உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, குளிரை தாங்கக்கூடிய உணவும், கம்பளி உள்ளிட்ட உடைகளும் போதுமான அளவு இருக்கிறது, மேலும் வந்து கொண்டிருக்கிறது என்கிறார் சிங்கு எல்லையில் சமையல் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற 52 வயது விவசாயி மக்கன்சிங்.

                                                                                                              **********************

15 போராட்டக்களத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேநீர், தக்காளி சூப் உள்ளிட்டவை இரண்டு வேளை வழங்கப்படுகிறது. பஞ்சாப்பியர்களின் பிரத்யேக உணவுகளும், இனிப்புகளும் கூட எல்லோருக்கும் விநியோகிக்கப்படுகிறது. 

                                                                                                              **********************

16 சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது தில்லி மாநகராட்சியின் கடமையாகும். ஆனால் திட்டமிட்டே தில்லியில் செயல்படும் மாநகராட்சி நிர்வாகங்கள் வசதிகளை செய்து தர மறுக்கின்றன. இதன் விளைவாக அப்பகுதிகளில் குப்பைகள் அதிகரித்து வந்தன. முறையான கழிப்பிடங்கள், தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை. இதனால் இப்போது விவசாயிகளே துப்புரவாளர்களாகவும் மாறிவிட்டார்கள். தங்களுக்கிடையே வேலைகளை பிரித்துக் கொண்டு போராட்டக் களத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் இறங்கியிருக்கிறார்கள்.   

                                                                                                              **********************

17 உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் டிசம்பர் 14 அன்று தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், யோகி அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் தொடர் தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும் என்று சமாஜ் வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

                                                                                                              **********************

18 விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் ஆளும் பாஜகாவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சிக்குள் மோதல் எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைவரான துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா பாஜகவுடன் நெருக்கமாக உள்ள நிலையில் அவரது சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணியை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள். 

                                                                                                              **********************

19 ஹரியானா சட்டமன்றத்தில் 90 இடங்கள் உள்ளன. 2019 தேர்தலை தொடர்ந்து ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆறு இடங்கள் தேவைப்பட்டன. ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களை பெற்றிருந்தது. துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து கூட்டணி சேர்ந்தார்கள். இப்போது ஜேஜேபி விலகினால் ஹரியானாவில் ஆட்சியே கவிழ்ந்துவிடும். 

                                                                                                              **********************

20 விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் தலைசிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக செயலாற்றி ஓய்வு பெற்ற 78 பேர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி குணாம்சத்தையே அழித்துவிடும் என்று மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.  

                                                                                                              **********************

21 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விதம் முற்றிலும் அரசியல் சட்டவிரோதமானது என்று தங்களது அறிக்கையில் கூறியுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 78 பேர், 2020 செப்டம்பரில் வேளாண் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவற்றை நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது; சட்ட மசோதாக்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு அனுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்தில் சுட்டிக் காட்டப்பட்ட அம்சங்களுடன் அவற்றை செறிவூட்டுவது அல்லது திருத்துவது என்ற நடைமுறை மோடி ஆட்சியில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டது என சுட்டிக் காட்டியுள்ளனர். 

                                                                                                              **********************

22 நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை தெரிவுக்குழுக்களுக்கு அனுப்புவது என்ற உயரிய ஜனநாயக நடைமுறை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் (14வது மக்களவை) 60 சதவீதம் அளவிற்கு அதிகரித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது ஆட்சிக் காலத்தில் (15வது மக்களவை) 71 சதவீதம் என்ற உச்சக்கட்ட அளவை எட்டியது. ஆனால், பாஜக கூட்டணி அரசு மோடி தலைமையில் பொறுப்பேற்ற உடனே (16வது மக்களவை) இது 25 சதவீதமாக வீழ்ந்து, தற்போது மோடியின் இரண்டாவது ஆட்சியில் (17வது மக்களவை) கிட்டத்தட்ட தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்படுவதே இல்லை என்ற நிலைக்கு சென்றுவிட்டது என மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

                                                                                                              **********************

23 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் சாஹீன் பாக் என்ற இடத்தை மையமாகக் கொண்டு எப்படி பேரெழுச்சி ஏற்பட்டதோ, அதேபோல விவசாயிகளின் எழுச்சிக்கு ‘கிசான் பாக்’ என பெயரிட்டு, மகாராஷ்டிராவின் புனே நகரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் தர்ணா போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். டிசம்பர் 8 அன்று முதுபெரும் சமூகப் போராளி பாபா ஆதவ் துவக்கி வைத்த இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மேலும் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. 

                                                                                                              **********************

24 உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது சஹீல் முகமது குரேஷி என்ற இளைஞர் தில்லி-ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, குளிர் தாங்குவதற்கான 300 ஸ்வெட்டர் உடைகளை இலவசமாக கொடுத்திருக்கிறார். நான் விவசாயியின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் எனக் கூறும் அவரைப் போன்ற எண்ணற்ற சிறு வியாபாரிகள் தங்களால் முடிந்த பொருட்களை நேரில் வந்து வழங்கிய வண்ணம் உள்ளனர். 

                                                                                                              **********************

25 மத்தியப்பிரதேசத்தில் செயல்படும் அனைத்து விவசாயிகள் சங்கங்களும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்துள்ளன. மாநில பாரதிய கிசான் யூனியன் தலைவர் அனில் யாதவ், மாநிலம் முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டிசம்பர் 14 திங்களன்று ஜெய்ப்பூர் - தில்லி தேசிய நெடுஞ்சாலையில் மத்தியப் பிரதேச விவசாயிகள் ஆயிரமாயிரமாய் குவிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

                                                                                                              **********************

26 பீகாரில் நிதிஷ் குமார் அரசு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து முதன்முதலில் ஆட்சியமைத்த போது, அம்மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த மண்டிகள் எனக் கூறப்படும் விவசாய விளைபொருட்களுக்கான மொத்த விற்பனை மார்க்கெட்டுகளை (வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) முற்றாக மூடியது. இதன் விளைவாக 14 ஆண்டுகளாக விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேறி கூலித் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். அதேபோல, மத்தியப் பிரதேசத்திலும் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மண்டிகளை முற்றாக மூடியது. இது, கார்ப்பரேட்டுகளுக்கு மத்தியப்பிரதேச விவசாயத்தையும் விவசாயிகளையும் அடிமைகளாக்கும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு பகுதியே என விவசாயிகள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

                                                                                                              **********************

27 வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் உள்ள ஆதிவாசி மக்களும் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே நாடு முழுவதும் விவசாயிகளுடன் இணைந்து ஆதிவாசி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; இதில், இன்னும் ஆயிரமாயிரமாய் ஆதிவாசிகள் இணைந்து கொள்வார்கள் என்றும், ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மன்ச் (தேசிய ஆதிவாசிகள் விடுதலை முன்னணி) தலைவர்கள் பாபுராவ், ஜிதேந்திர சவுத்ரி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

                                                                                                              **********************

28  டிசம்பர் 14 திங்களன்று தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட தில்லியை நோக்கிச் செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளும் முற்றுகையிடப்பட இருப்பதால், பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, யமுனா எக்ஸ்பிரஸ்வே எனப்படும் பிரதான சாலையில் ஐந்து சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்குள் அதிரடியாக நுழைந்து தில்லியை அடைவோம் என விவசாயிகள் கூறியுள்ளனர். அதை தடுக்க, தில்லி காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

                                                                                                              **********************

29 பஞ்சாபின் அமிர்தசரசிலிருந்து பல்லாயிரக்கணக்கான டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், பேருந்துகள், கார்களில் ஏராளமான உணவுப் பொருட்களை நிரப்பிக் கொண்டு விவசாயிகள் கிளம்பியிருக்கிறார்கள். அமிர்தசரஸ், தரன்தரன், குர்தாஸ்பூர், ஜலந்தர், கபூர்தலா, மோஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து அமிர்தசரஸ் வழியாக இவர்கள் தில்லிக்கு கிளம்பியுள்ளனர். இவர்கள் ஜெய்ப்பூர் - தில்லி சாலையில் சங்கமிக்கிறார்கள்.

                                                                                                              **********************

30 டிசம்பர் 14 சுங்கச்சாவடிகள் முற்றுகை, அம்பானி-அதானி நிறுவனங்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் கூறியுள்ளனர். விரைவில் தேதி அறிவிக்கப்படும். இதனிடையே, தில்லியை நோக்கிச் செல்லும் அவுசாடி, மணியாரி, மங்கேஷ் ஆகிய சாலைகளும் விவசாயிகளால் நிரப்பப்பட்டுள்ளன. நொய்டாவிலிருந்தும் காசியாபாத்திலிருந்தும் தில்லிக்கு இப்போது செல்ல முடியாது. திக்ரிக்கு அருகில் உள்ள - தில்லி செல்லும் மற்றொரு பாதையான தன்சா எல்லையும் விவசாயிகளால் நிரப்பப்பட்டதால் மூடப்பட்டுள்ளது.

                                                                                                              **********************

31  பகத்சிங் உள்ளிட்ட மாவீரர்கள் செயல்பட்ட நவஜவான் பாரத் சபா, இன்றும் இயங்கி வருகிறது. அதில் உறுப்பினராக உள்ள ஹரியானாவைச் சேர்ந்த மரீந்தர சிங் போராட்டக் களத்தில் உள்ளார். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்கள், ஆனால் இந்த சட்டங்கள் அமலானால், ஒட்டுமொத்த விவசாயக் கொள்முதல் கட்டமைப்பும் அழிந்துவிடும். இப்போது எங்கள் எதிரில் மோடி அரசு மட்டுமல்ல, அம்பானியும் அதானியும் மற்ற கார்ப்பரேட்டுகளும்தான் என்கிறார்.

                                                                                                              **********************
32 குறைந்தபட்ச ஆதார விலை என்ற பெயரில் பல்வேறு வகை விளைபொருட்களுக்கு வெவ்வேறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஒரு விளைபொருளுக்கு தற்போது உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் ரூ.1800 கிடைக்கிறது என்றால், அதானியோ அல்லது அம்பானியோ நிச்சயம் கொடுக்கப் போவது இல்லை. அவர்கள் அடிமாட்டு விலைக்கு ரூ.500-க்கு கொடு, ரூ.1000-க்கு கொடு என்று இறங்கினால், ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என போராட்டக் களத்தில் உள்ள பேராசிரியர் இந்திரஜித் சிங் கூறுகிறார்.

                                                                                                              **********************
33 ஆட்சிக்கு வந்த மாநிலங்களிலெல்லாம் பாஜக ஏற்கனவே வேளாண் விளை பொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அழித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்திலும் இந்த மண்டிகள் கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் நிலக்கிழார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை விற்றுவிட்டு இப்போது பஞ்சாபில் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ் பதக் கூறுகிறார்.

                                                                                                              **********************

34 உலகிலேயே விவசாயிகள் தற்கொலை இந்தியாவில்தான் அதிகம்; ஒவ்வொரு வருடமும் சராசரியாக 6,500 இந்திய விவசாயிகள் தங்களது விவசாயம் அழிந்து போனதன் காரணமாக விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்ற தகவல், விவசாயப் போராட்டத்தினூடே, பிஎம்சி பப்ளிக் ஹெல்த் எனும் சர்வதேச ஆய்வு ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

                                                                                                              **********************

35 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைப் போலவே, இந்திய முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள், அதிகாரிகள் விவசாயிகளின் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள் என்று அவர்கள் மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அட்மிரல் லஷ்மி நாராயண் ராம்தாஸ், அட்மிரல் விஷ்ணுபகவத், துணை அட்மிரல் மதன்ஜீத் சிங், ராணுவ லெப்டினெட் ஜெனரல்கள் மேத்யூ மம்மன், விஜய் ஓபராய், நரீந்தர் பிரார், ஏர் வைஸ் மார்ஷல் கபில்கக் உள்ளிட்ட முதுபெரும் அதிகாரிகள் இதில் இணைந்துள்ளனர்.

                                                                                                              **********************

36  டிசம்பர் 12 சனிக்கிழமை நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த மறுத்து  விவசாயிகள் தில்லி செல்லும் இயக்கம் நடைபெற்றது. இதையொட்டி வட இந்திய மாநிலங்கள் முழுவதும் சுங்கச் சாவடிகள் ஸ்தம்பித்தன. அனைத்து சாவடிகளிலும் விவசாயிகள் கொடிகளோடு குவிந்து, கட்டணமிலலாமல் அனைத்து வாகனங்களையும் செல்ல வைத்தனர். 

                                                                                                              **********************

37 ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரம்- பூரி தேசிய நெடுஞ்சாலை, ஹரியானாவில் ஜஜ்ஜார் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளும் அனைத்து மக்களுக்காக விவசாயிகளால் திறந்து விடப்பட்டன. 

                                                                                                              **********************

38 உத்தரப்பிரதேசத்திலிருந்து தில்லி வரும் மற்றொரு முக்கிய தேசிய நெடுஞ்சாலை மீரட் - தில்லி சாலையாகும். இது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் சாலையின் நடுவே செங்கொடிகளை நட்டு மூடப்பட்டது. 

                                                                                                              **********************

39 உத்தரப்பிரதேசத்தின் மற்றுமொரு தேசிய நெடுஞ்சாலை மதுராவிலிருந்து தில்லிக்கு வருவதாகும். இதையும் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் குவிந்து மூடினர். 

                                                                                                              **********************

40 ஆத்திரத்தின் உச்சத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக சமூக ஊடக கூலிப் படைகள், விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணனை குறிவைத்து, அவரது ஆன்லைன் உரையின் போது அந்தத் திரையை ஹேக் செய்து ஆபாச படங்களை ஓட விட்டு இழிவுபடுத்தியுள்ளனர்.

முகப்பு படம் : 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் மீரட் - தில்லி சாலை... இன்று

===தொகுப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்===

;