மரண உணர்வை ஏற்படுத்தும் வறுமையின் துயரம் விடையைத் தேடி புறப்பட்டால் விடியல் பிறக்கும்!
கோடிக்கணக் கான மக்கள் வறுமையால் சாவது ஏன்? கடந்த ஆண்டைக் காட்டிலும் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இவ்வாண்டின் உணவு உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இது நமது காலத்தின் மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு அளிக்கப்பட்ட பின்னரும் உபரியாகவும் இருக்கும். இந்நிலையில் மனிதர்கள் வறுமைக்குத் தள்ளப்படுவது ஏன் என்பதை எவ்வாறு விளக்குவது? புள்ளிவிபர உண்மைகள் வறுமையின் பரவலான தாக்கம் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவு திட்டம், உலக சுகாதார அமைப்பு, விவசாய வளர்ச்சிக்கான சர்வதேச நிதி மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி போன்ற அமைப்புகளின் ஆய்வுகளின்படி 2023ஆம் ஆண்டில் 73 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டனர். உணவு உற்பத்தியின் மிகுதி உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2022ஆம் ஆண்டு கணக்கின்படி உலக விவசாயிகள் மற்றும் விவசாய வர்த்தக வியா பாரிகளால் 1100 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் இறைச்சி, மீன் மற்றும் 9.6 டன் அடிப்படை தானியங்களான சோளம், அரிசி, கோதுமை ஆகியவை அடங்கும். எளிமையான கணக்கு ஒரு முன்மாதிரியான எளிமையான கணக்கின் மூலம் இதைத் தெளிவுபடுத்தலாம். ஒரு மனிதர் ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் கிலோ உணவினை எடுத்துக்கொள்கிறார். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் கணக்கின்படி உலக அளவில் ஒரு சராசரி மனிதர் ஒரு நாளைக்கு 2800 கலோரியினை நுகர்கிறார். மேற்கண்ட கணக்கின்படி ஆண்டிற்கு ஒரு டன் உணவினை ஒரு மனிதர் எடுத்துக்கொள்ள, ஒரு ஆண்டிற்கு உலகளாவிய அளவில் 1100 கோடி டன் உணவு உற்பத்தியே போதுமானது. இதன்மூலம் 1100 கோடி மக்களுக்கு உணவு அளிக்க முடியும். தற்போதைய கணக்கின்படி உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடி. ஆகவே உலகில் வாழும் மக்கள் அனை வருக்கும் போதுமான உணவினை வழங்க முடியும். இதுதவிர உபரியாக மேலும் 300 கோடிப் பேருக்கு உணவு வழங்க முடியும். வறுமைக்கான மூன்று முக்கிய காரணங்கள் 1. போர்களின் அழிவுகரமான தாக்கம் மக்கள் ஏன் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை முதலாவதாக, உணவு மற்றும் விவசாயத்தை வழங்கிடும் விநியோக முறையினை போர்கள் அழிக்கின்றன என்பதன் மூலம் விளக்கலாம். இதுதான் மிகவும் கொடிய வறுமையினை உருவாக்குகிறது. சூடான் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவுவது ஏன்? ஆப்பிரிக்க நாடு முழுமை யும் உள்ள மக்களுக்கு உணவினை வழங்கக் கூடிய பரந்த விவசாய நிலப்பரப்பினை சூடான் கொண்டுள்ளது. அங்கு போர் மட்டும் இல்லையென்றால் ஆப்பிரிக்க மக்கள் அனைவரும் போதுமான உணவு பெற முடியும். போர் நிகழாதிருந்தால் எண்ணெய் வித்துக்களை (நிலக்கடலை, சோயா, சூரிய காந்தி, குங்குமப்பூ, எள் போன்றவை) பெரு மளவு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும். அரபு பசையின் ஏற்றுமதியில் 80 சதவிகிதம் சூடானின் கிராமப்புறங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படு கிறது. ஆனால் போரினால் விவசாயம் அழிக்கப்பட்டு, விவசாயத்திலிருந்து வெளி யேறிய விவசாயிகளின் கைகளில் துப்பாக்கி களுடன் போருக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2. உணவு விரயத்தின் மோசமான பழக்கம் இரண்டாவதாக நம்மிடையே உள்ள உணவுப் பொருட்களை வீணாக்கும் மோச மான பழக்கம். நம்முடைய உணவின் ஐந்தில் ஒருபகுதி கழிவுகளாகக் கொட்டப்படுகிறது - நாளொன்றுக்கு 100 கோடிப் பேரின் உணவுகளுக்கு சமம். மூன்றில் இரண்டு பங்கு உணவுக் கழிவுகள் பணக்கார நாடுகளில்தான் ஏற்படுகிறது. உலகில் 60 சதவிகிதமான உணவுக் கழிவுகள் வீடுகளில் ஏற்படுகின்றன. பணக்கார நாடுகளில் ஆடம்பர உணவு விடுதிகளிலும், வீடுகளிலும் உள்ள உணவு தட்டுகளிலிருந்து பெரிய அளவிலான உணவுக் கழிவுகள் ஏற்படுகின்றன. இதேபோல அதிகபட்சமான உணவு பதப்படுத்துதல் மற்றும் பார்சல்கள் எனும் பரந்த செயல்முறைகள் உணவுக் கழிவுகளுக்கு வழிவகுக்கின்றன. ஏழை நாடுகளில் மிகப்பெரிய அளவிலான கழிவுகள் விவசாய உற்பத்தி தளங்களில் ஏற்படுகின்றன. பருவகால மாற்றங்கள், பூச்சி மற்றும் நோய்களால் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் போதுமான குளிரூட்டப்பட்ட வசதி, போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கழிவுகள் அதிகரிக்கின்றன. 3. பொருளாதார சமத்துவமின்மை, வாங்கும் சக்தி வீழ்ச்சி - மூல காரணம் மூன்றாவதாக அவர்களால் ஏன் உணவு எடுத்துக்கொள்ள முடியவில்லை? உணவு உண்பதற்கான, அதை வாங்குவதற்கான பணம் இல்லாதது தான் மிக முக்கியமான காரணமாகும். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் சமத்துவமற்ற நிலை மையே வறுமைக்கு முதன்மையான காரணமாகும். உலகில் 70 கோடிக்கும் மேலான மக்கள் நாள் ஒன்றுக்கு 2.15 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுகிறார்கள் (இந்திய ரூபாயில் ரூ.170). இவர்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாது. உலகில் 304 கோடிக்கும் மேலான மக்கள் நாள் ஒன்றுக்கு 5.50 அமெரிக்க டாலருக்கும் குறை வாகவே வருவாய் ஈட்டுகிறார்கள். இவர்களால் உணவுப் பொருட்கள் போதுமானதாக வாங்க இயலாது. செல்வ ஏற்றத்தாழ்வின் அதிர்ச்சிகரமான உண்மை 2023ல் உலகின் மொத்த செல்வமானது தோராயமாக 432 டிரில்லியன் அமெரிக்க டாலராகும் (இந்திய மதிப்பில் சுமார் 363000 கோடி ). இதில் முதல் ஒரு சதவிகித பணக்கார மக்கள் தொகையினை சார்ந்தோர் கூட்டாக உலகின் மொத்த செல்வத்தில் 47.5 சதவிகி தத்தை அதாவது 213.8 டிரில்லியன் டாலரை (சராசரியாக ஒரு நபருக்கு 2.7 மில்லியன் டாலர்) வைத்துள்ளனர். அடிமட்டத்தில் 50 சதவிகிதத்தினராக உள்ள 400 கோடி மக்கள் உலகின் மொத்த செல்வத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக அல்லது 4.5 டிரில்லியன் டாலர் (நபருக்கு சராசரியாக வெறும் 1,125 டாலர்கள்) மட்டுமே கொண்டுள்ளனர். இந்த அசமத்துவ செல்வ இடைவெளி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் அவர்களின் வருவாயின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதால் குறைந்த வருவாய் உள்ளவர்களின் உணவுக்கான செலவுகள் சுருங்குகின்றன. அதிகம் பாதிக்கப்படுவோர் வறுமையில் ஆண்களைக் காட்டி லும் பெண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படு கின்றனர். வறுமையில் பெண்களின் சதவிகிதம் அதிகம். வீடுகளில் குறைவான உணவு இருக்கும்போது பெண்கள் குடும்பத்தின் பொறுப்பினை ஏற்பதால் உணவைக் குறை வாக எடுத்துக்கொள்கிறார்கள். உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதமாக உள்ள பூர்வகுடிமக்கள் கடுமையான வறுமை யில் சிக்கியுள்ள மக்கள் தொகையில் 15 சதவிகிதமாக உள்ளனர். மற்ற சமூக மக்க ளைக் காட்டிலும் அதிக விகிதத்தில் பாதிக்கப்படு கின்றனர். நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் போதுமான உணவுக்கான வளங்கள், அது கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் இருந்த போதிலும்கூட உலகளாவிய வறுமைக்கு உண வுப் பாதுகாப்பின்மையே முக்கிய காரணம் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக் கிறது. நீங்கள் பசியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும். 2021ல் சீன மக்கள் தங்கள் நாட்டில் வறுமை யை ஒழித்துவிட்டார்கள். 2025 நவம்பர் மாதத்தில் இந்தியாவின் கேரள மக்கள் தாங்கள் நிர்ணயித்திருந்த ஓராண்டிற்கு முன்பாகவே தீவிர வறுமையினை முடிவிற்குக் கொண்டு வருகிறார்கள். வியட்நாம் வறுமை ஒழிப்பிற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. புர்கினோ பாசோ நாட்டின் போராளி தாமஸ் சங்காராவின் (1949-1987) விருப்பமும் தற்போது அவரது வழித்தடத்தில் வந்துள்ள கேப்டன் இப்ராகிம் தரோரின் புதிய ஆட்சியின் விருப்பமும் இதுதான். தாமஸ் சங்காராவின் முழக்கத்தை உயர்த்திடும் வகையில் தரோர் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுக்கு எங்கள் முன்னோர்கள் ஒரு விஷயத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள் - ஒரு அடிமை தன்னுடைய சொந்த விடுதலைக்குக்கூடத் தயங்குபவன் பரிதாபத்திற்குக் கூட தகுதியற்றவனாகிறான். எனவே நாங்கள் எவர் ஒருவரையும் எங்களு க்காக வருத்தப்படுமாறு கேட்கப்போவதில்லை. புர்கினோ பாசோவின் மக்கள் போராடுவதற்குத் தயாராகிவிட்டார்கள் - தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடவும் தங்களுடைய வளர்ச்சியினை மீண்டும் திரும்பக் கொண்டு வரவும் போராடத் தயாராகிவிட்டார்கள்.” விடுதலையை நோக்கி... இதுபோன்ற புள்ளிவிபரங்கள், செய்திகள் மூலமாகக் கொடுமையான வறுமையின் பாதிப்புக்களை எதிர்கொள்கிற மனித ஆன்மாக்களின் வலிகளை விவரிக்க முடியாது. வறுமையின் துயரம் ஒரு மனிதனுக்கு மரண உணர்வினை உருவாக்குகிறது. புள்ளிவிப ரங்கள் மட்டும் வறுமையால் பாதிக்கப்பட்ட வர்கள் தங்களின் எதார்த்தமான கடினமான சூழ்நிலைகளை விவரிக்க முடியாது - அதை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள் ளனர். சில சமயங்களில் முதலாளித்துவக் கட்டமைப்பையும் அது உருவாக்கிய வறுமை மனித ஆன்மாவின் மீது ஏற்படுத்திய விளைவுகளை கவிதைகள்கூட சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளன. புர்கினோ பாசோவைப் போல ஒவ்வொரு நாடும் தனது வறுமையிலிருந்து விடுபடுவதற்கான காரணத்தைத் தேடிப் போராட்டத்தைத் துவங்கினால் அவைகள் வறுமையிலிருந்து மட்டுமல்ல; பல புதிய கேள்விகளுக்கும் விடையைத் தேடும். - தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம்