articles

img

மோடி ஆட்சியில் குறி வைக்கப்படும் சிறுபான்மை மக்கள்....

ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை மக்கள் உரிமை தினமாக டிசம்பர் 18-ஐ பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது. சிறுபான்மை மக்கள் எனும் போது, அது மதவழி சிறுபான்மையினர், மொழிவழி சிறுபான்மையினர் மற்றும் இன அடிப்படையிலான சிறுபான்மையினரைக் குறிக்கிறது. 

ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையினர் வேறுபடுவர். ஒரு நாட்டில் பெரும்பான்மையினராக வாழும்சிறுபான்மையினர், வேறொரு நாட்டில் சிறுபான்மையினராக இருப்பர். அது மத அடிப்படையிலோ அல்லது மொழி அடிப்படையிலோ அல்லது இன அடிப்படையிலோ ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பகுதி மக்கள் சிறுபான்மையினராக மக்கள் தொகை அடிப்படையில் கருதப்படுவர். அத்தகைய சிறுபான்மையினர் அங்கு வசிக்கும் பெரும்பான்மை மக்களுக்கு நிகராக பாரபட்சமற்ற முறையில் நடத்தப்படுவதோடு அவர்களது சமூக, கலாச்சார உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இத்தகைய அறிவிப்பின் நோக்கம்.

இந்தியாவில் சிறுபான்மை மக்கள்
இந்தியாவில் மதவழி சிறுபான்மை மக்களும், மொழிவழி சிறுபான்மை மக்களும் உள்ளனர். இந்திய மக்கள் தொகை 131 கோடி. இம்மக்களில் 14.2 சதவிகிதம் முஸ்லீம்கள். 2.3 சதவிகிதம் கிறிஸ்தவர்கள். 1.7 சதவிகிதம் சீக்கியர்கள். 0.7 சதவிகிதம் பவுத்தர்கள். 0.4 சதவிகிதம் ஜைனர்கள். இந்திய தேசம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த போது இந்திய விடுதலைக்காக இந்துக்கள், முஸ்லீம்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் இணைந்தே போராடினர். விடுதலைப் போரில் உயிரைத் தியாகம் செய்தவர்களிலும் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இருந்தனர். ஆனால், இந்தியா மத அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் என பிரிக்கப்பட்டு, இரு நாடுகளான போது கணிசமான முஸ்லீம்கள் தாங்கள் விரும்பியே  இந்திய நாட்டில் தொடர்ந்து வாழ முடிவு செய்தனர். பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என பிரகடனம் செய்யப்பட்ட போதும், இந்தியாவில் வாழ்ந்த கணிசமான முஸ்லீம்கள் மதச்சார்பற்ற நாடு என பிரகடனம் செய்யப்பட்ட இந்தியா
வில் தான் தொடர்ந்து வாழ முடிவெடுத்தனர். 

அதிலும் குறிப்பாக, முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழுகின்ற தனி நாடாக இருந்தது காஷ்மீர். அந்நாட்டை ஆண்ட இந்து மன்னரான ஹரிசிங் தனி நாடாகத் தொடர திட்டமிட்ட போதும்,  காஷ்மீர் மாநில மக்கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் இணைய மறுத்து மதச்சார்பற்ற இந்திய நாட்டுடன் இணைய விரும்பி, ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்தனர். அந்த ஒப்பந்த அடிப்படையில் காஷ்மீர் மக்களின் தனித்தன்மையையும், அவர்களது கலாச்சாரம், நில உரிமை உட்படவுள்ள உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சரத்து 370 மற்றும் 35 ஏ ஆகியவை இணைக்கப்பட்டன. இன்றைக்கு உலகில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா இந்தோனேசியாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

நம் நாட்டின் அரசியல் சட்டம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை உத்தரவாதப்படுத்துவதோடு, இந்த நாட்டில் உள்ள மதவழி சிறுபான்மையிருக்கு அவர்களது மத வழிபாட்டு உரிமை, அவர்களது பண்பாட்டு உரிமை, மொழி ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டப்படி உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவே மதச்சார்பற்ற இந்தியாவின் சிறப்பம்சமாகும்.

சங் பரிவாரமும், அதன் நோக்கமும்
மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை ஏற்காத அமைப்பு. அதன் நோக்கமே இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதே. அதற்காகவே விடுதலை பெற்ற நாள் முதல் அது செயல்பட்டு வந்தது. அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்து - முஸ்லீம்கள் கலவரத்தை அது தொடர்ந்து நடத்தி வந்தது. மதச்சார்பற்ற இந்தியா உருவாவதில்  முக்கியப் பங்காற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் மதமோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதிலும், மக்கள் ஒற்றுமையை நிலை நிறுத்துவதிலும் முக்கிய பங்காற்றியதால் ஆத்திரமுற்ற அந்த மதவெறி அமைப்பு விடுதலை பெற்ற ஒரு சில மாதங்களிலேயே அவரைப் படுகொலை செய்தது.

பின்னர் பாரதிய ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியையும், 1978க்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சி அமைப்பையும் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி தனது மதவெறி அரசியலை மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்லவும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி தங்களது இந்து ராஷ்டிரம் எனும் குறிக்கோளை அடையும் வகையிலும் திட்டமிட்டு செயல்படத் துவங்கியது. 1992ல் மதவெறி பிரச்சாரத்தை ஒரு ரதயாத்திரை என்ற பெயரில் நடத்தி, வெறியூட்டப்பட்டு, திரட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்கள் மூலம் அயோத்தியில் இருந்த 500 ஆண்டு பழமை வாய்ந்த பாப்ரி மசூதியை இடித்துதரைமட்டமாக்கியது. அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது மதச்சார்பற்ற அரசியல் சட்டப்படி உறுதி மொழி எடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபாரதிய ஜனதா கட்சியின் கல்யாண்சிங் ஆட்சி. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் பெற்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் மோடி. தொடர்ந்து 1998, 1999களில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா தலைமை தாங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்இருந்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தங்களது நோக்கத்தை நிறைவேற்ற இயலாதநிலையில் இருந்தது. இருந்தும் 2002ல் மோடிமுதலமைச்சராக இருந்த காலத்தில் தான் குஜராத்தில்பெரும் மதக்கலவரத்தை நடத்தியபோது, ஆயிரக்கணக்கான சிறுபான்மை முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடுமை நடந்தது. அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்து அரசு நிர்வாகத்தையும், காவல்துறை
யையும் மதவெறி கும்பலின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக செயல்பட வைத்தவர் அமித்ஷா.

மோடி ஆட்சியில் சங் பரிவார்
2014ல் மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அந்த கால கட்டத்தில் முஸ்லீம்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். பசுவதை தடுப்பு என்ற பெயராலும், ஜெய்ராம் என கோசமிடக் கூறியும் ஏராளமான முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். 2019ல் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற மோடி மீண்டும் பிரதமராக வந்தவுடன் குஜராத் கலவரப் புகழ் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக்கப்பட்டார். சங் பரிவாரத்தின் மதவெறி அரசியலை அமலாக்கவும், சிறுபான்மை முஸ்லீம்களை ஓரம் கட்டவும் பல நடவடிக்கைகளை எடுக்க மோடி- அமித்ஷா திட்டமிட்டு, செயல்பட  துவங்கினர். கடந்த ஐந்து ஆண்டுகளை விட தற்போது தங்களது அறுதிப் பெரும்பான்மை எனும் வலுவைப் பயன்படுத்த துவங்கினர். முதலில் முத்தலாக் சட்டம் வந்தது. திருக் குர் ஆனில் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ய எவ்வித அனுமதியும் இல்லை. மேலும் உச்ச நீதிமன்றமே முத்தலாக் மூலம் நடைபெறும் விவாகரத்துக்கள் செல்லாதுஎன்று தீர்ப்பளித்து விட்டது. இருந்தும் முத்தலாக் மூலம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மோடி நீலிக் கண்ணீர் வடித்து, முஸ்லீம் ஆண்களை வேட்டையாடும் நோக்கில் முத்தலாக் சட்டம் கொண்டு வந்தார். தனது மனைவி யசோதா பெண்ணை ஒரு கடைச் சரக்கைப் போல் தூக்கியெறிந்த மோடி, முத்தலாக் மூலம் முஸ்லீம் ஆண்களின் விவாகரத்தை மற்ற மதம் சார்ந்தவர்களுக்கு உள்ளது போல் சிவில் வழக்கு என்பதற்கு மாறாக, கிரிமினல்வழக்காக மாற்றி சிறைத் தண்டனைக்கு வகை செய்தார்.அடுத்து வந்தது காஷ்மீர் மீதான தாக்குதல். அதற்கான ஒரே காரணம் முஸ்லீம் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர். இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த போது ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ நீர்த்துப் போகச் செய்ததுடன், 35ஏ-ஐயும் ரத்து செய்து, அதன் சிறப்பு அந்தஸ்தையும், தனி உரிமைகளையும் காலி செய்தது. அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, இதுவரை இந்திய தேசத்தில் நடந்திராத அநீதியை இழைத்தது.

குடியுரிமை திருத்த சட்டம்
அடுத்து வந்தது குடியுரிமை திருத்த சட்டம். பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014 டிசம்பருக்கு முன்னர் அகதிகளாக வந்துள்ள முஸ்லீம்கள் அல்லாத பிற மதத்தினர் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் எனக் கருதப்பட மாட்டார்கள்.அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பது அந்த திருத்தம். அதன் தொடர்ச்சியாக மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கவும் முடிவு செய்தது. அரசியல் சட்டப்பிரிவு 14ன் படி சட்டத்தின் முன்னர்அனைவரும் சமம் என்பதற்கு மாறாக, மக்களை மதம் அடிப்படையில் பிளவுபடுத்தும் சட்டமாக இது இருந்தது. இச்சட்ட திருத்தத்தின் மூலம் தங்களது குடியுரிமையை பறிக்கும் திட்டம் இருக்கும் என்ற அச்சம் முஸ்லீம்களை போராட்டத்திற்கு தள்ளியது. 

முதலில் ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்களும், தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கடுமையானவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நாடு முழுவதும்பல்லாயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக, முஸ்லீம் பெண்கள் களத்தில் இறங்கி அமைதி வழியில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக, வட கிழக்கு தில்லியில் சாகின்பாக், ஜாப்ராபாத், முஸ்தபாபாத் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் அதிலும் குறிப்பாக, பெண்கள் அமைதி வழியில் அறப் போராட்டத்தை நடத்தினர். இதற்கு பல தரப்பு மக்களும், மதச்சார்பற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஆதரவளித்து வந்தனர். இது ஊடகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. 

மினி குஜராத் கலவரச் சூழல்
டிரம்ப் வருகையையொட்டி சங் பரிவாரத்தினர், அமைதியாக போராடிய மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். இத்தகைய தாக்குதல் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் சர்மா ஆகியோரின் வெறியூட்டும் பேச்சுக்களின் பின்னணியில் நடைபெற்றது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை முஸ்லீம்களைத் தாக்கிய மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாகவும், தாக்குதலுக்கு உள்ளான முஸ்லீம்களுக்கு எதிராகவும் பகிரங்கமாகச் செயல்பட்டது. இந்த தாக்குதல்களில் 40 முஸ்லீம்களும், ஒரு காவல்துறை தலைமை காவலர் உள்ளிட்டு 13 இந்துக்களும் பலியாகினர். 473 பேர் படுகாயமடைந்தனர். 485 இரு சக்கர வாகனங்கள், 94 மூன்று சக்கர வாகனங்கள், 168 கார்கள் தாக்குதலில் சேதமடைந்தன. ஏராளமான வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் சேதமடைந்தன. பெரும்பாலானவை முஸ்லீம்களுக்கு உரிமையானவை. இருந்தும் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு முஸ்லீம்கள் மீதும், சிஏஏ எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் மீதும் கடும் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். திட்டமிட்டு வன்முறையை நடத்திய சங் பரிவார குண்டர்களையும், தூண்டி விட்டு தாக்குதலை நடத்திய பாஜக தலைவர்கள் மீதும் உரிய வழக்குகள் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ தயாராயில்லை. மினி குஜராத் கலவரச் சூழலை உணர முடிகிறது.

லவ் ஜிகாத் எனும் புதிய தாக்குதல்
தற்போது அடுத்த விசயத்தை கையில் எடுக்கின்றனர். காதலித்து திருமணம் செய்வதை காரணமாகக் கொண்டு லவ் ஜிகாத் எனும் பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவந்துள்ளனர் சங் பரிவாரத்தினர். மதம் கடந்த திருமணங்களையும், சாதி மறுப்பு திருமணத்தையும் நிராகரித்து மனுஸ்மிருதி அடிப்படையில் ஜாதி, மத பெருமிதங்களைத் தொடர்ந்து பாதுகாக்கின்ற அமைப்பு சங் பரிவார். தற்போது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு சட்டவிரோத மதமாற்ற தடை அவசர சட்டம்ஒன்றை பிறப்பித்துள்ளது. சல்மான் அன்சாரி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வயது வந்த ஆண் மற்றும் பெண் தாங்கள் விரும்பியவரைத் திருமணம் செய்வதையோ, சேர்ந்து வாழ்வதையோ எந்த ஒரு தனிநபரோ, குடும்பத்தினரோ அல்லது அரசோ ஆட்சேபிக்க முடியாது எனத்தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தனிநபர் தனது வாழ்க்கைக்கான இணையரை தீர்மானிப்பதற்கான உரிமையை உத்தரவாதப்படுத்தியிருப்பது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பலம்என்றும், தான் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்யும் உரிமை அரசியல் சட்டப்பிரிவு 21ன் ஒரு அம்சம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. 

ஆனால், இதற்கெல்லாம் மாறாக, முஸ்லீம் இளைஞர்களை வேட்டையாடும் நோக்கில் அச்சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி பல இளைஞர்கள் மீது வழக்குதொடரப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே முடிந்து போன வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படுகின்றன. அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் பெண்கள் உட்பட கைது செய்யப்படுகின்றனர். திருமணம் செய்து கொண்ட பெண் தன் முழு விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாகக் கூறினாலும், தொடர்ந்து அவனோடு தான் வாழ்வேன்என்றாலும் சங்பரிவாரத்தினரின் நிர்பந்தத்தை ஏற்று, அந்த இளைஞனும், குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர். உ.பியைத் தொடர்ந்து பாஜக ஆளும் பல மாநில அரசுகள் இத்தகைய சட்டத்தைநிறைவேற்றுகின்றன. இதுவும் முஸ்லீம்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலாகத் தொடர்கிறது.

செய்ய வேண்டியது என்ன?
பாஜக ஆட்சி மோடி - அமித்ஷா தலைமையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களைத் தாக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் அதே நேரத்தில் பெரும்பான்மை மக்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. கோவிட்-19 காலத்தில் ஏழை, நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானாலும் அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க மறுக்கும் மோடிஅரசு, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்குகிறது. கார்ப்பரேட்டுகள் பெரும் லாபம் அடைகின்றனர்.இந்நிலையில் தான் விவசாயத்தை சீரழித்து, விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 3 வாரங்களாக தில்லியை முற்றுகையிட்டு அமைதியாக போராடி வருகின்றனர். அதற்கு தீர்வு காணாமல் இழுத்தடித்தும், பிளவுபடுத்தும் தந்திரங்களில் ஈடுபட்டும் போராட்டத்தை சீர்குலைக்க முயல்கிறது மோடி அரசு. இவையெல்லாம் பெரும்பான்மை, சிறுபான்மையென அனைத்து மக்களையும் பாதிக்கின்றன.இத்தகைய நிலையில் சிறுபான்மை சமூகம் அச்சத்துடன் வாழ்கிறது. குறிப்பாக, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அச்சத்துடன் வாழும் நிலை. அரசை விமர்சிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் அர்பன் நக்சல்என பட்டம் சூட்டப்பட்டு, காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 84 வயது ஸ்டான் சுவாமிகள் கைதும், இரக்கமற்றமுறையில் சிறையில் அடைத்திருப்பதும் கவலை கொள்ளச்செய்கிறது. இந்நிலையில் தான் இவற்றிக்கெதிராக அனைத்து மக்களும் குறிப்பாக, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து நின்று சிறுபான்மை முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால்இதைப் பலவீனப்படுத்தியும், பிளவுபடுத்தியும் பாஜக அரசியல் ஆதாயம் பெற பல சூட்சுமங்களைச் செய்கிறது. அதற்கு சிறுபான்மையினர் சிலரும் பலியாகி, அதற்கு துணை போகின்றனர்.

பீகாரில் மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரிக்க நடந்த முயற்சியால் தான் பாஜக அதிக இடங்களை பெற்று ஐக்கிய ஜனதா தளத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இது ஒரு படிப்பினை. அதே முயற்சியை மற்ற மாநிலங்களிலும் சோதித்து பார்க்க முயற்சி நடக்கிறது. சிறுபான்மைமக்கள் தகுந்த யோசனையுடனும், அறிவுடனும் செயல்பட்டு, இம்முயற்சிகளை நிராகரிக்க வேண்டும். சிறுபான்மையினர் உரிமைகளை மீட்டெடுக்க சிறுபான்மை மக்கள் மதச்சார்பற்ற பெரும்பான்மை மக்களுடனும், மதச்சார்பற்ற சக்திகளுடனும் ஒன்றிணைந்து வலுவான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் அடிப்படை தேவை.

===எஸ்.நூர்முகம்மது===

;