articles

img

ஜி-20: போலிப் பெருமிதமும் செல்ல வேண்டிய பாதையும்! - ப.தெட்சிணாமூர்த்தி

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை சுழற்சி முறையில் ஏற்றுள்ள இந்தியா, 2023 செப்டம்பர் 9, 10 தேதிகளில், இந்த அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டை புதுதில்லியில் நடத்து கிறது. இதையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் ஜி-20 உறுப்பு நாடுகளின் பல துறை அமைச்சர்கள், அதி காரிகள் பங்கேற்கிற பல்துறை சிறப்பு மாநாடுகள், ஆய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகளை இந்தியா நடத்தி வருகிறது. இந்த நிகழ்வுகளையொட்டி ஜி.20 அமைப்பின் பெருமிதங்களையும், அதற்கு தலைமை யேற்க கிடைத்துள்ள வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கப் பெறாத வரலாற்று வாய்ப்பு என்ற விதத்திலும் மோடி  அரசும், அதன் ஊதுகுழல்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் உண்மையில் ஜி-20 என்ற அமைப்பிற்குள் ஜி-7 என்கிற பெரும் பணக்கார நாடு களின் அமைப்பு செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதை யும், அதன் சூழ்ச்சிகளையும், மறைக்கும் விதமாக இந்த  போலி பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. 

‘ஜி-7’ எனும் சுரண்டல் அணி

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய அரசியல் கூட்டணிதான் ‘ஜி-7’. உலக நாடுகளின் எண் ணிக்கையில் வெறும் 3.6  சதவீதமும் உலக  மக்கள் தொகையில் 10 சதமும் (77.5  கோடி-2022) கொண்ட  ‘ஜி7’  நாடுகள் உலகளாவிய நிகரச் செல்வத்தில் பாதிக்கு (200 டிரில்லியன் டாலர்) மேலும், உலக ளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32 முதல் 46 சதவீதத்தையும் கொண்டிருக்கின்றன.  முன்னேறிய  முதலாளித்துவ நாடுகள் உலகின் இதர நாடுகளின் வணிக செல்வத்தை தொடர்ந்து சுரண்டுவதற்கும் அரசியல் ரீதியில் மேலாதிக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான்  ஜி 7 அமைப் பாகும்.  அட்லாண்டிக் பிராந்தியத்தில்  இல்லாத ஜப்பான் நீங்கலாக இதர 6 நாடுகளும்  அமெரிக்க அடியாட்களாக நேட்டோவில் உள்ளன என்பதையும்  நாம் இப்போது கவனத்தில் கொண்டால்  ஜி-7 அமைப்பு அமெரிக்காவின் மற்றொரு பதிப்பு  என்ப தையும் எப்படிப்பட்ட சர்வதேச  சுரண்டல் வர்க்க அணி யாக உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். 

ஜி-20உம், மோடியின்  போலிப் பெருமையும்

1999-இல் பல உலகப் பொருளாதார நெருக்கடிக ளுக்கு தீர்வு காணும் வகையில் ஜி-20 நிறுவப் பட்டாலும்  2008ஆம் ஆண்டு சர்வதேச சந்தை ஆட்டம் கண்டதன்   பின்புலத்தில்தான்  ஜி.20-இன் முதல் உச்சி மாநாடு 14.11.2008 அன்று வாஷிங்டனில் நடை பெற்றது.   ஆண்டிற்கு ஒரு முறை கூட்டப்படும் ஜி-20 அமைப்பின் 17ஆவது உச்சி மாநாடு  இந்தோனேஷி யாவின் பாலி நகரில் கடந்த நவம்பரில் நடைபெற்றது.  ஜி-20 அமைப்பு  முன்னேறிய மற்றும் வளரும் நாடுகள் உட்பட, உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்டது. மொத்த உலக உற்பத்தியில் 75 சதவீதம் சர்வதேச வர்த்தகத்தை கொண்டுள்ள  19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ள டக்கியுள்ளது.  சர்வதேச நிதி நிலைத்தன்மை, கால நிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண  செயல்படுவதாக கூறப்படும் ஜி-20 இல், ஒவ்வொரு ஆண்டும் சுழலும் தலைமையை  உறுப்பு நாடுகள் வகிக்கும். இந்த ஆண்டு  இந்தியாவிற்கான தலைமை வாய்ப்பு இதன் தொடர்ச்சியில் இயல்பாக வந்தது.  2023 முடிவில் ஜி-20இன் தலைமை  பிரேசிலுக்கு சுழல்  முறையில்  செல்லும். இயல்பான  இந்த நடை முறையைதான்  குஜராத்  தேர்தலில் வாக்காளர்களை மோசடியாக கவர்வதற்கு மலிவான  விளம்பர உத்தியாக மோடி  பயன்படுத்திக்கொண்டார். '

30.11.2022, 1.12.2022 தினங்களில் இந்திய அஞ்சல் துறையின் சார்பாக  உலகமே இந்தியாவை திரும்பி பார்ப்பதாக குறுஞ்செய்திகள் எல்லா மொபைல் களுக்கும் அனுப்பப்பட்டன. ஜி-20-இன் முதல் மாநாடு 2008-இல் நடைபெற்றதிலிருந்து 2022- வரை எந்த  நாடும் அரங்கேற்றாத  போலிப் பெருமை தேர்தல் உத்தியை   1.12.2022  அன்று குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலின்போது சர்வதேச அரசியல் ஸ்டண்ட் மாஸ்டர் மோடி பயன்படுத்திக் கொண்டார். ‘நரேந்திர மோடி யின் மாபெரும்  வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு ஜி-20  உறுப்பு நாடுகளின் தலைவர்க ளுக்கு நாக்பூரில் இருந்தும் வாரணாசியில் இருந் தும் கோவில் பிரசாதங்கள் அனுப்பப்பட்டன’ என கிண்டல்கள் பறக்கும் அளவிற்கு  மோடியின் போலிப் பெருமை பிரச்சாரங்கள் இருந்தன.

ஜி-20 இன் செயல்பாடுகள்

நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் சமத்துவ மின்மையின் சகாப்தத்தில் ஜி-20 அமைப்பிற்கு வெளியே உள்ள உலக  நாடுகளிடம் பொறுப்புணர்வு, ஒத்துழைப்பு இல்லாதது பற்றி கருத்துக்கள் கூர்மை யாக வேறுபடுவதை ஆழ்ந்த ஆய்வில் காணமுடியும். தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் கட்ட மைப்பில் ஜி-20 நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்தி வரு கின்றன என்பதில் ஐயமில்லை. உறுப்பினராக இல்லா மல் ஜி-20-க்கு வெளியே உள்ள 170-க்கும் மேற்பட்ட அரசுகள் மற்றும் சர்வதேச  சிவில் சமூகம் ஜி-20 இன் முடிவுகளோடு தொடர்பின்றி  இருப்பது தொடர்ந்து வருகிறது. ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகளின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தப் படுவதை பார்க்க முடியும். ஒருசில  நாடுகளுக்கு  மட்டும் வளமையை கூட்டும் புதிய தாராளமயக் கொள்கை களை ஜி-20 மேற்கொள்ளும்போது மற்ற நாடுகள் உலகளாவிய பொருளாதார நீதியை நோக்கி இயல்பா கவே பிரிந்து நிற்கின்ற போக்கு உருவாகிறது. இந் நாடுகள் தங்கள் நாட்டின் சுயேச்சையான தொழில் துறை பொருளாதார கொள்கைகள் தங்கள் மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு இயல்பா கவே முன்னுரிமை அளிக்கின்றன. இருப்பினும் தவிர்க்க முடியாத உலகமய வர்த்தகத்தில் அந்நாடு கள் விரும்பும் பலன்கள் கிட்டவில்லை என்பதும் தொடர்ந்து வருகிறது.  ஜி-20 நாடுகள் மற்றும் ஜி-20 இல் இல்லாத நாடு களுக்கு இடையே நிலவும் உலகளாவிய பொருளா தார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து வருகிறது.

பெங்களூரில் கடந்த டிசம்பர் 13 முதல் 15 வரை முதல் ஜி-20 நாடுகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட  நிதித்துறை  மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம்  இந்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இந்தியத் தலை மையின் கீழான ஜி-20இன் இந்த சந்திப்பு பிப்ரவரி இறுதியில் நடைபெறவிருக்கும் ஜி20  அமைப்பின்  நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொள்ளவிருக்கும்  கூட்டத்திற்கான   நிதி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள்  பற்றிய விவாதங்க ளின் முன் ஆயத்த  கூட்டமாக அமைந்திருந்தது.

சீனாவிற்கு எதிரான  ஜி-7 நாடுகளின் வன்மம்

கவனமாக ஆய்வு செய்தால், பொருளாதார தொழில் துறையில் மக்கள் சீனத்தை தனிமைப் படுத்துவதற்கு ஜி-7 நாடுகள் ஜி-20 கூட்ட பின் அரங்கு களில் வன்மத்துடன் முயற்சிப்பது தெரியவரும். இதன் மூலம் ஜி-20 அமைப்பின் பொருளாதாரக் கொள்கை களை வடிவமைப்பதில்   தீர்மானிக்கும் சக்திகளாக மாறுவதற்கும் தங்கள் வர்த்தக நலன்களை  பாது காத்துக் கொள்வதற்கும் கடும் முயற்சிகளில் ஜி-7 ஈடுபட்டு வருகிறது. 1.99 லட்சம்  கோடி  டாலர்  உள்நாட்டு உற்பத்தியை கொண்டதும் 3.8 கோடி மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடு கனடா. இந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜி-7 மற்றும் ஜி-20 அமைப்புகளில்  2015ஆம் ஆண்டிலிருந்து எல்லா  மாநாடுகளிலும் பங்கேற்கும் உலக தலைவராகவும்   நேட்டோவின் முடிவுகளை இறுதி செய்யும் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார். இந்த ஆணவத்தில் அவரது சீன வெறுப்பு, 2022 நவம்பரில் பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டு வளாகத்தில் வெளிப்பட்டது. சீனத் தலைவர்  ஜி ஜின் பிங்குடன் ஜி-20 மாநாட்டு வளாகத்தில் நடைபெற்ற ஒரு முறைசாரா உரையாடலின்  அரைகுறை விவரங்களை  கனடா ஊடகங்களில் விஷமத்தன நோக்கில் கசிய விடுவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இச்செயலை பொருத்தமற்றது என ஜின்பிங் வர்ணித்து, தனது அதிருப்தியை ஜஸ்டின் ட்ரூடோவிடம்

  நேரிடையாக வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளித்த ஜஸ்டினின் உரை அதீத ஆணவம் கொண்டதாக இருந்தது. இது உலகம் முழுவதும் திட்டமிட்டு வைரலாக்கப்பட்டது.   இதை த்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட னான ஜிஜின்பிங்கின் ஏற்கனவே முடிவு செய்யப் பட்ட சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. இவை சீனாவிற்கு எதிராக பொது அரங்கத்தில் நடத்தப்பட்ட ஜி-7 நாடுகளின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி யாக இருந்தது.   ஆனால் ஜி-20 மாநாட்டு நடவடிக்கை கள் மற்றும் இதர அமர்வுகளில்  மக்கள் சீனத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  நேட்டோ மற்றும் ஜி-7 உறுப்பினரல்லாத இதர நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணக்கமாகவும் நெருக்க மாகவும் செல்வாக்குடன் இணைந்து இருப்பதையும் தெளிவாக காணமுடிந்தது.  மேலும், ரஷ்யாவிற்கு எதிரான பொதுக்கருத்தை ஜி.20-க்குள் உருவாக்கும் வேலையையும் ஜி-7 நாடு கள் செய்கின்றன. இதற்கு உக்ரைன் பிரச்சனை மட்டும் ஒரு காரணம் அல்ல; அதற்கு அப்பாலும் ஜி-7 அமைப்பின் பொருளாதார அரசியல் உள்ளது என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   ஜி-7 மேற் கொள்ளும் முயற்சிகள் எதுவும்  பலன் அளிக்கப் போவ தில்லை  என்பதை ரஷ்ய எண்ணெய்யின் மீது விலை உச்சவரம்பை சுமத்துவதற்கான ஜி-7 இன் முடிவை இந்தியாவே  ஆதரிக்கவில்லை  என்பதில்  இருந்தும் தெரிந்து கொள்ளலாம். 

‘பிரிக்ஸ்’ கூட்டணி

ஜி7 மற்றும் ஜி-20க்கு மாற்றாக, பிரேசில், ரஷ்யா, இந்தியா,சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்ட பிரிக்ஸ் ( BRICS)-இன் உச்சி மாநாடு 2009 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது.  பிரிக்ஸ் அமைப்பில் சேர ஈரானும் அர்ஜென்டி னாவும் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில்  சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் இணையவிருப்பதாக  பிரிக்ஸ் சர்வதேச மன்றத்தின் தலைவர் பூர்ணிமா ஆனந்த்  தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம், அல்ஜீரிய ஜனாதி பதி அப்தெல் மஜித் டெபோன், தனது நாடு பிரிக்ஸ் அமைப்பில் சேரத் தயாராக இருப்பதாகக் கூறினார். செனகல், கஜகஸ்தான் நாடுகளும்  இணைவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக  தகவல்கள்  தெரி விக்கின்றன. பிரிக்ஸ்  தலைமையிலான புதிய வளர்ச்சி  வங்கியின் ஆரம்ப சந்தா மூலதனம் நிறுவன உறுப்பினர்களிடையே சமமாக விநியோகிக் கப்படுகிறது. மூலதனப் பங்குகளில் உள்ள பங்குக ளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குரிமையும் சமமாக இருக்கும் என்பதுடன்; ஜி-7  அணியைப்போல வளரும் நாடுகள் மீது  மேலா திக்க பாத்திரம்  இருக்காது என்பதால்தான் ஜி-20  அமைப்பில் இல்லாத ஈரான், அல்ஜீரியா போன்ற நாடுகள் பிரிக்சில் இணைய விருப்பம் தெரிவித்துள் ளன. மேலும் ஜி7 கூட்டணி பெரும்பாலும் வெள்ளை யர் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் குழு வாக உள்ளதுடன்  தங்கள் பாதுகாப்பு வளர்ச்சிக்கான அரசியலை மட்டும்  கொண்டுள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளால் ஆன பிரிக்ஸ்   உலகளா விய ஜி-7 இன் பொருளாதார சவால்களை எதிர்கொள் ளும் அமைப்பாக  விரிவடைந்து கொண்டிருப்பதால் ஜி-7 நாடுகளுக்கு மேலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.  

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

எனவே இந்திய அரசு, சர்வதேச அரசியல் அரங்கில் தனது அரசியல், புவியியல், பொருளாதார நலன் களை பாதுகாத்துக் கொள்வதைத்தான் நோக்கமாக கொள்ள வேண்டும். அதற்கு பணக்கார நாடுகளுடன் - குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அனை த்து வழிகளிலும் கைகோர்ப்பது என்ற இளைய பங்காளி நிலைபாட்டை கைவிட்டு, ஆசிய- ஆப்பி ரிக்க- தென் அமெரிக்க நாடுகளுடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும். பலவீனம் அடைந்து கொண்டிருக்கும் பொருளா தார தொழில்துறையை பாதுகாப்பதற்கும் வேலை யின்மையை குறைப்பதற்கும் ஆசியாவின் மிகப் பெரும் பொருளாதாரமான சீனா மற்றும் ரஷ்யக் கொள்கைகளில் இருந்து உரிய முன்மாதிரிகளைக் கைக்கொண்டு பொதுத்துறை, அரசுத்துறை, வேளாண் துறையை வலுப்படுத்தவும் உலகமயமாக்கப்பட்ட சந்தையை பயன்படுத்தும் வகையிலும் இந்தியா விற்கென ஒரு மாடலை  உருவாக்க வேண்டும். பொரு ளாதாரம் சார்ந்த சர்வதேச  உறவுகளில் பிரிக்சின் ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதுதான்  உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.




 

;