articles

img

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் - அ.சவுந்தரராசன் பேட்டி

சென்னை, மே 31 - அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள  தொழிலாளர்துறை கூடுதல் இணை  ஆணையர் வேல்முருகன் முன்னிலை யில் புதனன்று ( மே 31) சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செய லாளர் கே.ஆறுமுகநயினார், பொருளா ளர் சசிக்குமார், துணைப் பொதுச்செய லாளர்கள் வி.தயானந்தம், கனகராஜ் மற்றும் போக்குவரத்து கழக மேலா ளர்கள் கலந்து கொண்டனர். 

இதன்பின்னர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பிரிவு என 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 வருடங்களாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி வருகிறோம். குறிப்பாக, பராமரிப்பு பிரிவில் ஊழியர் பற்றாக்குறை கடுமை யாக உள்ளது. சென்னை மாநகரத்தில் 3200 பேருந்துகள் ஓட வேண்டும். ஆனால் 2300 பேருந்துகள்தான் இயங்கு கின்றன. ஊழியர் பற்றாக்குறையால் தினசரி 900 பேருந்துகள் இயங்க வில்லை. ஆம்னி பேருந்துகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காகவே, விரைவு போக்குவரத்து கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறைக்கு உள்ளாக்கப் பட்டு உள்ளதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

 2018ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அதில் கும்பகோணம் கோட்டம், விரைவு போக்குவரத்து, மாநகர போக்குவரத்து கழகம் போன்றவற்றிக்கு 60 விழுக்காடு இடங்களை நிரப்பினால் போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் கூட நிரப்பவில்லை. இதற்கிடையில், சென்னை மாநகர போக்குவரத்து, விரைவு போக்குவரத்து, கும்பகோணம் போக்குவரத்து கழகங் களில் சில பணிகளுக்கு ஒப்பந்த அடிப் படையில் ஆட்களை எடுக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. அதை ஆட்சேபித்து போராட்டங்களை நடத்தினோம். ஆனால் மீண்டும் மீண்டும் ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க நிர்வாகங்கள் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றன.  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 526க்கும் மேற்பட்ட பணி மனை ஓட்டுநர் (ஒர்க்சாப் டிரைவர்) இடங்கள் உள்ளன. பணிமனைக்கு முன்பு வரும் பேருந்துகளை சாலையில் இருந்து உள்ளே சென்று நிறுத்துவது, டீசல் பிடிப்பது போன்ற பணிகளை செய்வார்கள். இவர்களுக்கு முழுநேர பணி இருக்காது. இந்த பணியிடங்களை ஒப்பந்த முறையில் நியமிக்க நிர்வாகம் முடிவெடுத்து ஒப்பந்த புள்ளி கோரியது. இதனால் 526 பேருக்கு வேலை பறிபோகும். இதை அனுமதித்தால் அடுத்தடுத்து பிற பிரிவுகளிலும் ஒப்பந்த முறையை புகுத்துவார்கள்.

எந்த சூழ்நிலையிலும் போக்குவரத்து கழகம் தனியார்மயம் இல்லை என்று அமைச்சரும், முதலமைச்சரும் அறி வித்தனர். இதற்குமாறாக, தனியார்மய மாக்கும் (கிரிப்பிங்க் பிரைவேட்டேஷன்) முயற்சியை செய்கின்றனர். இதை நிறுத்தக்கோரியே வேலைநிறுத்தம் நோட்டீஸ் கொடுத்தோம். அதன்மீது 2 முறை சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தொழிலாளர் நல இணை ஆணையர், நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறையில் ஆட்களை எடுக்க சட்டத்தில் இடமில்லை. போக்குவரத்து கழகம் அவ்வாறு எடுக்க முடியாது.  ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க வேண்டுமென்றால் அனுமதி (லைசன்ஸ்) பெற்று இருக்க வேண்டும். அந்த அனுமதி  போக்குவரத்து கழகம் பெற்று இருக்க வில்லை. எனவே, நிர்வாகம் பணி நிலை மைகளில் எந்த மாற்றம் (ஸ்டேட்டஸ்கோ) செய்யக் கூடாது. அதாவது ஒப்பந்த முறை யில் ஆள் எடுக்கக் கூடாது. தொழிற்சங் கம் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இதனை மீறி சென்னை மாநகர  போக்குவரத்து கழகத்தில் சிலரை நிய மித்தார்கள். அதனால் தொழிலாளர்களே தன்னிச்சையாக திடீர் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். மக்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று தொழிலாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் அறி வுறுத்தி போராட்டத்தை திரும்பப் பெற  வைத்தோம். இப்போதும் தொழி லாளர்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர். இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகள் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்காக காத்துக் கிடக்கின்றனர். இவர்களில் 100 பேருக்கு நேர்முகத் தேர்வு முடிந்து 2 வருடங்களாக நியமிக்கப்படா மல் உள்ளனர். அதனை செய்திருந்தால் ஊழியர் பற்றாக்குறை குறைந்திருக்கும். இன்றைய பேச்சுவார்த்தையில், ஒப்பந்த நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தினார். அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அவுட்சோர்சிங்கை நிறுத்துகிறோம் என்று நிர்வாகம் கூறியுள்ளது. இது முன்னேற்றம்தான். இதனை மீறினால், மே அன்று நடந்தது போன்று வேலைநிறுத்தம் நிகழலாம்.

ஜூன் 9 பேச்சுவார்த்தை

இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 9 அன்று நடைபெற உள்ளது. அதில் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைக்கலாம் என்ற தொழிலாளர்துறை ஆணையரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டோம். இதில் அமைச்சர் கலந்து கொண்டால் மகிழ்ச்சி. பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அரசுத்துறை செயலாளர், அமைச்சரையும் சந்தித்து பேசவும் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

;