articles

img

திருமண வயது : பெண்ணின் இணைத் தேர்வுச் சுதந்திரத்தை மேலும் பறிக்கிற சட்டத்திருத்தம்

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய அளவிலான 5 மாதர் அமைப்புகளின் தலைவர்கள் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே-வுக்கு  மே 17 அன்று ஒரு கூட்டறிக்கையை அனுப்பியுள்ளனர். மரியம் தாவ்லே (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), ஆனி ராஜா (இந்திய மாதர் தேசிய சம்மேளனம்), கவிதா கிருஷ்ணன் (அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம்), பூனம் கௌஷிக் (பிரகதிஷீல் மஹிளா  சங்காதன்),  சாபி மொஹந்தி (அகில இந்திய மஹிளா சான்ஸ்கிரிதிக் சங்காதன்) ஆகியோர் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை:

பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21ஆக உயர்த்துவதற்காக உத்தேசிக் ்கப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின் தாக்கங்கள் குறித்து,  இதில் கையெழுத்திட்டுள்ள நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். இந்த சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமானால் வயது வந்தோர் இடையேயான மனமொத்த திருமணங்கள் குற்றச்செயலாக்கப்பட்டுவிடும், வயது வந்த பெண்களின் சுய முடிவு  உரிமை சுருக்கப்படுவதில் போய் முடியும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.  பெண் குழந்தைகள், பெண்கள் ஆகியோரது சுய முடிவு உரிமையைப் பாதுகாத்துக்கொண்டே, முன்னேற்றிக் கொண்டே, ஆயுட்காலம் முழுக்க அவர்களுக்குக் கிடைக்கிற ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் தாய் - சேய் நலப் பிரச்சனைகளைப் பயனுள்ள வகை யில் கையாள முடியும்; குறிப்பாக வயதடைந்த பெண்கள் திருமணம் தொடர்பாகவும் தாய்மை யடைதல் தொடர்பாகவும் குடும்பத்தினர், சமூகம், கண் காணிப்பு அமைப்புகள் அல்லது அரசாங்கத்தின் கட்டாயப்படுத்துதலோ கெடுபிடியோ இல்லாமல் முடிவெடுக்கும் உரிமையைப் பாதுகாத்துக்கொண்டே கையாள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உத்தேசிக்கப்பட்டுள்ள திருமண வயது சட்டத் திருத்தத்தை (2021) நாங்கள் எதிர்க்கிறோம். பின்வரும் எங்கள் கவலைகளை வெளிப்படுத்துகிறோம்:- பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை (தற்போது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது) ஆண்க ளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதுக்கு (21) இணை யாக உயர்த்துவதால் பாலின சமத்துவம் ஏற்பட்டு விடாது.'

குடிமக்கள் 18 வயதடைகிறபோது வயது வந்தவரா கிறார்கள். அந்த வயதில் அவர்களால் நாட்டின் அரசாங் கத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால், தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய முடியாதா? தேசத்தின் எதிர்காலத்தை முடிவு செய்கிற உரிமை அவர்களுக்கு இருக்கிறபோது, தங்களது எதிர் காலத்தை முடிவு செய்கிற உரிமை கிடையாதா?

சட்ட ஆணையம் கூறியதென்ன?

குடும்பச் சட்டச் சீர்திருத்தம் குறித்த சட்ட ஆணை யம் 2008இல் வெளியிட்ட அறிக்கை, ஆண்-பெண் இரு தரப்பாருக்குமான குறைந்தபட்ச திருமண வயது 18ஆக இருக்க வேண்டும்     என்றுதான் பரிந்துரைத்த தேயன்றி 21ஆக அல்ல. “மண வாழ்க்கையில் நுழைகிற இணையர்கள், எல்லா விதங்களிலும் சமமான வர்களே, அவர்களது கூட்டு அதே போல் சமமாக இருக்க வேண்டும், ஆகவே கணவன்-மனைவி இடை யேயான வயது வேறுபாட்டிற்கு சட்ட அடிப்படை இல்லை,” என்று ஆணையம் கூறியது. இந்திய வயது வந்தோர் சட்டம்--1875 ஆண்கள், பெண்கள் இரு தரப்பார்க்கும் பொதுவானது. அது 18 வயதடைகிறவர்க ளுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளும் உரிமையை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச மாநாடும் கூட, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 என்றே பரிந்துரைக்கிறது.

ஆகவே, ஆண்-பெண் இருவருக்குமே குறைந்த பட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்துவதால் மட்டுமே, புதிதாகப் பிறக்கும் குழந்தை கள், மிக இளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. பன்னாட்டு ஆய்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ள ஜேட்லி ஆணையம், வளரிளம் பருவத்தில் (10-19) உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், வயதடைந்த (21-24) இளையோருக்குப் பிறக்கும் குழந்தைகளை விட வளர்ச்சிக் குறைபாடும், எடைக் குறைபாடும் உள்ள வர்களாக இருப்பதை அந்த ஆய்வுகள் காட்டுவதாகக் கூறியுள்ளது.

ஆனால் பிரச்சனை இதுதான்:  சிறுமிகளும் பெண்களும்  பிறப்பிலிருந்தே ஊட்டச்சத்துக்   குறை பாட்டுடன் இருக்கிற நிலையில்,  18 வயதுக்கு பதிலாக 21 வயதில் திருமணம் செய்து கொள்வதாலோ,  தங்கள் முதல் குழந்தையை 19 வயதுக்கு பதிலாக 22 வயதில் பெற்றுக்கொள்வதாலோ,  தாய்மைத்தகுதியில், குழந்தைகள் தாக்குப்பிடித்துப் பிழைத்திருப்பதில், அவர்களது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என்பதற்கான வாய்ப்பு உண்மையில் கிடை யாது.   அரசுக்கு உண்மையிலேயே தாய்மைத் திறனை யும், குழந்தைகள் தாக்குப்பிடித்து வாழ்வதையும், அவர்களது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் அக்கறை இருக்குமானால், தனது அடுத்தடுத்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒருங்கிணைந்த  குழந்தை கள் மேம்பாட்டு சேவைகள் (ஐசிடீஎஸ்) திட்டத் திற்கான (அங்கன்வாடி திட்டம்) நிதி ஒதுக்கீட்டை வெட்டிக்கொண்டே போவது ஏன்?

மாறாக, ஐசிடீஎஸ் திட்டத்தை அனைவருக்குமானதாக்கி, வளரிளம் சிறுமி கள் ஒவ்வொருவருக்கும் உரிய அன்றாட எரிசக்தியும் (கலோரி) புரதமும் கிடைப்பதை உறுதிப்படுத்த மறுப்பது ஏன்?  ஒவ்வொரு மண்டலத்திலும் புதிய வசதி களுடன் கூடிய ஆரம்ப சுகாதார மையங்களை ஏற்படுத்தி பாதுகாப்பான பிரசவத்துக்கு வழி செய்யா மலிருப்பது ஏன்? ஒவ்வொரு பிரசவத்துக்கும் தகுதி நிபந்தனை ஏதுமின்றி பேறுகால உதவித் தொகை யாகிய 6,000 ரூபாய் முழுமையாக வழங்க மறுப்பது ஏன்?  அங்கன்வாடி ஊழியர்களையும், ஆஷா ஊழியர்க ளையும்,  மதிய உணவுத் திட்ட சமையலர்களையும் அரசு ஊழியர்களாக அங்கீகரித்து அதற்கான ஊதியப் பலன்கள் அனைத்தும் கிடைக்கச் செய்யாமலிருப்பது ஏன்?

பொது சுகாதாரமும்  அரசு கல்வி முறையும்...

பொது சுகாதாரத்தையும் அரசுக் கல்வி முறை களையும் விரிவுபடுத்தி வலுப்படுத்தாமல் பெண்களிள் நல்ல ஆரோக்கியத்தையும் கல்வியையும் மேம் படுத்திவிட முடியாது. பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது இப்போது 18.  அந்த வயதிலும் வேறு எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்கிற சட்டப்பூர்வ உரிமை பெண்களுக்கு  இருக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தம்,  21 வயது க்குக் குறைந்த பெண்களின் திருமணங்கள் அனைத் தையும் குழந்தைத் திருமணம் என குற்றச்செயலாக்கு வதில் போய்த்தான் முடியும்.  அது,  இத்தகைய ஒவ்வொரு பெண்ணுக்கும்,  இத்தகைய திருமணங்க ளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய சட்டப் பாதுகாப்புகள் கிடைப்பதைத் தடுத்துவிடும்.  முறை யான பேறுகால மருத்துவ வசதிகளுக்கு வெளியே தள்ளிவிடும்.

அரசாங்கம் பெண்களுக்கான கல்வியை (உயர் கல்வி உட்பட)  உறுதிப்படுத்தியாக வேண்டும்.  அவர்க ளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும்.  கட்டாயத் திருமணங்களை எதிர்த்துப் போரா டும் பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு குழந்தை திருமணங்களை ஊக்குவிக்காமல் இருப்பதிலும்,  பெண்களின் கல்விக்கு ஆதரவாக இருப்பதிலும்  உண்மையான அக்கறை இருக்குமானால்  பின்வரும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது ஏன்?: நடுநிலைப் பள்ளிக் கட்டத்தில் பெண் குழந்தை களின்  இடைநிற்றலைக் குறைப்பதற்காக  கல்வி உரி மைச் சட்டத்தை 18 வயது வரையிலான குழந்தைக ளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்துவது. மழலையர் பள்ளி முதல் முதுகலைப் பட்டப் படிப்பு  வரையில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் இலவச மான தரமான கல்வியை உறுதிப்படுத்துவது.

பெண் மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகள் கிடைக்கச் செய்வது, இலவசமாக உயர்கல்வி வழங்கு வது. எந்த வயதிலும் பெற்றோர்களால்  விருப்பமில்லாத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுகிற  பெண்களுக்கும் மற்றவர்களுக்கும்,  சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கும், மதம் விட்டு மதம் திருமண  உறவு கொள்வோருக்கும் உடனடி சட்ட உதவியும் ஆதரவும் கிடைக்கும் வகை யில் அரசாங்க உதவி மையம் (ஹெல்ப்லைன்) ஏற்படுத்துவது.

பெண்களுக்கு அதிகாரம் வழங்கிட

இந்த சட்டத்திருத்தம் பெண்களுக்கு அதிகா ரத்தை வழங்கிவிடாது  இந்தியாவில் குடிமக்கள்  18 வயதில் பெரியவர்களா கிறார்கள்.  ஆனால், பெரியவர்களான பெண்களில் கிட்டத்தட்ட 60  சதவீதம் பேருக்கு  சொந்த முடிவுகளை மேற்கொள்ளும் உரிமை மறுக்கப்படுகிறது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்)  அறிக்கையும் பிற ஆய்வுகளும் கூறுகின்றன.  கடைக்குப் போவதற்காக அல்லது  தோழியைப் பார்க்கப் போவதற்காக  வீட்டைவிட்டு வெளியே செல்வது போன்ற  சிறிய முடிவுகளானாலும் சரி,  திருமணம்,  குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற பெரிய முடிவுகளானாலும் சரி  சுயமாக முடி வெடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.  மனமொத்து  ஓடிப் போகிற  நிலையில்கூட,  பல நேரங்களில்  பெண்ணின் பெற்றோர் ஆணின் மீது பொய்யாகப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய விவகா ரங்களில் சிறுமிகளோ, பெண்களோ அவர்களது பெற்றோர்களின் காவலில்  சித்ரவதைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.   

வயதை அடைந்துவிட்ட தங்களின் மகள் இன்ன மும் சிறார் பருவத்தில் இருப்பவர்தான் (மைனர்தான்) என்று  பெற்றோர்கள் போலியாகக் கூறுகிறார்கள். இதை யொட்டி அந்தப் பெண் விசாரணைக் காலத்தில் “பாதுகாப்பு இல்லத்திற்கு”  அனுப்பி வைக்கப்படுகிறார். அப்போது அவர்  பெற்றோரின் குடும்பம் சார்ந்தவர்க ளைச் சந்திப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படு கிறாரேயன்றி, தனது ஆண் நண்பரையோ கண வரையோ  சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. பெற் றோர்களின் இத்தகைய கெடுபிடிகளின் பின்னால் இப்போது  அமைப்பாகத் திரட்டப்பட்ட, அரசியல் பின்னணி உள்ள  அமைப்புகள் சேர்ந்துகொள்கின்றன.  சாதிக் கலப்பு அல்லது மதக் கலப்பு உறவுகளை உடைப்பதற்கு அந்த அமைப்புகள் வலிமையையும்  வன்முறையையும் பயன்படுத்துகின்றன. 

பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துகிற முடிவு  வயதடைந்த  பெண்கள் (18க்கும் 21க்கும் இடைப்பட்ட பெண்கள்) தங்கள் சொந்த விருப்பப்படி  யாரையேனும் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளும் சட்ட உரிமையைப் பறிக்கிறது.  வேறு சொற்களில் சொல்வதானால்,  இது பெண்களுக்கு அதி காரம் அளிப்பதற்கு மாறாக,  பெண்ணின் தன்னுரி மைக்கு எதிரான  ஆணாதிக்க வன்முறைக்குத்தான் அதிகாரம் அளிக்கிறது.  பெண்கள்  சுயமாகத் தேர்வு செய்யும்  அதிகாரத்தை அளிப்பதற்கு மாறாக,  வயத டைந்த பெண்களின் தேர்வுகளை கட்டுப்படுத்தி குற்றச் செயலாக்குகிறது. வயதடைந்த பெண்களின் உரிமை கள் இவ்வாறு கட்டுப்படுத்தப்படுவது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது, ஏற்க இயலாதது.

மேலும் இது ஏழைகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளுக்குத்தான் இட்டுச் செல்லும்,  ஏனெனில்  கிராமப்புற ஏழைக் குடும்பங்களில்தான்  குழந்தைத் திருமணங்கள் பெருமளவுக்கு நடக்கின் றன (என்எஃப்எச்எஸ் அறிக்கை 5).  குழந்தைத் திரு மணத்திற்கு எதிரான சட்டம்  தனிமனித சட்டத்தை மீறுவ தாக இருக்கிறது என்று நீதிமன்றங்கள் ஏற்கெனவே கூறியுள்ளன.  தற்போது உள்ள சட்டம் எந்த ஒரு பிரச்சனையிலும் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.

வேலை வாய்ப்புகளை  உருவாக்குவது முக்கியம்

திருமணம் மகப்பேறு உள்ளிட்ட தனிப்பட்ட விவ காரங்கள் அனைத்திலும் பெண்களின் தன்னாளு மையை அதிகரிப்பது  அவர்களுக்கு அதிகாரம் வழங்கு வதில் ஒரு முக்கியமான அம்சமாகும்.  குறைந்தபட்ச திரு மண வயது 18 என்று இருப்பதாலேயே  அந்த வயதில் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தும் உரிமை பெற்றோர்களுக்கு வந்துவிடவில்லை. 18 வயதில் திருமணம் செய்துகொள்ள பெண்கள் முடிவு செய்கிற காரணத்தாலேயே உடனே அவர்கள் கர்ப்ப மாக வேண்டும் என்பதும் இல்லை. அரசாங்கம் செயல்படுத்துகிற “மக்கள் தொகை  கட்டுப்பாடு”  திட்டங்கள் பெண்களுக்குத் தண்டனைக ளாக மாறியுள்ளன.  இரண்டு குழந்தைகளுக்கு மேல்  உள்ள பெண்களின் சில அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன.  நலவாழ்வுத் திட்டங்களிலிருந்தும் இலக்குகளிலிருந்தும் அவர்களை விலக்கி வைக் கின்றன. நமது நாட்டில்,  மகன் பிறக்க வேண்டும் என்ப தற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற ஆழமான பிரச்சனையை  அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண் டும்.  மேலும்,  எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிற  உரிமை பெண்களுக்கு இல்லை என்ற உண்மை நடப்பையும் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தண்டனை நடவடிக்கைகளை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும்.

குறுகிய கால குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பாதுகாப்பானதாகவும்,  பெண்களின் தேவைகளைப் புரிந்து கொண்டதாகவும் உருவாக்க வேண்டும்.  அடுத்து,  18 வயதில் திருமணம் செய்து கொள்வ தால் அடுத்த ஓராண்டிலேயே பெண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை.   பெண்கள் தங்களுடைய சொந்த முடிவுக்கு ஏற்ப தங்கள் குடும் பங்களைத் திட்டமிடுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகை யில் பாதுகாப்பான கருக்கலைப்புக்கும்,  பெண்க ளுக்கு இணக்கமான கருத்தடைக்கும் தேவையான வசதிகளை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும்.

ஆகவே,  இக்கூட்டறிக்கையில் கையெழுத்திட் டுள்ள நாங்கள்,  பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21ஆக உயர்த்துவது என்ற அமைச்ச ரவை முன்மொழிவை அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.  மாறாக,  அனைவருக்குமான குறைந்தபட்ச திருமண வயது 18  என  அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்.  அனைத்து சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஊட்டச்சத்து,  சுகா தாரம்,  கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்த  ஒருங்கி ணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்,  கல்வி  உரிமைச் சட்டம் உள்ளிட்ட நலவாழ்வுத் திட்டங்களை யும்  கல்வி திட்டங்களையும் வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும்.

வாழ்வாதார வாய்ப்புகளை  வழங்கிட வேண்டும்

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கான ஒரு அடிப்படையான தேவை நிதிச் சுதந்திரமாகும்.  பெண்களிடையே வேலையின்மை மிக அதிகமாக இருக்கிறது.  அது அவர்களை முறைசாராத் துறைகளில் பாதுகாப்பற்ற வேலைகளுக்குத் தள்ளிவிடுகிறது.  பெண் களின் மீது அரசாங்கத்திற்கு உள்ள “அக்கறை’’ அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவ தற்கான செயல்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும்.  அதுவே பெண்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்திட உதவும். சில அறிக்கைகள் 2000வது ஆண்டிலி ருந்து  இந்தியாவில் பதின்பருவத் திருமணங்கள் 51  சத வீதம் குறைந்துவிட்டதாகத்  தெரிவிக்கின்றன.  இது உண்மை என்றால்,  பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயதை சட்டப்பூர்வமாக உயர்த்தாமலேயேதான் இது சாத்தி யமாகியிருக்கிறது.  திருமணம் செய்து கொள்ளும் குறைந்த பட்ச வயது ஏற்கனவே 22.6 ஆண்டுகள் என அதிகரித்து விட்டது (புள்ளியியல்துறை அமைச்சக அறிக்கை –2019). உலகின் பல நாடுகளில்  திருமண வயது 18 என்றுதான் உள்ளது.  இந்தியாவில் அது மாறுபட வேண்டிய தேவை யில்லை.

குழந்தைத் திருமணங்களையும்,  மிக இளவயதுத் திருமணங்களையும்  தடுப்பதில் சம்பந்தப்பட்ட பெண்க ளின் பொருளாதார நிலைக்கும் கல்வி நிலைக்கும்  ஒரு முக்கியமான இடமிருக்கிறது. அரசாங்கத்திற்கு உண்மை யிலேயே நாட்டின் பல மாநிலங்களில் குழந்தை திரு மணங்கள் தொடர்வது பற்றிய கவலையும் பெண்கள், குழந்தைகளின் சுகாதாரம் பற்றிய கவலையும் இருக்கின் றன என்றால்,  வறுமை ஒழிப்புக்கும், அதே போல் ஊட்டச் சத்து, கல்வி,  சுகாதார சேவைகள் மேம்பாட்டிற்கும், இதற் கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளுக்கும்  முன்னுரிமை அளிக்க வேண்டும்.  ஆகவே, இந்த சட்டத்திருத்த முன்வரைவு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

தமிழில்: அ.குமரேசன்

 

;