articles

img

பாஜகவுக்கு மற்றொரு தோல்வியே....

“உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே, அள்ளிஅணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா”. இது டி.எம். சௌந்திரராஜன் பாடிய பாடல். முருக பக்தர்கள் மட்டுமல்ல, இசையையும் தமிழையும் நேசிக்கும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.இந்தப் பாடல் டி.எம்.எஸ்.க்கு கிடைத்த விதம் சுவாரஸ்யமானது.

ஒருமுறை டி.எம்.எஸ். பழநிக்கு வந்திருந்த போது அவர் தங்கியிருந்த விடுதியில் வேலை பார்த்த சிறுவன் இந்தப் பாடலை மனம் உருக பாடியுள்ளான்.பாடலை எழுதியவர் யார் என சிறுவனுக்கு தெரியவில்லை. யாரோ எழுதிக் கொடுத்த பாடலை மனனம் செய்து பாடி வருவதாக சிறுவன் கூறியுள்ளான். பாடலை சிறுவனிடம் எழுதிவாங்கிக் கொண்ட டி.எம்.எஸ். சென்னைக்கு வந்ததும் பாடலுக்கு தானே இசையமைத்து கிராம போன் தட்டில் பதிவிட்டார். பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க ஆரம்பித்தது.இன்றளவும் அந்த பாடலுக்கான ஈர்ப்பு மக்களிடையே குறையவில்லை.

பிற்பாடு அந்தப் பாடலை அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவர் மரகதவல்லி என்ற முருகபக்தர் என்பதை டி.எம்.எஸ். தெரிந்து கொண்டார். சமீபத்தில் ஒரு நாளிதழ் மூலம் இச்செய்திமக்களுக்கு தெரிய வந்தது. இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் டி.எம். எஸ்.க்கு அந்த பாடலை பாடிக்காட்டி எழுதியும் கொடுத்த அந்தச் சிறுவன் நம் இயல்பான கணிப்பின்படி இந்து மதத்தை சேர்ந்தவன் அல்ல. அவன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவன் ஆவான். 60 ஆண்டுகளுக்கு முந்தைய யாருக்கும் தெரியாமல்இருந்த முருகனைப் பற்றிய ஒரு அற்புதமான பாடலை ஒரு முஸ்லிம் சிறுவன் டி.எம். எஸ். மூலம் உலகமறியச் செய்தான் என்பது இன்றைய காலச்சூழலில் ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால் பழனியில் காலம்காலமாக உள்ள கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சூழலில் இது ஒரு இயல்பான விசயமே.

பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ளபகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாகவாழ்ந்து வருகின்றனர். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மதம் வேறாகஇருந்தாலும் வாழ்வியல் முறை ஒன்றாகத்தான் உள்ளது. பழனி முருகன்இந்துக்களுக்கு மட்டுமல்ல,முஸ்லிம்களுக்கும், “பழனிபாபா” என்ற பெயரில் வழிபடும் இறைவனாக இருந்தார். இப்பகுதியில் வாழும் முஸ்லிம் வீடுகளில் ஆண்பிள்ளைகளுக்கு பழனிபாபா என பெயரிடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், பழனி மலைக்கோவிலின் பின்புற வாசல் வழியாக பாரவேல் மண்டபம் வரை வந்து முருகன் சிலைக்கு நேர் பின்புறம் நின்று முஸ்லிம் ஆண்களும் கோஷா அணிந்த பெண்களும் அவர்களின் மதமார்க்கப்படி பழனி முருகனை “பழனிபாபா” வாக வழிபட்டுச் சென்ற காட்சி இன்னும் நெஞ்சில் நீங்காது இருக்கிறது. ரமலான் திருநாளுக்கு மறுநாள் குடும்பத்தோடு முஸ்லிம்கள் பழனி மலைக்கு வருவதும் மலையைச்சுற்றி அமர்ந்து மகிழ்வதும் வழக்கமாகஇருந்தது. அதை இந்து முருக பக்தர்களும் எவ்வித மாற்றுக் கருத்தின்றி மனதார ஏற்றுக் கொண்டனர். மதபேதமின்றி ஒரு பொதுவான கடவுளாக மக்கள்முருகனைப் பார்த்த காலம் அது.

இந்துத்துவா சக்திகள் தலைதூக்கிய பிறகு முஸ்லிம்கள் மட்டும்அல்ல, இந்து முருக பக்தர்களுமே பழனி முருகனுக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றனர். பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவாவின் எல்லா அமைப்புக்களுமே கோவில்நகரமான பழனியை குறி வைத்து செயல்படுகின்றன. பழனி மலை மீதுஅதிகாரத்தையும் அடக்குமுறையையும் செலுத்த துடிக்கின்றனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்த ஒவ்வொருசந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகின்றன. இருந்தபோதும் பழனி மக்களிடையே நீண்ட நெடிய காலமாக இருக்கும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கமுடியவில்லை. விநாயகர் ஊர்வலத்தை பள்ளிவாசல் வழியாக நடத்திகலவரத்தை ஏற்படுத்த இந்துத்துவா சக்திகள் திட்டமிட்டன. ஆனால் அவர்களை இன்முகத்தோடு மாலையிட்டு வரவேற்ற ஜமாத் நிர்வாகிகள் அவர்களின் கலவரத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து முறியடித்தனர். அதற்காக ஜமாத் செயலாளர் சாகுல் அமீதுக்கு கோட்டை அமீர் என்ற மதநல்லிணக்க விருது கொடுத்து தமிழக அரசு கௌரவித்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் பழனியில் திட்டமிட்டு பசுமாட்டுப் பிரச்சனையை எழுப்பினார். ஒரு பக்கம் இந்துத்துவா சக்திகளும் மறுபக்கம் முஸ்லிம் அமைப்புகளும் திரளாகக் கூடி நின்றனர். காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி பெரும் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் துணிச்சலுடன் தலையிட்டு கலவரம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். அதற்கு பரிசாக இன்று வரை கொலைமுயற்சி வழக்கை தோழர்கள் சந்தித்து வருகின்றனர்.

மதமோதல்களை உருவாக்கி அரசியல் லாபமடைய பலமுறை முயன்றும் பாஜகவுக்கு பழனியில் வெற்றி கிடைக்கவில்லை. அதனால் வேல்யாத்திரையை தங்களின் சுயநலஅரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த முழு பலத்தையும் பாஜக காட்டியது. வெளியிலிருந்து ஆட்களை விலைபேசி ஏராளமாக இறக்கியது. ஆனால் பழனி நகர மக்கள் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல தள்ளி நின்றுவேடிக்கை பார்த்தனரே அன்றி யாத்திரையால் எந்த ஒரு தாக்கத்திற்கும் உள்ளாகவில்லை.தடைச்சட்டத்தை மீறி அரசு மற்றும் காவல்துறையின் ஆதரவோடு அத்துமீறல்களில் பாஜகவினர் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக பழனி மலைக்கு பக்தர்கள் படியேறித் தான் செல்ல முடியுமே தவிர மின் இலுவை ரயிலை ( வின்ச் )யும் ரோப் கார்களையும் பயன்படுத்த அனுமதி கிடையாது. இதனால் முதியவர்களும் மாற்றுத் திறனாளிகளும் பழனி மலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாஜக மாநிலத் தலைவருடன் வந்த 50க்கும் மேற்பட்ட நபர்களை இரண்டு மின் இழுவை ரயில்கள்மூலம் மலைமீது வேல் யாத்திரை நடத்த கோவில் நிர்வாகம் அனுமதித்துஅழைத்துச் சென்றது. மூலவர் சிலையை படம் பிடிக்கவோ வெளியிடவோ யாருக்கும் அனுமதி கிடையாது. கோவில் நிர்வாகம் கடுமையாகத் தடை செய்துள்ளது. ஆனால் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி மூலவரை வேலுடன் வணங்கும் பாஜக தலைவர்முருகனுடன் சேர்த்து படம் பிடித்துள்ளனர். படத்தை பாஜகவின் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். பாஜகவின் இத்தகைய அத்துமீறலால் உண்மையான முருக பக்தர்களின் மனது மிகவும் புண்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுதமிழ்க்கடவுள் முருகனை பகடைக்காயாக பாஜக பயன்படுத்துவதையும் அதற்கு தமிழக அரசு தடைச்சட்டத்தை மீறி அனுமதியும் ஆதரவும் தருவதையும் பழனி நகர மக்கள் அருவெறுப்புடன் பார்க்கிறார்கள். அத்துமீறிய பாஜகவினர் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் பழனி முருகனையும் பக்தர்களையும் நம்பி வாழும் ஆயிரக்கணக்கான சாலையோர சிறுவியாபாரிகள், வர்த்தகர்களின் வாழ்க்கை சூன்யமாகிப் போயுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் இப்படி வேல் யாத்திரை என்ற பெயரால் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் கூத்தடிப்பதை மக்கள் மட்டுமல்ல மதங்களைக் கடந்து நிற்கும்தமிழ்க்கடவுள் முருகனும் மன்னிக்க மாட்டான். வேல்யாத்திரை பாஜகவுக்கும் அதைச்சார்ந்த இந்துத்துவா அமைப்புகளுக்கும் மற்றொரு தோல்வியே!

கட்டுரையாளர் : வ.இராஜமாணிக்கம்,பழனி நகராட்சி  முன்னாள் தலைவர் 

;