articles

img

நெடுஞ்சாலை தனியார் மயத்திற்கு எதிராக உறுதியுடன் போராடுவோம்.....

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் 17.09.2000 - ல் தந்தை பெரியார் பிறந்த நன்னாளில் விருதுநகரில் துவங்கப்பட்டு கடந்த 20 ஆண்டு காலமாக நெருப்பாற்றில் நீந்தியே, களப் போராட்டத்தை முன்னெடுத்து சாலைப் பணியாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்து பாதுகாத்திட்ட இயக்கம். 

தனியார் மயம், பணிபறிப்பு
சமூக நோக்கம் புறந்தள்ளப்பட்டு சிக்கனம் என்று சொல்லி “நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் வசம் வழங்கும் கொள்கை முடிவை அமலாக்குமாறு உலக வங்கி விதித்த நிபந்தனையின் அடிப்படையில், பத்தாயிரம் சாலைப் பணியாளர்களின் பணியிடம் ஒழிக்கப்படுவதாக , தமிழக அரசின் அரசாணை எண். 160 நாள் . 05.09.2002 - ன் மூலமாக கடந்த 07.09.2002 அன்றுசாலைப் பணியாளர்களின் பணியை பறித்து தெருவில்நிறுத்தியது. பணி பறிக்கப்பட்ட அதிர்ச்சியில் நிலைதடுமாறி செய்வதறியாது திகைத்த சாலைப் பணியாளர்கள். தமிழக அரசு சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் எந்த நேரத்திலும் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கும்; பணி நீக்கம் நிகழ்ந்தால் சட்டப்போராட்டம் நடத்த நிதி தேவை என்பதை முன்னரே  உணர்ந்து  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் மட்டுமே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆலோசனை வழிகாட்டுதலின்படி, உட்கோட்ட அமைப்பு ஒன்றிற்கு ஐந்தாயிரம் ரூபாய் பணி பாதுகாப்பு நிதி வசூலித்து வங்கியில் சேமித்து வைத்தது. பணி நீக்கம் நிகழ்ந்தவுடன் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒரே வழக்காக சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுத்ததுடன் 1) நிர்வாக தீர்ப்பாயம், 2) உயர்நீதிமன்றம்3) உச்சநீதிமன்றம் வரையிலும் வழக்கை இறுதி வரையிலும் நடத்தி வெற்றி கண்டது. இதன் விளைவாக தமிழக அரசு அரசாணை எண் 22, நாள்10.02.2006 - ஐ வெளியிட்டு சாலைப் பணியாளர்களுக்கு 13.02.2006 முதல் மீண்டும் பணி வழங்கியது. 

அப்போது முதல் தமிழக அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஒரே அமைப்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசின் நெடுஞ்சாலை தனியார் பராமரிப்பு ஒப்பந்தம் சமூகநீதியை புறந்தள்ளும்; கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பறிக்கும்; நாட்டின்பொருளாதாரத்தை பாதிக்கும்; தனியார் முதலாளிகளின் இருட்டறையில் கருப்பு பெட்டியில் கருப்பு பணம்குவியும் என்பது நிரூபணமாகியுள்ளது. 

மக்கள் சந்திப்பு
சங்கத்தின் சார்பில் நெடுஞ்சாலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக 2017 ஜுனில் “நீதி கேட்டு நெடும் பயண மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. 2017 ஜுலையில் திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட தனியார் மய எதிர்ப்பு மாநாட்டு நிகழ்வும் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களில் மக்களிடம் விநியோகிக்கப்பட்ட லட்சக்கணக்கான துண்டறிக்கை; அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு வழங்கி மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழக அரசு காவல்துறையை ஏவி விட்டு சங்கத்தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. புனையப்பட்ட பொய் வழக்கை எதிர்கொண்டு சங்கம் முறியடித்தது. இந்த நிலையில்தான் நெடுஞ்சாலைத் துறையில் பெரும் பகுதியான சாலை பராமரிப்பு ஒப்பந்தம் எடுத்துள்ள எஸ்.பி.கே. அன் கோ கம்பெனியின் முதலாளி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், பணக்குவியல்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறாக கடந்த பத்தொன்பது ஆண்டு காலமாக தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்பு தனியார் மயமாக்கல் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தொடர்ச்சியாக சங்கம் போராடி வருகிறது. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். பணப்பலன்கள் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் ரூ.5,200, ரூ.20,200 தரஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற ப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது .

மதுரையில் இன்று மாநாடு
நிர்வாக சீர்த்திருத்தம் என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள நிரந்தர பணியிடங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டி சமூக நீதியை புறந்தள்ளி அநீதி இழைத்து வரும் நடவடிக்கையை கைவிட்டு நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சாலைப் பணியாளர், சாலை ஆய்வாளர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், பதிவறை எழுத்தர், உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிடும் வகையில் எதிர்கால போராட்ட பதாகையை உயர்த்திப் பிடித்துமுன்னேறிடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 7 ஆவது மாநில மாநாடு 30.01.2021 அன்று மதுரை மாநகரில் நடைபெறுகிறது . இம்மாநாடு, தனியார்கம்பெனிகளின் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கையை கைவிட்டு தமிழக அரசு மக்கள் நல அரசாக செயல்பட வேண்டும் என்பதை அழுத்தமாக உரக்கச் சொல்லும் மாநாடு.

கட்டுரையாளர் :மா.பாலசுப்பிரமணியன் & ஆ.அம்சராஜ் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்; தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம்

;