மருத்துவமனை வாசல்கள் சொல்லும் ஒப்பந்தத் தொழிலாளர் துயரக் கதைகள்
பெருநகர சென்னை மாநக ராட்சியின் இராயபுரம் மற்றும் திருவல்லிக்கேணி நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது பெரும் எதிர்ப்பலையை எழுப்பி யது. சுய உதவிக் குழுக்களின் கீழ் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவதும் நிலவும் ஒப்பந்தத் தொழிலாளர் களின் கதறலின் குரல்வடிவமாக மாறியது. மறைந்த முகங்கள் மருத்துவமனை வளாகத்தின் உள்ளும் வெளியிலும் பணிபுரியும் பாதுகாப்புப் பணி யாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ உபகரணங்களைத் தூக்கும் சுமைதாங்கிகள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள். குடும்ப வறுமையின் கரங்கள் பெரும்பாலானவர்களை இந்தப் பணிகளுக்குத் தள்ளியுள்ளன. கொடிய வெயிலில் நின்றுகொண்டே கொடி அசைத்துக் கொண்டிருக்கும் வயதான பெரியவர்களைப் பார்க்கும்போது, “குழந்தை களை வேலையில் அமர்த்துவது தவறு” என்று நாம் கூறுவது போல், முதியவர்களைக் கடும் வெயிலில் வேலைக்கு நிறுத்துவதும் அதே அளவு மனித உரிமை மீறல் அல்லவா என்றே கேட்கத் தோன்றுகிறது. ஒப்பந்த முறையின் அவலங்கள் தமிழகத்தில் 48 அரசு மருத்துவமனைகளில் மேலாளர் முதல் தூய்மைப் பணியாளர் வரை அனைவரும் கிரிஸ்டல், ஸ்மித் போன்ற தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். சென்னையில் 15,000, தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். அரசு ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதம் ரூ.18,000-க்கும் அதிகம் வழங்கினாலும், தொழி லாளர்களுக்கு வெறும் ரூ.7,000-10,000 மட்டுமே கிடைக்கிறது. மீதிப் பணம் தனியார் நிறுவனங்களின் லாபமாகிறது. தொழிலாளர்களின் வேதனை 15 மணி நேரப் பணி: தூய்மைப் பணியாளி ராமசாமி (48), “காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை. ஒரு நாள் விடுப்பு எடுத்தா லும் சம்பளத்தில் பிடிச்சிடுவாங்க” என்கிறார். மூன்று ஷிப்ட் வேலை: லேப் அசிஸ்டென்ட் ராஜேஷின் மனைவி கமலா, “காலை, மதியம், இரவுன்னு மூணு ஷிப்ட்லயும் வேலை செய்யணும். ஓவர் டைம் ஊதியம் கிடையாது” என்கிறார். உடல் வலியுடன் வேலை: மருத்துவ உபகரணம் சுமக்கும் சுந்தர் (42), “நான்கு பேர் தேவைப்படும் வேலையை இரண்டு பேர் செய்யணும். முதுகு வலி வந்துடுச்சு. ஆனா ரெஸ்ட் எடுத்தா சம்பளம் இல்லை” என்கிறார். சம வேலைக்குச் சம ஊதியம்? “சமவேலைக்குச் சம ஊதியம்” என்பது அரசமைப்பு வழங்கிய நீதி. ஆனால் ஒரே அலு வலகத்தில் நிரந்தர ஊழியரும் ஒப்பந்த ஊழியரும் பணிபுரியும் நிலை சகபணியாளர் களுக்கிடையே முரண்பாட்டை அதிகரிக்கிறது. உதாரணமாக, கொளத்தூர் பெரியார் மருத்துவமனையில் 375 பேரில் வெறும் 109 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மீதம் 266 பேர் (69%) ஒப்பந்தத் தொழிலாளர்கள். மறைந்த முதல்வர் கலைஞர் கூறியது போல், “மருத்துவர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை வருவாய்ச் செலவினமாகப் பார்க்காமல் மக்களுக்கான ஆரோக்கியத்திற்கான முதலீடா கப் பார்க்க வேண்டும்.” நவீன அடிமைத்தனம் ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பது நவீனகால அடிமைத்தனத்தின் ஒரு வடிவம். “வேலைக்கு 10 பேர் தேவைப்பட்டால், ஆறு பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டு 10 பேரின் வேலையைச் செய்ய வைப்பார்கள்” என்ற தொழிற்சங்கத்தின் குற்றச்சாட்டு யதார்த்தத்தின் கசப்பான முகம். கொரோனா பெருந்தொற்றின் போது இவர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சுகாதாரத் துறையைப் பாதுகாத்தனர். ஆனால் இன்றும் அவர்களின் பணி நிரந்தரம் ஆகவில்லை. போராட்டத்தின் நியாயம் இடதுசாரிக் கட்சிகள், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவோடு தொழிலாளர்கள் கோருவது: குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.21,000, பணி நிரந்தரம், சிறந்த பணிச்சூழல், பணிப் பாதுகாப்பு மற்றும் சட்டப்படியான அனைத்துச் சலுகைகளும். தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, ஓமந்தூரார் ரோபோடிக் சிகிச்சை மையம், கீழ்ப்பாக்கம் தீக்காயச் சிகிச்சை மையம் போன்ற சாதனைகள் பாராட்டுக்குரியவை. ஆனால், இந்தச் சாதனை களுக்குக் காரணமான தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப் படுவது அந்த ஊழியர்களை வேதனையின் எல்லைக்கே தள்ளியுள்ளது. எனவே, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து, அனைவருக்கும் பணி நிரந்தரம், சம ஊதியம், மற்றும் மனித மாண்புடனான பணிச்சூழல் வழங்கப்பட வேண்டும். மருத்துவத் துறையில் 10,000 காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பி, மனிதவள மேம்பாட்டை முதலீடாகக் கருதும் நோக்கம் அவசியம். இல்லை யென்றால், “மருத்துவமனை வாசல்களில் மறைக்கப்பட்ட உண்மைகள்” என்றென்றும் மறைக்கப்பட்டேயிருக்கும்.