உழுபவருக்கே நிலம் நூறு ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
தேசிய விடுதலைக்கு முன்பு சாகுபடி நிலங்களில் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலரிடம் இருந்தது. பெரும்பகுதி ஏழை மக்கள் பண்ணை அடிமைகளாக, விவசாயத் தொழிலாளர்களாக, குத்தகை விவசாயிகளாக ஒட்டச் சுரண்டப்பட்டு வந்தனர். 1936 முதல் கம்யூனிஸ்டு கட்சியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் நிலப்பிரபுகளுக்கு எதிராக, பண்ணை அடிமைத்தனத்துக்கு எதிராக, குத்தகை விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக நிலச் சீர்திருத்தம் கோரி ஏழை விவசாயிகளை, குத்தகை விவசாயிகளை, விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியது. இத்தகு போராட்டத்தில் நிலப்பிரபுக்களின், காவல்துறையின் அடக்குமுறைகளைத் தலைவர்கள் எதிர்கொண்டனர், தாக்கப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவிலும் நிலத்துக்கான போராட்டம் தொடர்ந்தது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என செங்கொடி விவசாயிகள் சங்கம் நடத்திய வலுவான இயக்கங்கள் மாநில ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்திய அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக தமிழகத்தில் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன: 1. பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் 2. சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டம் 3. அறக்கட்டளை நிலங்களை வகைப்படுத்தும் சட்டம் 4. குடிமனையை சொந்தமாக்கும் சட்டம் 5. குத்தகைதாரர் பதிவுச் சட்டம் 6. குத்தகை பாக்கிகளை ரத்து செய்யும் சட்டங்கள் 7. நியாய வாரச் சட்டம் 8. குறைந்தபட்ச கூலிச் சட்டம் இத்தகு சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால் நிறைவேற்றிய சட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உச்சவரம்புச் சட்டமும் மாபெரும் போராட்டமும்
06.04.1960-இல் தமிழக அரசு உச்சவரம்புச் சட்ட மசோதாவை வெளியிட்டது. இதில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர்கள் வரை நிலம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தம் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மதுரை, கோவையிலிருந்து சென்னை நோக்கி 45 நாள் நடைபயணப் பிரச்சாரத்தை நடத்தியது. தோழர்கள் மணலி கந்தசாமி பி.சீனிவாசராவ் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டத்தை நடத்தியது. 16,000 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலைகளில் நான்கு தோழர்கள் மாண்டனர். சட்டமன்றத்தில் 1961 செப்டம்பரில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 02.05.1962-இல் அரசிதழில் கொண்டுவரப்பட்டு அன்று முதல் சட்டம் அமலுக்கு வந்தது. நில உச்சவரம்புச் சட்டம் 1972-இல் திருத்தம் செய்யப்பட்டு குடும்பத்துக்கு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது.
எதிர்பார்ப்பு vs நடைமுறை
* எதிர்பார்த்த உபரி நிலம்: 4 லட்சம் ஏக்கர் * உபரியாக எடுத்தது (1962-1983): 1,19,889 ஏக்கர் * விநியோகித்தது: 74,693 ஏக்கர் *பயன் பெற்றவர்கள்: 53,249 பேர் இதிலும் பலருக்கு பட்டா கொடுத்தனர், நிலம் ஒப்படைக்கப்படவில்லை. உச்சவரம்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி நில உடமையாளர்கள் கணிசமான நிலங்களைப் பல்வேறு வகைகளில் தக்கவைத்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மாநில அரசுகளுக்கு நில உச்சவரம்புச் சட்டத்தை அமல்படுத்தும் அரசியல் உறுதியும், விருப்பமும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
1983 சிதம்பரம் மாநாடும் தற்கால சவால்களும்
உச்சவரம்புச் சட்டத்தைத் திருத்தவும், உழவர்களின் நலன் காக்கவும் வலியுறுத்தி 1983 அக்டோபர் 22, 23 தேதிகளில் சிதம்பரம் நகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்பதும், முழு நிலச்சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், இதற்கு உச்சவரம்புச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து சட்டத்தை திருத்தி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை சிதம்பரம் மாநாடு அரசுக்கு வலியுறுத்தியது. பல சட்டங்களைக் கொண்டுவந்த பிறகும் ஐந்து சதவீதம் பேரிடம் மூன்றில் ஒரு பகுதி நிலம் இருக்கிறது என்று சிதம்பரம் மாநாடு சுட்டிக்காட்டியது. உச்சவரம்பு சட்டத்தை முன்தேதியிட்டு அதாவது 01.01.1958 தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரி கிடைக்கும் என்று சிதம்பரம் மாநாடு கூறியது. அதன் பின்னர் இன்று வரை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளை அணிதிரட்டி தமிழ்நாட்டில் நிலத்திற்காக, குடிமனைப் பட்டா கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் தொடர்ச்சியாகப் போராட்டத்தை நடத்திவருகிறது.
புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்குப் பின்
1990-களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்குப் பிறகு தனிநபர்கள் நிலத்தை வாங்கிக் குவிப்பது அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் தனிநபர்கள், அரசியல் பிரமுகர்கள் பல லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள், நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துவருகின்றனர். 2000 ஏக்கருக்கு மேல் தனிநபர் நிலத்தை வாங்கி வைத்துக்கொள்ள முடிகிறது. நவீன நிலக்குவியலுக்கு அரசுகள் சட்டப்பாதுகாப்பும் தருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட பொருளாதார மண்டலங்களுக்காக (SEZ) நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் சாகுபடி பரப்பளவு குறைந்துள் ளது. ஒன்றிய அரசு அமல்படுத்திவருகிற கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளால் வேளாண் உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விளைகிற பொருளுக்குக் கட்டுபடியாகிற விலை கிடைக்காதது, வாங்கிய கடனைக் கட்ட முடியாத நிலைமை, விவசாயிகள் கடனாளிகளாக மாறுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இத்தகு சூழ்நிலையில் சாமானிய மக்களிடத்தில் இருக்கிற நிலத்தைப் பாதுகாப்பதும், குவிக்கப்பட்டுள்ள நிலங்களை உடைத்து ஏழை மக்களுக்கு விநியோ கம் செய்வதும் அவசியம். விவசாயிகளின் அனுபவ சாகுபடியில் உள்ள பல லட்சம் ஏக்கர்தரிசு நிலங்களுக்கு மாநில அரசு பட்டா வழங்கிட வேண்டும். பல தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகிற லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இன்றளவும் வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படு கின்றனர். வீடில்லாமல், கையளவு நிலமில்லாமல் அவதிப்படுகிற பல லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கி “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கை நிறைவேற்ற வேண்டிய தேவை அரசுகளுக்கு இருக்கிறது. இத்தகு நிலையில்தான் நில உரிமை, குடிமனை உரிமை மாநில மாநாடு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் நகரில் நடைபெறுகிறது.