அறிவுப் பரவலே தேசம் காக்கும்!
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்பு தொடக்க விழாவில் பேசிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பி னர் டாக்டர் வீ. ராமராஜ், மாணவர்கள் கல்லூரி காலத்தில் அறிவைத் தேடி வளர்த்துக் கொண்டு படித்து முடித்த பின்னர் அந்த அறிவை சமூக முன்னேற்றத்திற்காக பரப்ப வேண்டும் எனக் கூறினார். “மக்களிடையே சமூக, அரசியல், பொரு ளாதார, பண்பாடு மற்றும் சிவில் உரிமை களை அறிவுப்பரவல் மூலம் மட்டுமே வலுப்படுத்த முடியும். ஒவ்வொரு நாடும் ராணுவத்திற்கு செலவிடும் தொகையை மக்களின் நல்வாழ்விற்கு செலவிட்டால் உலகில் வறுமையை முற்றிலும் ஒழித்து அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க இயலும்” எனத் தெரிவித்தார். “உலகெங்கும் பரவியுள்ள ஊழலை முற்றிலும் ஒழிப்பது எளிதானதல்ல, ஆனால் இயலாததும் அல்ல” என்ற ராமராஜ், ஊழலை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து தரப்பின ரும் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். லோக் ஆயுக்தாவிற்கும் லோக் அதா லத்திற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலான வர்களுக்குத் தெரியாது என்ற அவர், “அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மாநில அளவிலான அமைப்பு லோக் ஆயுக்தா” என விளக்கினார். நீதி மன்ற வழக்குகளில் சமரசம் பேசும் அமைப்பு லோக் அதாலத் ஆகும். “தேசிய அளவில் லோக்பால், மாநில அளவில் லோக் ஆயுக்தா ஆகியவை ஊழல் விசாரணை மன்றங்களாக செயல்படுவது குறித்த விழிப்புணர்வை சட்டக்கல்லூரி மாணவர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். “கல்லூரியில் தேர்ந்தெடுத்த படிப்பை மட்டும் படிப்பது தற்போதைய வாழ்க்கைச் சூழலுக்குப் போதாது” என்ற ராமராஜ், நல்ல குணங்கள், ஒழுக்கம், பலதரப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தம் 2005-ல் நடைமுறைக்கு வந்ததாகவும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பதினோராம் ஆய்வு மாநாடு வரும் டிசம்பரில் கத்தாரில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்வில் கல்லூரித் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கான முதலாம் ஆண்டு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.