articles

img

வீரம் செறிந்த போராட்டம் விளைந்த மண் - ஆர் ராஜா

வீரம் செறிந்த போராட்டம் விளைந்த மண்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சுமைத் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி சமரசமற்ற போராட்டத்தால் ஏராளமான உரிமைகளைப் பெற்றுத் தந்த சங்கம் சிஐடியு சங்கமாகும். பல போராட்டங்களில் சில முக்கியமானவை: ரெகுலர் லாரி செட் தொழிலாளர்கள் வெற்றி (2002) 2002இல் ரெகுலர் லாரி செட் சுமை தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முதலாளிகள் அனுமதிக்காதது மட்டுமல்ல, சிகப்பு துணி அணியக்கூடாது என்று கூறி அடியாள்களையும் போலீசையும் ஏவிவிட்டு கொடூரமான அடக்குமுறை நடத்தினர். குடும்பத்துடன் திரண்டு இந்த அடக்குமுறையை முறியடித்து 250 தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, கூலி உயர்வு, போனஸ் போன்ற உரிமைகளைப் பெற்றுத் தரப்பட்டது. பல வழக்குகளையும் சிறைச்சாலையையும் தோழர்கள் சந்திக்க நேரிட்டது. மகத்தான வாழைக்காய் மண்டி போராட்டம் (2006) 270 பேர் வேலை பாதுகாப்பு, சங்க அலுவலகக் கொட்டகை, சிகப்பு துணி, கூலி உயர்வுக்காக தீரம்மிக்க போராட்டம் நடத்தினர். அரசியல் தலையீடு, காவல்துறை, அடியாள்களின் கொடூரத் தாக்குதலை எதிர்கொண்டு உரிமை மீட்ட போராட்டம் மகத்தானது. பார்சல் சர்வீஸ் ஒற்றுமையின் வெற்றி(2007) வெளி மாநில டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்வீஸ் உத்தம் ரோடு வேஸ், சந்திலால், ஏசுட், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 200 தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு, போனஸ், ஊதிய உயர்வுக்காக பல கட்ட போராட்டம் நடத்தினர். தொழிலாளர் ஒற்றுமையால் பொய்வழக்கு, நீதிமன்றத் தடையாணைகளை உடைத்து மகத்தான வெற்றியைப் பெற்றனர். பெண் தொழிலாளர்களின் வரலாற்றுச் சாதனை (2007) கருவாடு பேட்டை, மூங்கில் சவுக்கு மண்டியைச் சேர்ந்த 150 ஆண், பெண் தொழிலாளர்களின் 10 நாள் வேலை நிறுத்தம் வழக்கு, சிறைச்சாலையை ஒன்றுபட்டு சந்தித்து பெற்ற போனஸ், மாமூல், ஊதிய உயர்வு வரலாற்றுச் சாதனையாகும். இங்கிலீஸ் காய்கறி தோழரின் உயிர்த்தியாகம் (2006) 150 தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, போனஸ், 100 கிலோ எடை மூட்டை தடைக்காக ஒரு மாதகால போராட்டம். முதலாளிகள் ஏவிவிட்ட 300 அடியாள்களை நேருக்கு நேர் களத்தில் சந்தித்த பெரும் போராட்டத்தில் அன்புத்தோழர் அன்பழகன் கொலையுண்டார். ரயில்வே கூட்ஸ்ஷெட் நீடித்த வெற்றி (1995 முதல்) ரயில்வே கூட்ஸ்ஷெட் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, ரவுடிகள் ஆதிக்கத்தை முறியடித்தல், ரயில்வே போலீஸ் வழக்குகளை எதிர்கொண்டு போனஸ், ஊதிய ஒப்பந்தம், கூட்ஸ்ஷெட் அடிப்படை வசதிகள் பெற்று இன்றளவும் 200 உறுப்பினர்களுடன் கம்பீரமாகச் செயல்படும் சங்கம். குடோன்கள் ஒன்றிணைந்த போராட்டம் (2006 முதல்) பிரிட்டானியா பிஸ்கட், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் குடோன், தனியார் உரக் குடோன்கள், கூட்டுறவு நிறுவனக் குடோன் என சுமார் 300 பேர் நடத்திய போராட்டம் மகத்தானது. ஊதிய உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பை தொழிலாளர் ஒற்றுமையால் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். வெஸ்ட் பேப்பர் நீதிமன்ற வெற்றி (2007 முதல்) திருச்சி நகரத்தில் ஹார்டுவேர், டைல்ஸ் தொழிலாளர்கள், நாகப்பா கார்ப்பரேஷன், மரம், தட்டு, ஓடு என நூற்றுக்கணக்கான தொழிலாளர் உரிமைப் போராட்டம் பெரும் வெற்றியுடன் தொடர்ந்தது. வெஸ்ட் பேப்பர் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைத்து பல வழக்குகளைச் சந்தித்து இன்றளவும் நீதிமன்ற உத்தரவால் போராட்டம் நடத்தி வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். தொழிலாளர் ஒற்றுமையின் சக்தி(2020) வெங்காய மண்டி தொழிலாளர்கள் 300 பேர் வேறு சங்கமாக இருந்தாலும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அனைத்துப் பகுதியும் வேலை நிறுத்தம் செய்து வேலை பெற்றுத் தந்த மகத்தான சாதனை. வாழ்வாதாரப் பாதுகாப்பு (2010) திருச்சி நகர சுமைப்பணி சங்கத்தில் மோட்டார் பொருத்திய தட்டு ரிக்சாவை அரசு காவல்துறை தடை செய்தபோது 400 தொழிலாளர்களைத் திரட்டி நடத்திய வீரம் செறிந்த போராட்டம். ஆயிரக்கணக்கான மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரப் போராட்டம் இன்றளவும் செங்கொடி இயக்கத்தின் களம் நீண்டுகொண்டே போகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமைத் தொழிலாளர் கணிசமான ஊதியம் பெற்று வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்றால் அது சிஐடியு சங்கத்தின் இடையறாத தலையீடும் போராட்டமும்தான். இந்நிலையில் போராட்டக் களம் பலகண்ட திருச்சி மண்ணில் வருகின்ற செப்டம்பர் 21, 22இல் நடைபெறும் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன 10ஆவது மாநாடு வெல்லட்டும், சிறக்கட்டும்!